யுகதனவி மின் உற்பத்தி நிலைய மனுக்களை விசாரிக்க ஐவரடங்கிய நீதியரசர் குழு நியமனம் : அமைச்சர்களான விமல், வாசுதேவ, கம்மன்பில ஆகியோர் சார்பில் சட்டமா அதிபர் ஆஜராகமாட்டார் - News View

About Us

About Us

Breaking

Thursday, November 25, 2021

யுகதனவி மின் உற்பத்தி நிலைய மனுக்களை விசாரிக்க ஐவரடங்கிய நீதியரசர் குழு நியமனம் : அமைச்சர்களான விமல், வாசுதேவ, கம்மன்பில ஆகியோர் சார்பில் சட்டமா அதிபர் ஆஜராகமாட்டார்

கெரவலப்பிட்டி யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் எரிவாயு விநியோக ஏகபோக உரிமையை அமெரிக்க நிறுவனத்திற்கு மாற்றுதல் மற்றும் மின் நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனமொன்றிற்கு வழங்குவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுக்களை பரிசீலிக்க ஐந்து பேர் கொண்ட உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் நியமிக்கப்பட்டுள்ளது.

இன்று (26) குறித்த மனுக்கள், முர்து பெனாண்டோ, காமினி அமரசேகர, அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கெரவலப்பிட்டி மின் உற்பத்தி நிலையத்தின் அரசாங்கத்திற்கு சொந்தமான பங்குகளில் 40% பங்குகளை அமெரிக்க நிறுவனமொன்றுக்கு வழங்குவதற்கான அரசின் தீர்மானத்தை வலுவிழக்கச் செய்யுமாறு கோரி, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி, கர்தினால் மெல்கம் ரஞ்சித், எல்லே குணவன்ச தேரர், ஜே.வி.பியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சுனில் ஹந்துன்நெத்தி, வசந்த சமரசிங்க உள்ளிட்டோர் அடிப்படை உரிமை மனுக்களை தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, தாக்கல் செய்யப்பட்டுள்ள குறித்த மனுக்களை, பூரண நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரிக்குமாறு உச்ச நீதிமன்றத்திடம் சட்ட =மா அதிபர் அண்மையில் கோரிக்கை விடுத்தமைக்கு அமைய, ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் நியமிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய குறித்த மனுக்களை, பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, நீதியரசர்களான புவனேக அலுவிஹாரே, பிரியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட, எல்.டி.பி. தெஹிதெனிய ஆகிய ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் எதிர்வரும் திங்கட்கிழமை (29) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

இந்த மனுக்களில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அமைச்சரவை உறுப்பினர்கள் சார்பில் சட்டமா அதிபர் ஆஜராகியிருந்தார்.

அமைச்சர்களான விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில ஆகிய அமைச்சர்கள் சார்பில் தனிப்பட்ட சட்டத்தரணியான ஜனாதிபதி சட்டத்தரணி உதித இஹலஹேவா ஆஜராகியுள்ளதால், அவர்கள் சார்பில் சட்டமா அதிபர் ஆஜராகமாட்டார்.

இம்மனுவின் பிரதிவாதிகளாக ​​பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அமைச்சரவை உறுப்பினர்கள், யுகதனவி அனல் மின்நிலையத்தின் உரிமை கொண்ட West Coast Power நிறுவனம், குறித்த மின் நிலைய பங்குகளை கொள்வனவு செய்த அமெரிக்க நிறுவனமான New Fortress Energy நிறுவுனம், சட்டமா அதிபர் உள்ளிட்டோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

கெரவலப்பிட்டி யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் இலங்கை அரசாங்கத்திற்கு சொந்தமான 40% பங்குகளை பிரதிவாதியான அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்க அமைச்சரவையின் தீர்மானம் நியாயமானதல்ல என மனுதாரர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

பொறுப்பான அமைச்சரவை அந்த முடிவை எடுப்பதற்கு முன்னர் தேசிய பொருளாதாரம் மற்றும் தேசிய பாதுகாப்பு போன்ற விடயங்களில் கவனம் செலுத்த தவறியுள்ளதாகவும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இலங்கையில் எரிவாயு உற்பத்தியின் ஏகபோக உரிமையானது உரிய பங்கு பரிமாற்ற நடவடிக்கையின் மூலம் பிரதிவாதியான அமெரிக்க நிறுவனத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், இந்தப் பங்குகளை வழங்குவதில் முறையான விலைமனு கோரல் நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை எனவும், இதனால் குறித்த பங்குப் பரிமாற்ற நடவடிக்கையின் வெளிப்படைத்தன்மை தொடர்பிலும் பாரிய பிரச்சினைகளை எழுவதாகவும் மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனவே, எந்த ஒரு நியாயமான ஆய்வும் இன்றி உரிய பங்குகளை மாற்றுவதற்கு அமைச்சரவை அமைச்சர்கள் எடுத்த முடிவு நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக தீர்ப்பளிக்க வேண்டுமென உச்சநீதிமன்றத்திடம் மனுதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன், யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் அரசாங்கத்தின் பங்குகளை மாற்றுவதற்கு அமைச்சரவை எடுத்த தீர்மானத்தை இரத்துச் செய்யும் உத்தரவையும் பிறப்பிக்குமாறும் உச்ச நீதிமன்றத்திடம் மனுதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment