எம்.மனோசித்ரா
அரசாங்கம் சமர்ப்பிக்கவுள்ள 2022 நிதியாண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் ஏதேனும் சலுகைகள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் மக்கள் காத்திருக்கின்றனர். ஆனால் மாயை பேச்சுக்களை உள்ளடக்கியதாகவே வரவு செலவுத் திட்ட அறிக்கை அமையப் போகிறது. இதற்கு எதிராக நாடளாவிய ரீதியில் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன தெரிவித்தார்.
கட்சி உறுப்பினர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அரசாங்கம் நாளை (இன்று) சமர்ப்பிக்கவுள்ள 2022 நிதியாண்டுக்கான வரவு செலவு திட்டமானது நாட்டின் பிரச்சினைகள் மற்றும் கொவிட் தொற்று தொடர்பான புலம்பல்களுமே உள்ளடக்கப்பட்டுள்ளன. இதனை ஆளும் கட்சி உறுப்பினர்களே அவர்களின் நெருங்கிய சகாக்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
ஏதேனும் சலுகைகள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் மக்கள் காத்திருக்கின்றனர். ஆனால் மாயை பேச்சுக்களை உள்ளடக்கியதாகவே வரவு செலவு திட்ட அறிக்கை அமையப் போகிறது. இதற்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சி நாடளாவிய ரீதியில் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளது.
இதன் முதற்கட்டமாக இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 4 மணிக்கு கொழும்பு லிப்டன் சுற்று வட்டத்தில் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம்.
அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் மற்றும் வாழ்க்கை செலவு அதிகரிப்பு என்பவற்றை மையப்படுத்தியே இந்த எதிர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. நாளை சனிக்கிழமை (13) கம்பஹா நகரிலும் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கு அரசாங்கம் முன்வைக்கப்போகும் திட்டம் எது என்பதை அவதானத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம். அதன் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து தெளிவுபடுத்துவோம் என பிரதி தலைவர் ருவன் விஜேவர்தன மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment