சம்பந்தன் - ஹக்கீம் - மனோ நேரடி கலந்துரையாடல் : கூட்டமைப்பு தலைவரின் கொழும்பு இல்லத்தில் நிகழ்ந்தது - News View

Breaking

Friday, November 5, 2021

சம்பந்தன் - ஹக்கீம் - மனோ நேரடி கலந்துரையாடல் : கூட்டமைப்பு தலைவரின் கொழும்பு இல்லத்தில் நிகழ்ந்தது

தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா சம்பந்தன், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் ஆகியோர் இடையே நேரடி கலந்துரையாடல், கூட்டமைப்பு தலைவரின் கொழும்பு இல்லத்தில் நடந்தது.

இதன்போது, கடந்த 2ம் திகதி யாழ்ப்பாணத்தில் நடந்த தமிழ், முஸ்லிம் கட்சிகளின் உரையாடல் தொடர்பாக ஹக்கீமும், மனோவும், கூட்டமைப்பு தலைவருக்கு எடுத்து கூறினர். இதில் வடக்கு கிழக்கின் முன்னணி கட்சியான தமிழரசு கட்சியும், சிரேஷ்ட தலைவராக சம்பந்தனும் கலந்துகொள்வதை தாம் விரும்புவதாக மனோ, ஹக்கீம் இருவரும் வலியுறுத்தி கூறினர்.

சினேகபூர்வமாக நடைபெற்ற இந்த உரையாடலில், தமிழ், முஸ்லிம் கட்சிகளின் மத்தியில் பொதுவான ஒரு தளம் ஏற்படுவதன் அவசியத்தை ஏற்றுக்கொண்ட சம்பந்தன் மேலும் கூறியதாவது,

ஜேஆர்-தமிழ் கட்சிகளின் பெங்களூர் பேச்சுகள், திம்பு பேச்சுகள், இந்திரா காந்தியுடன் தமிழ் கட்சிகளின் பேச்சு, ராஜீவ் காந்தியுடன் பேச்சு, இவற்றின் பின்தான் 13ம் திருத்தம் இலங்கை அரசியலமைப்பில் நுழைந்தது.

இடையில் ஒருமுறை மஹிந்த ஆட்சி, 13ம் திருத்தம் உள்ளிட்ட மாகாணசபைகளையே அரசியலமைப்பிலிருந்து தன்னிச்சையாக அகற்ற முயன்றது. அதன் போது நான் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்திய பிரதமரிடம் முறையிட்டேன். உடனடியாக சில மணித்தியாலங்களில் இந்திய பிரதமரின் விசேட தூதர் விசேட விமானத்தில் கொழும்பு வந்து, அந்த முயற்சியை, பாரிய எதிர்விளைவுகள் ஏற்படும் என கூறி தடுத்து நிறுத்தினார். அதுவே இந்தியாவின் பாத்திரம்.

13ம் திருத்தம்தான் இந்நாட்டு அரசியலமைப்பில் இடம்பெற்ற ஒரே அதிகார பரவலாக்கல் சட்டம். ஆனால், 13ம் திருத்தம் முடிவல்ல, ஆரம்பம். அது தீர்வல்ல. அது ஒரு அஸ்திவாரம். அதிலிருந்து கட்டிடம் கட்டப்பட வேண்டும்.

ஈழத்தமிழர், முஸ்லிம்கள், மலையகத்தமிழர் ஆகிய எல்லோரும் சிங்களவர்களுடன் சேர்ந்து தாம் இலங்கையர் என உணரும் அடிப்படையில், அனைவரும் ஏற்றுக்கொள்ளும் முறையில் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும்.

தீர்வை நோக்கிய பயணத்தில் தமிழ் பேசும் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகள் மத்தியில் ஒற்றுமை வேண்டும். அந்த ஒற்றுமை முயற்சியை அகில இலங்கை தமிழரசு கட்சி ஒருபோதும் குழப்பாது. நாங்களும் கலந்து பேசத்தான் வேண்டும். கலந்து பங்களித்து ஒற்றுமையை மேலும் பலப்படுத்தத்தான் வேண்டும்.

தமிழ் கட்சிகளின் பேச்சுவார்த்தை தளத்தில் நாம் எப்படி இணைந்து கொள்வது என்பது தொடர்பில் எதிர்வரும் வாரத்தில் பாராளுமன்றம் கூடும்போது, நமது கட்சி எம்பீக்களுடன் கலந்து பேசி உங்களுக்கு அறிவிக்கிறேன்.

No comments:

Post a Comment