நீங்கள் சப்பாத்துக் கால்களால் மிதிக்கும் வரை இந்த நாட்டில் அமைதி, சமாதானம், நல்லிணக்கம் ஏற்படப்போவதில்லை : எமது மக்கள் இழந்த தமது உறவுகளை நினைவுகூர அனுமதி கொடுங்கள் - பிரதமர் முன்னிலையில் கோரிக்கை விடுத்தார் ஸ்ரீதரன் - News View

Breaking

Wednesday, November 24, 2021

நீங்கள் சப்பாத்துக் கால்களால் மிதிக்கும் வரை இந்த நாட்டில் அமைதி, சமாதானம், நல்லிணக்கம் ஏற்படப்போவதில்லை : எமது மக்கள் இழந்த தமது உறவுகளை நினைவுகூர அனுமதி கொடுங்கள் - பிரதமர் முன்னிலையில் கோரிக்கை விடுத்தார் ஸ்ரீதரன்

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

உயிரிழந்த ஆத்மாக்கள் துயிலும் இல்லங்கள் மீது நீங்கள் சப்பாத்துக் கால்களால் மிதிக்கும் வரை இந்த நாட்டில் அமைதி, சமாதானம், நல்லிணக்கம் ஏற்படப்போவதில்லை. நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டுமென்றால் இனவாதத்தை முதலில் தூக்கி எரிய வேண்டும். எமது மக்கள் இழந்த தமது உறவுகளை நினைவுகூர அனுமதி கொடுங்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட எம்.பியான எஸ்.ஸ்ரீதரன் பிரதமர் முன்னிலையில் கோரிக்கை விடுத்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கான செலவினத்தலைப்புக்கள் மீதான விவாதத்தில் உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், தமிழர்களின் பிரதேசங்களில் யுத்த காலத்தில் தமது உயிர்களை தியாகம் செய்த தமது குழந்தைகள், மாவீரர்களை அந்த மக்கள் நினைவேந்துவர்கள் என்பதற்காக பொலிஸாரும் இராணுவத்தினரும் ஒவ்வொரு மாவீரர் துயிலும் இல்லங்கள் முன்பாகவும் குவிக்கப்பட்டுள்ளார்கள்.

இவ்வாறு செய்வதன் மூலம் தமிழர்களின் மனங்களில் கலாசார ரீதியாக, பண்பாட்டு ரீதியாக அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கின்ற தமது வீரப்புதல்வர்களை மறக்கக்கூடியதொரு சூழல் வருமா? அல்லது சிங்கள மக்கள் இதனை விரும்புகின்றார்களா?

2016, 2017, 2018, 2019 களில் கூட, தற்போதைய ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ 2019 இல் ஜனாதிபதி பதவியேற்றபின்னரும் கூட எமது மக்கள் மிகவும் அமைதியாக மாவீரர் தினத்தை அனுஷ்டித்தார்கள். எந்தவிதமான இடைஞ்சலும் இந்த நாட்டில் ஏற்படவில்லை.

இங்கே பல அமைச்சர்கள் விழாக்களை நடத்துகின்றார்கள். விளையாட்டுப் போட்டிகள் நடக்கின்றன. இதற்கெல்லாம் எந்தக் கொரோனாவும் இல்லை. ஆனால் மாவீரர் துயிலும் இல்லங்களுக்குள் மட்டும்தான் கொரோனா வருமென அந்த இடங்களில் இராணுவம், பொலிஸாரை குவித்து ஒரு அச்சுறுத்தலை, யுத்த பிரேதேசங்கள் போன்று இன்று வடக்கும் கிழக்கும் காணப்படுகின்றன.

தயவுசெய்து இந்த நிலைகளை மாற்றுங்கள், முதலில் புரிந்துணர்வு வேண்டும். நாட்டில் ஒரு இணக்கப்பாடு வேண்டும் என்றால் மக்கள் மனங்களை வெல்ல வேண்டும். தமிழ் மக்களாகிய நாம் பாதிக்கப்பட்டுள்ளோம். நாம் எமது பிள்ளைகளை இழந்துள்ளோம். ஆகவே நாம் எமது பிள்ளைகளை நினைக்கின்ற வணக்க முறைகளை நீங்கள் தடுப்பதன் மூலம் நீங்கள் எதனை அடையப்போகின்றீர்கள்.

அன்புக்குரிய சிங்கள மக்கள் கூட இதனை எதிர்க்கவில்லையே? 2016, 2017, 2018, 2019 ஆண்டுகளில் எங்கேயாவது ஒரு சிங்கள பிரதேசத்திலே மாவீரர் தினத்துக்கு எதிராக சிங்கள மக்கள் யாரும் ஊர்வலம் கூட நடத்த வில்லையே? ஆனால் இந்த நாட்டிலே அரசியல் தேவைக்காக ஜனாதிபதியிலிருந்து அமைச்சர்கள் வரை தமதுஅரசியல் தேவைக்வே இதனை செய்கின்றார்கள் என்ற விடயம் தற்போது தெளிவாகத் தெரிகின்றது. ஆகவே இதிலிருந்து மாறுங்கள்.

