எம்.வி. எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீயால் ஏற்பட்ட பாதிப்புக்களை வழங்குங்கள் ! மக்களிடம் கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை வேண்டுகோள் ! - News View

About Us

About Us

Breaking

Thursday, November 4, 2021

எம்.வி. எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீயால் ஏற்பட்ட பாதிப்புக்களை வழங்குங்கள் ! மக்களிடம் கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை வேண்டுகோள் !

(நா.தனுஜா)

எம்.வி. எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீப்பரவல் அனர்த்தத்தினால் சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் பொருளாதார ரீதியில் ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பான முதலாம் கட்ட மதிப்பீட்டு அறிக்கை இம்மாத இறுதியில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், இவ்விபத்து தொடர்பான தகவல்கள் மற்றும் தரவுகளைத் தமக்கு அனுப்பி வைக்குமாறு கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை பொதுமக்களிடம் கோரியுள்ளது.

இலங்கைக் கடற்பரப்பில் எம்.வி. எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீவிபத்திற்கு உள்ளாகி சுமார் ஐந்தரை மாதங்கள் கடந்துள்ள நிலையில், அதனால் சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்புக்களை மதிப்பீடு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இத்தகைய பின்னணியில் சூழலியல் பாதிப்புக்கள் தொடர்பில் பொதுமக்களிடம் தகவல்களைக் கோரும் வகையில் கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது, சிங்கப்பூருக்குச் சொந்தமான எம்.வி. எக்ஸ்பிரஸ் பேர்ள் என்ற கொள்கலன் கப்பல் கடந்த மே மாதம் 20 ஆம் திகதி கொழும்பை அண்மித்த கடற்பரப்பில் தீவிபத்திற்கு உள்ளானது. வரலாற்றைப் பொறுத்தமட்டில் இந்தச் சம்பவம் மிக மோசமான கடல்சார் விபத்தாகப் பதிவாகியுள்ளது.

குறுங்கால மற்றும் நீண்ட கால அடிப்படையில் சூழலியல், சமூக மற்றும் பொருளாதார ரீதியில் பல்வேறு தாக்கங்கள் ஏற்படுவதற்கு இந்த அனர்த்தம் வழிவகுத்தது.

எனவே அக்கப்பலில் ஏற்பட்ட தீப்பரவலால் குறுங்கால, நடுத்தர கால மற்றும் நீண்ட கால ரீதியில் ஏற்பட்டுள்ள மற்றும் ஏற்படக்கூடிய பாதிப்புக்களை உரியவாறு மதிப்பீடு செய்ய வேண்டிய அவசியம் காணப்படுகின்றது.

மிகப்பாரியளவிலான இரசாயனப் பதார்த்தங்கள் அக்கப்பலில் ஏற்றப்பட்டிருந்தமையினால், அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களைக் குறைத்துக் கொள்வதற்காக மிகவும் ஆழமான கண்காணிப்புக்களையும் மதிப்பீடுகளையும் மேற்கொள்ள வேண்டியேற்படலாம்.

மேற்படி அனர்த்தத்தினால் சுற்றுச்சூழல், சமூக மற்றும் பொருளாதார ரீதியிலும் கடற்சூழலியல் ரீதியிலும் ஏற்பட்டிருக்கக் கூடிய பாதிப்புக்கள் தொடர்பில் கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையினால் நியமிக்கப்பட்ட விசேடநிபுணர் குழுவின் ஊடாக ஆராயப்பட்டுவருகின்றன.

கடற்சூழலியல்சார் உயிர்ப்பல்வகைமை, மீன்பிடித்துறையில் ஏற்படக்கூடிய தாக்கங்கள், சமூக மற்றும் பொருளாதார ரீதியான தாக்கங்கள், எண்ணெய் மற்றும் இரசாயனப் பதார்த்தங்களின் கசிவினால் ஏற்படக்கூடிய தாக்கங்கள், கடல்சார் வளங்களில் ஏற்படும் பாதிப்புக்கள், சூழலியல் பாதிப்புக்கள், சுகாதாரத் தாக்கங்கள், நிலைபேறான தன்மை மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளில் ஏற்படக்கூடிய தாக்கங்கள் தொடர்பில் குறித்த விசேடநிபுணர் குழு அதன் மதிப்பீடுகளின்போது கவனம்செலுத்தியுள்ளது.

இந்நிலையில் இப்பாதிப்புக்களுக்குக் காரணமான தரப்பினரிடமிருந்து நட்டஈட்டைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் சட்டமா அதிபரிடம் சமர்ப்பிக்க வேண்டிய மதிப்பீட்டு அறிக்கையைத் தயாரிக்கும் பணிகளில் விசேடநிபுணர் குழு ஈடுபட்டுவருகின்றது.

அவ்வறிக்கையின் பிரகாரம் அனர்த்தத்தின் பின்னரான கண்காணிப்பு மற்றும் மறுசீரமைப்புப் பொறிமுறைகளைத் தயாரிப்பதற்கு கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை திட்டமிட்டிருக்கின்றது.

அதன்படி இம்மாத இறுதியில் முதலாவது மதிப்பீட்டு அறிக்கையைச் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. எம்.வி. எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீப்பரவல் அனர்த்தத்தினால் சுற்றுச் சூழல், சமூகம் மற்றும் பொருளாதார ரீதியில் ஏற்பட்ட பாதிப்புக்களின் நிதிசார் மதிப்பீடு அம்முதலாவது அறிக்கையில் உள்ளடக்கப்படும்.

அனைவரையும் உள்ளடக்கிய செயன்முறையாக இதனை மாற்றியமைக்கும் நோக்கில், சம்பந்தப்பட்ட தரப்பினர் உள்ளடங்கலாக பொதுமக்கள் அனைவரும் எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் அனர்த்தம் தொடர்பில் தம்வசமுள்ள தகவல்கள் மற்றும் தரவுகளை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

அத்தரவுகள் பொதுமக்கள் சார் மதிப்பீட்டிற்காகப் பயன்படுத்தப்படுவதுடன், அவை இம்மாத இறுதியில் சமர்ப்பிக்கப்படவுள்ள முதலாவது மதிப்பீட்டு அறிக்கையிலும் உள்ளடக்கப்படும்.

பொதுமக்களால் அனுப்பி வைக்கப்படும் தரவுகள் எழுத்து மூலமானதாகவோ அல்லது ஒலிப்பதிவு, காணொளிகள், ஆய்வறிக்கைகள் வடிவிலோ அமையலாம் என்று அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதன்படி எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து தொடர்பான தகவல்களைப் பொதுமக்கள் எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்பதாக xppcitizenmepa@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியின் ஊடாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபைக்கு அனுப்பி வைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment