பாராளுமன்ற வளாக பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்த உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பாதுகாப்பு உபகரணத் தொகுதிகள் சபாநாயகரிடம் கையளிப்பு - News View

About Us

About Us

Breaking

Friday, November 26, 2021

பாராளுமன்ற வளாக பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்த உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பாதுகாப்பு உபகரணத் தொகுதிகள் சபாநாயகரிடம் கையளிப்பு

(எம்.மனோசித்ரா)

பாராளுமன்ற வளாகத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேலும் உறுதிப்படுத்தும் நோக்கில் பாதுகாப்பு அமைச்சின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையத்தின் ஊடாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பாதுகாப்பு உபகணரத் தொகுதிகள் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்தவினால் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கையளிக்கப்பட்டன.

வான் பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதிப்படுத்துவதற்குப் பயன்படுத்தப்படும் ட்ரோன் எதிர்ப்புக் கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பாடல் சாதனங்கள் போன்றவை இத்தொகுதியில் அடங்குகின்றன.

பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக, படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாந்து, விமானப் படையின் பிரதம அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் பிரசன்ன பாயோ, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ரேனுக ரொவல், பிரதிப் பணிப்பாளர் நாயகம் கெப்டன் ரி.டி.எஸ்.டி.சில்வா மற்றும் பாராளுமன்ற பொலிஸ் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மஞ்சுள செனரத் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்த உபகரணத் தொகுதியை இறக்குமதி செய்வதாகவிருந்தால் சுமார் 19 மில்லியன் ரூபா நிதியைச் செலவுசெய்ய வேண்டியிருக்கும்.

எனினும் பாதுகாப்பு அமைச்சின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையத்தின் மூலம் உள்நாட்டில் இவற்றை உற்பத்தி செய்ததன் ஊடாக சுமார் 7 மில்லியன் ரூபா மாத்திரமே செலவு செய்யப்பட்டுள்ளது என்றும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்த உபகரணத் தொகுதியை வழங்கியமை தொடர்பில் சபாநாயகர் மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் ஆகியோர் பாதுகாப்பு அமைச்சுக்கு நன்றியைத் தெரிவித்தனர்.

பாதுகாப்புப் படையினருக்கும் ஏனைய உள்நாட்டுத் தேவைகளுக்கும் ஏற்ற அதிநவீன உபகரணங்களைத் தயாரித்து அதன்மூலம் தேசிய வளத்தைப் பாதுகாக்கும் திறன் படையினருக்கு இருப்பதாக இங்கு கருத்துத் தெரிவித்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.

இலங்கைப் பாராளுமன்றத்தின் வரலாற்றில் முதற் தடவையாக 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் அனைத்துப் பாதுகாப்புத் தரப்பினரதும் பங்கேற்புடன் நடைபெற்ற கூட்டுப் பாதுகாப்புப் பயிற்சியின் போது அடையாளம் காணப்பட்ட பாதுகாப்புத் தேவைக்கு இணங்க இந்த உபகரணத் தொகுதி கையளிக்கப்பட்டிருப்பதாக படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாந்து தெரிவித்தார்.

No comments:

Post a Comment