நாட்டு மக்களின் மனதிலிருந்த விடயங்களை வெளிப்படையாகப் பேசிய அருட்தந்தை சிறில் காமினிக்கு நாம் முழு ஆதரவை வழங்குவோம் - எதிர்க்கட்சித் தலைவர் சஜித் - News View

Breaking

Thursday, November 4, 2021

நாட்டு மக்களின் மனதிலிருந்த விடயங்களை வெளிப்படையாகப் பேசிய அருட்தந்தை சிறில் காமினிக்கு நாம் முழு ஆதரவை வழங்குவோம் - எதிர்க்கட்சித் தலைவர் சஜித்

(நா.தனுஜா)

அரசாங்கம் நாட்டிலுள்ள கத்தோலிக்க மதத் தலைவர்களை இலக்கு வைத்து பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுக்க ஆரம்பித்துள்ளது. குறிப்பாக நீதிமன்றத்திற்கும் குற்ற விசாரணைப் பிரிவிற்கும் அலைந்து களைப்படைய வேண்டிய அவசியம் அருட்தந்தை சிறில் காமினிக்கு இல்லை. நாட்டு மக்கள் அனைவரினதும் மனதிலிருந்த விடயங்களை வெளிப்படையாகப் பேசியதைத் தவிர அவர் எந்தவொரு குற்றமும் இழைக்கவில்லை. எனவே நாம் அவருக்கு முழுமையான ஆதரவை வழங்குவோம் என்று தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, நாட்டு மக்கள் அனைவரும் அவருக்கு ஆதரவாகக் குரல் கொடுக்க வேண்டும் என்றும் அறைகூவல் விடுத்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உப தலைவர் கபீர் ஹாசீமின் தலைமையில் கேகாலையில் நேற்று புதன்கிழமை மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது, இந்நாட்டில் மக்களை முன்னிறுத்தி செயற்படும் அரசாங்கத்தை ஸ்தாபிக்க வேண்டிய காலம் தற்போது தோற்றம் பெற்றுள்ளது. தாம் இழைத்த தவறைத் தற்போது உணர்ந்து கொண்டிருப்பதாகவும் பொது இடங்களில் சுவரோவியங்களை வரைந்த இளைஞர், யுவதிகள் இப்போது வெளிநாடுகளுக்குச் செல்வதற்குக் காத்திருப்பதாகவும் அரசாங்கத்தின் பிரதிநிதிகள் கூறுகின்றார்கள். அவ்வாறெனில், இவ்வளவு காலமும் அவர்கள் கனவு கண்டுகொண்டிருந்தார்களா? என்று கேள்வியெழுப்ப விரும்புகின்றேன்.

நாட்டின் தேசிய வளங்கள் வெளிநாடுகளுக்கு வழங்கப்பட்ட போதும் தேசிய சொத்துக்களின் பங்குகளை வெளிநாட்டிற்கு விற்பனை செய்வதற்கான யோசனை அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட போதும் அவர்கள் அரசாங்கத்தில் அல்லவா அங்கம் வகித்தார்கள்? ஆனால் இப்போது மக்களை ஏமாற்றுவதற்காகப் பொய்யாக நாடகமாடுகின்றார்கள்.

அரசாங்கத்திற்கு எதிரானவர்களும் அதன் செயற்பாடுகளை விமர்சிப்பவர்களும் அரசாங்கத்திற்குள்ளேயே இருப்பதாகக் கூறுகின்றார்கள். எனினும் தைரியமிருந்தால் அரசாங்கத்தை விட்டு வெளியேறி, எம்முடன் இணைந்து பொதுமக்களின் நலன்களை வென்றெடுப்பதற்காக வீதிகளில் இறங்கிப் போராடுமாறு அவர்களுக்கு அழைப்பு விடுக்கின்றோம்.

அதேவேளை தற்போது அரசாங்கம் நாட்டிலுள்ள கத்தோலிக்க மதத் தலைவர்களை இலக்கு வைத்து பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுக்க ஆரம்பித்துள்ளது. குறிப்பாக அருட்தந்தை சிறில் காமினிக்கு இந்நாட்டுப் பிரஜைகள் அனைவரும் ஆதரவை வழங்கி, அவருடன் ஒருமித்து நிற்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்.

நீதிமன்றத்திற்கும் குற்ற விசாரணைப் பிரிவிற்கும் அலைந்து களைப்படைய வேண்டிய அவசியம் அருட்தந்தை சிறில் காமினிக்கு இல்லை. நாட்டு மக்கள் அனைவரினதும் மனதிலிருந்த விடயங்களை வெளிப்படையாகப் பேசியதைத் தவிர அவர் எந்தவொரு குற்றமும் இழைக்கவில்லை.

எனவே நாம் அவருக்கு ஆதரவு வழங்குவதுடன் அவருடனான ஒருமைப்பாட்டை வெளிப்படுத்துமாறு நாட்டு மக்களுக்கும் அழைப்பு விடுக்கின்றோம் என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment