“தேசிய பாதுகாப்பு கல்லூரி” ஜனாதிபதி கோட்டாபயவினால் திறந்து வைப்பு : முதலாவதும் உயர் தரத்திலானதுமான கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் - News View

About Us

About Us

Breaking

Thursday, November 11, 2021

“தேசிய பாதுகாப்பு கல்லூரி” ஜனாதிபதி கோட்டாபயவினால் திறந்து வைப்பு : முதலாவதும் உயர் தரத்திலானதுமான கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்

“தேசிய பாதுகாப்பு கல்லூரி”, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால், இன்றையதினம் (11) நாட்டுக்கு அன்பளிப்புச் செய்யப்பட்டது.

முப்படையினர், பொலிஸார் மற்றும் அரச துறையில் உயர் பதவி நிலைகளை வகிக்கும் நிறைவேற்று அதிகாரிகளுக்கு, தேசிய பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட கல்விக்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கத்தில் இந்நாட்டில் ஸ்தாபிக்கப்பட்ட முதலாவதும் உயர் தரத்திலானதுமான கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமாக இது காணப்படுகின்றது. 

தேசிய தேவைகளை உறுதிப்படுத்துவதற்கான தேசிய பாதுகாப்பு, இராஜதந்திர முறைமை மற்றும் அரச கொள்கைப் பிரிவுகளின் தந்திரரோபாயச் சிந்தனையாளர்கள் மற்றும் தலைவர்களை உருவாக்குவதே இந்தத் தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் நோக்கமாகும்.

கொழும்பு - 03, காலி வீதியில் அமைந்துள்ள பாதுகாப்பு அமைச்சுக்கு உரித்தான நீண்ட வரலாற்றைக் கொண்ட “மும்தாஜ் மஹால்” கட்டிடத்திலேயே, தேசிய பாதுகாப்புக் கல்லூரி அமையப் பெற்றுள்ளது. 
இதன் தலைமை அலுவலகத்தைத் திறந்து வைத்த ஜனாதிபதி, கல்லூரியின் வசதிகள் தொடர்பில் கண்காணித்தார். பின்னர், தேசிய பாதுகாப்பு கல்லூரியின் உத்தியோகபூர்வ இணையத்தளமும் ஜனாதிபதியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கொழும்பு பல்கலைக்கழகம், சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகம், அவுஸ்திரேலிய பாதுகாப்பு பயிற்சிக் கல்லூரி, அமெரிக்கா மற்றும் பாக்கிஸ்தான் போன்ற நாடுகளின் விசேட நிபுணர்களே இதன் பாடவிதான பரிந்துரைக் குழுவின் உறுப்பினர்களாக காணப்படுகின்றனர். 

சீன அரசாங்கத்தால் முழுமையானளவிலான கேட்போர்கூடம் ஒன்றையும் பாக்கிஸ்தான் அரசாங்கத்தினால் நூலகம் ஒன்றையும் நிர்மாணிப்பதற்கான பங்களிப்பு பெற்றுக் கொடுத்துள்ளதுடன், நூலகத்துக்கான புத்தகங்களை வழங்க அவுஸ்திரேலிய அரசாங்கமும் முப்படையினரும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதன் முதலாவது பாடநெறி, நாளை முதல் 2022 ஓகஸ்ட் மாதம் வரையான 10 மாதக் காலப் பகுதிக்கு நடத்தப்பட உள்ளது. இதற்காக, முப்படை அதிகாரிகள் 27 பேர் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் 04பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். 
இலங்கையில் தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் உருவாக்கம் நீண்ட காலத் தேவைகளில் ஒன்றாக நிறைவேற்றப்பட்டுள்ளதென்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, உரையாற்றிய இந்நிகழ்வில் தெரிவித்தார்.

சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளுக்கு மூலோபாயம் கல்வி வாய்ப்பைப் பெற்றுக் கொடுப்பதற்காக, வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களில் வாய்ப்புகளைத் தேடுவதைத் தவிர வேறு வாய்ப்புகள் காணப்படவில்லை. ஒவ்வொரு வருடமும் நட்புறவு நாடுகள் வழங்கும் பாடநெறிகளுக்கு எமது அதிகாரிகளில் சிலர் உள்ளீர்க்கப்படுவது, பாரிய பிரதிபலன்களைக் கொடுப்பினும், மேலும் பலருக்கு அந்த வாய்ப்புகள் இல்லாது போவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

அதனால், இந்த பாதுகாப்புக் கல்லூரி நிறுவப்பட்டதன் மூலம், ஒவ்வொரு ஆண்டும் அவ்வாறான அனுபவங்களைப் பெற்றுக் கொள்ளும் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். 

இந்தப் பாடநெறியைத் தொடரும் அதிகாரிகளுக்கு, சிரேஷ்ட கட்டளையிடும் தளபதி பதவிகளை வகிக்கவும் இராணுவ தளபதி பதவியை வகிக்கவும் சந்தர்ப்பம் கிட்டுமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன, தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள், முப்படைத் தளபதிகள், பொலிஸ்மா அதிபர், பல்கலைக்கழக வேந்தர்கள் மற்றும் உபவேந்தர்கள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

No comments:

Post a Comment