(எம்.மனோசித்ரா)
கொவிட் தொற்றின் காரணமாக நாட்டு மக்களுக்கு பாரிய நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியேற்பட்டுள்ளது. இந்த நெருக்கடிகளிலிருந்து மக்களை விடுவிக்கும் வகையிலான வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கின்றோம் என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொருளாளர் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார்.
எதிர்வரும் ஓரிரு வாரங்களில் மக்கள் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை இல்லாமலாக்கப்படும். எனினும் இதனால் மக்கள் தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடிகள் கவலையளிப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார்.
பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் , ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட முக்கியஸ்தர்களுக்கும் இடையில் சு.க. தலைமையகத்தில் விசேட சந்திப்பொன்று வியாழக்கிழமை (11) இடம்பெற்றது. இந்த சந்திப்பு நிறைவடைந்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே லசந்த அழகியவண்ண இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், அரசியல் கட்சிகள் பலவற்றுடன் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டது. கொவிட் தொற்று நிலைமையின் காரணமாக சுதந்திர கட்சியின் மறுசீரமைப்பு வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடியாமல் போனது.
எனவே தற்போது மாவட்ட அடிப்படையில் கட்சியின் மறுசீரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு, கூட்டமைப்பாக அரசியல் செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கான வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அடுத்த கட்ட பேச்சுவார்த்தையின் போது எவ்வாறு கூட்டமைப்பாக செயற்படுவது என்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்படும்.
கொவிட் தொற்றின் காரணமாக நாட்டு மக்களுக்கு பாரிய நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியேற்பட்டுள்ளது. இந்த நெருக்கடிகளிலிருந்து மக்களை விடுவிக்கும் வகையிலான வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கின்றோம். வாழ்க்கை செலவு தொடர்பில் பாரிய பிரச்சினை காணப்படுகிறது. இதனை சீர் செய்வதற்காக சிறந்த முறையில் நாம் செயற்படுவோம்.
எதிர்வரும் ஓரிரு வாரங்களில் மக்கள் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை இல்லாமலாக்கப்படும். எனினும் இதனால் மக்கள் தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடிகள் கவலையளிக்கின்றன.
எனவேதான் வெவ்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து இந்த பிரச்சினைக்கு தீர்வினைக் காண முயற்சிக்கின்றோம். உலகில் எந்தவொரு நாட்டிலும் தற்போது பொருட்களுக்கு நிர்ணய விலை விதிக்கப்படவில்லை. அதற்கமையவே இலங்கையிலும் முன்னெடுக்கப்படுகிறது என்றார்.
No comments:
Post a Comment