மாவீரர்கள் புதைக்கப்பட்டிருக்கும் துயிலுமில்லங்களில் எல்லாம் இராணுவத்தினர் முகாம் அமைத்து சப்பாத்துக் கால்களுடன் பந்து விளையாடுகின்றார்கள். உங்களுடைய ஒரு குழந்தை அல்லது உங்களுடைய ஒரு சிங்கள வீரன் புதைக்கப்பட்ட இடத்தில் தமிழ் இராணுவத்தை சேர்ந்தவர்கள் இவ்வாறு நடந்தால் உங்கள் மனம் என்ன பாடுபடும் என்பதனை நீங்கள் இந்த நாட்டின் தலைவராக, தந்தையாக, இந்த நாட்டிடை சீரமைக்க நினைக்கின்ற ஒரு மனிதனாக நினைத்துப் பாருங்கள்.

இதே நிலையில்தான் இந்த நாட்டில் உள்ள ஏனைய இனங்களின் மன நிலையும் என்பதனை புரிந்து கொண்டால் இந்த நாட்டில் நல்லிணக்கம் என்பது மிக இலகுவாக ஏற்படுத்தக் கூடியது. அமைதி, பொருளாதாரம் என்பனவற்றை இலகுவாக கட்டி வளர்க்கலாம்.

நீதிமன்றம் கட்டளை பிறப்பிக்காமலே பொலிஸார் தடைக்கட்டளைகளை கொண்டு வந்து தருகின்றனர். பருத்தித்துறை. சாவகச்சேரி, மல்லாகம் நீதிமன்றங்கள் பொலிஸாரின் விண்ணப்பங்களை நிராகரித்துள்ளன. ஆகவே நீதிமான் கட்டளை இல்லாமலேயே, நீதிமன்றங்கள் அறிவிக்காமலேயே பொலிஸார் கட்டளைகளை வழங்குகின்றார்கள். கையெழுத்து வாங்குகிறார்கள்.

இந்த நாடு மிக மோசமாகவுள்ளது. நாட்டின் நடவடிக்கைகள் பாதகமான சூழலில் போய்க்கொண்டிருக்கின்றது. தயவு செய்து சிந்தியுங்கள். இந்த நாட்டை அமைதிப்பூங்காவாக்க வேண்டும் என்றால் மாவீரர்களை நினைவு கூருவதற்கு தடையில்லை என்பதனை அறிவியுங்கள்.

நாட்டில் 19 ஆணைக்குழுக்கள் உள்ளன. இந்த ஆணைக்குழுக்களுக்கு எந்தளவு நிதி ஒதுக்கப்படுகின்றது? இந்த ஆணைக்குழுக்கலால் நாட்டிற்கு என்ன பயன்? நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச இங்கு பேசும்போது நாங்கள் வடக்கிற்கு மின்சாரம் அனுப்பினோம் ரயில் அனுப்பினோம் என்று கூறினார். நாம் ஏறுக்கொள்கின்றோம்.

அதேவேளை 30 வருடங்களாக நாம் இவையெல்லாம் இல்லாமல் இருந்தோம் என்பதனை நீங்கள் ஏற்றுக்கொள்கின்ரேர்களா? நாம் பொருளாதார தடைக்குள் வாழ்ந்தோம். யார் இந்த தடையை விதித்தது? பொருட்கள் இல்லாவிட்டாலும் எமது மக்கள் நிம்மதியாக இருந்தார்கள். ஆனால் இப்போது எல்லாமிருந்தாலும் எமது மக்களிடம் நிம்மதி இல்லை.

சுற்றிவர இராணுவம் நிற்கின்றது. பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளன. நீங்கள் உண்மையில் அமைதியை நல்லிணக்கத்தை விரும்பினால் ஏன் விதண்டாவாதமாக இதனை திணிக்கின்றீர்கள்.

சிங்கள மக்களின் அரசியல் வேறு. சிங்கள தலைவர்களின் அரசியல் வேறு. அதுதான் இங்குள்ள பிரச்சினை. இனவாதத்தை தூண்டி அதனூடாகத்தான் நீங்கள் கோலோச்ச வேண்டுமென்றால் அது ஒருபோதும் நடைபெறப் போவதில்லை. நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டுமென்றால் உங்கள் இனவாதத்தை முதலில் தூக்கி வெளியே போடுங்கள்.

எமது மக்கள் இழந்த தமது உறவுகளில் நினைவு கூர அனுமதி கொடுங்கள். இறந்து போன அந்த ஆத்மாக்கள் மேலே நீங்கள் சப்பாத்துக்கால்களால் மிதிக்கும் வரை இந்த நாட்டில் அமைதி, சமாதானம், நல்லிணக்கம் ஏற்படப்போவதில்லை என்றார்.

No comments:

Post a Comment