குறிஞ்சாக்கேணி பாதை சேவையை அரசு செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை இதுவே அனர்த்தத்துக்கு காரணம், இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா பிரச்சினையை திசை திருப்புகின்றார் - இம்ரான் எம்.பி - News View

Breaking

Thursday, November 25, 2021

குறிஞ்சாக்கேணி பாதை சேவையை அரசு செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை இதுவே அனர்த்தத்துக்கு காரணம், இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா பிரச்சினையை திசை திருப்புகின்றார் - இம்ரான் எம்.பி

குறிஞ்சாக்கேணி பாதை சேவையை அரசு செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை. அரசு தனது பொறுப்பை தட்டிக்கழித்தது. இதுவே அனர்த்தத்துக்கு காரணம். இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா இப்பிரச்சினையை திசை திருப்புகின்றார் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.

குறிஞ்சாக்கேணி பாலம் பொதுமக்கள் போக்கு வரத்துக்கு தடை செய்யப்பட்டு சுமார் 9 மாதங்களாகின்றது. எனினும், இந்த மக்களுக்கான மாற்று போக்கு வரத்து ஏற்பாடுகளை அரசு இதுவரை செய்யவில்லை. மக்கள் படும் கஷ்டங்களைப் போக்க பிரதேச சபை, நகர சபை தவிசாளர்கள் துணை செய்தார்கள். இது தவறென்றால் இரண்டு தவிசாளர்களுக்குமெதிராக நடவடிக்கை எடுங்கள்.

குறிஞ்சாக்கேணிப்பாலம் மாற்றுப் போக்கு வரத்து ஏற்பாடின்றி மூடப்பட்டதால் பொதுமக்கள் பல்வேறு கஷ்டங்களை எதிர்நோக்கி வந்தனர். மக்கள் எதிர்நோக்கும் இந்தக் கஷ்டங்களைப் போக்க கிண்ணியா பிரதேச சபைத் தவிசாளர் முதலாவது பாதைச் சேவைக்கு உறுதுணையாக இருந்து நடவடிக்கை எடுத்தார்.

நாளாந்தம் ஆயிரக்கான பொதுமக்களும், நூற்றுக்கணக்கான மாணவர்களும் இதனூடாகப் பயணஞ் செய்வதால் இன்னொரு பாதைச் சேவை அவசியப்பட்டது. இதனைக் கருத்தில் கொண்டு நகர சபைத் தவிசாளரின் அனுமதியுடன் மற்றுமொரு பாதைச் சேவை ஆரம்பிக்கப்பட்டது.

பொதுமக்களுக்கு போக்கு வரத்து வசதியை ஏற்படுத்திக் கொடுக்கும் பொறுப்பை அரசாங்கம் செய்திருக்க வேண்டும். இந்தப் பொறுப்பை அரசாங்கம் செய்யாததால் பொதுமக்கள் அனுபவிக்கும் கஷ்டங்களை கருத்தில் கொண்டு இந்த இரு தவிசாளர்களும் தற்காலிக பாதை ஏற்பாட்டுக்கு துணை நின்றார்கள்.

இது தவறென்றால் அரசாங்கம் இந்த தவிசாளர்களுக்கெதிராக நடவடிக்கை எடுக்கட்டும். நகர சபை தவிசாளர் எனது உறவினர் என்பதற்காக இந்த விசாரணைகளுக்கு குறுக்கே நான் நிற்கப்போவதில்லை என்பதை பகிரங்கமாக கூறிக் கொள்ள விரும்புகின்றேன்.

எனினும். பிரதேச சபைத் தவிசாளர் முஸ்லிம் காங்கிரசைச் சேர்ந்தவர் என்பதால் அவர் ஆரம்பித்த பாதை சேவை குறித்து இங்கு மறைக்கப்படுவதை அல்லது பேசாமல் விடப்படுவதை அனுமதிக்க முடியாது. விசாரணை நியாயமாக இருக்க வேண்டும்.

பொதுமக்கள் பயன்படுத்தும் ஒரு வீதியோ அல்லது பாலமோ புனரமைக்கப்படுமாயின் அதற்கான மாற்று வீதியை அமைத்துக் கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

இந்தப் பொறுப்பை அரசாங்கமோ அல்லது இந்தப் பால வேலையை ஆரம்பித்த மக்கள் பிரதிநிதியோ இதுவரை செய்யவில்லை.

எனக்கு தெரிந்த வரை இலங்கையில் மாற்று வீதி அமைக்கப்படாமல் புனரமைக்கப்படுகின்ற ஒரே பாலம் குறிஞ்சாக்கேணிப் பாலம்தான். கிண்ணியா மக்கள் இந்த அரசுக்கு குறைந்தளவே வாக்களித்தார்கள் என்பதற்காக அரசு கிண்ணியா மக்களை சிரமப்படுத்துவதற்காகவே இவ்வாறு செயற்பட்டது என்பதுதான் பகிரங்க உண்மை.

இது குறித்து 4 மாதங்களுக்கு முன் நான் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய போது இந்தப் பாலத்துக்கு அடிக்கல் நாட்டியவருள் ஒருவரான பிரதியமைச்சர் நிமல் லான்சா கேலியாகப் பதிலளித்தார். இலவசப் பாதை சேவை ஆரம்பிக்கப்படும் என்று கூறினார். எனினும், அரசு இதனைக்கூட இதுவரை செய்யவில்லை.

அரசு இந்தப் பொறுப்பை செய்திருந்தால் பிரதேச சபை, நகர சபை தவிசாளர்கள் இதில் தலையிட வேண்டிய எந்தத் தேவையும் வந்திருக்காது. இந்த அனர்த்தத்தைப் பற்றி பேச வேண்டிய தேவையும் எழுந்திருக்காது.

அமைச்சர் நிமல் லான்சா சொல்வதைப்போல எனக்கும் இந்த தற்காலிக பாதைச் சேவைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. முடிந்தால் அவர் நிரூபித்துக் காட்டட்டும். அவர் விட்ட பிழையை மறைக்க மற்றையோர் மீது குற்றம் சாட்டி தப்பிக்கும் வழிமுறையை அவர் கையாள்கிறார்.

அவர் உண்மையாக மக்கள் மீது அபிமானம் கொண்டவராக இருந்திருந்தால் நான்கு மாதங்களுக்கு முன் இந்தப் பிரச்சினையை பாராளுமன்றத்தில் எழுப்பிய போது கெலியாக அதனை அவர் எடுத்திருக்க மாட்டார். மாற்றுப் போக்கு வரத்து ஏற்பாடுகளைச் செய்து கொடுத்திருப்பார். இது தான் உண்மை.

எனவே, ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பயணஞ்செய்த ஒரு பாலத்தை மாற்று ஏற்பாடு இல்லாமல் மூடிய அரசுக்கெதிராக விசாரணை செய்ய வேண்டுமா? பொதுமக்கள் படும் இன்னல்களைப் போக்க கவனம் எடுத்த கிண்ணியா பிரதேச சபை மற்றும் நகர சபைத் தவிசாளர்களுக்கு எதிராக விசாரணை செய்ய வேண்டுமா என்பதைக் கேட்க விரும்புகின்றேன் என இம்ரான் எம்.பி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment