சட்டம் அமைக்கும் அதிகாரம் ஜனாதிபதி செயலணிக்கு இல்லை, பாராளுமன்றத்துக்கே பொறுப்புள்ளது - ருவன் விஜேவர்த்தன - News View

About Us

About Us

Breaking

Wednesday, November 3, 2021

சட்டம் அமைக்கும் அதிகாரம் ஜனாதிபதி செயலணிக்கு இல்லை, பாராளுமன்றத்துக்கே பொறுப்புள்ளது - ருவன் விஜேவர்த்தன

(எம்.ஆர்.எம்.வசீம்)

ஒரு நாடு ஒரு சட்டம் தொடர்பான சட்டம் அமைப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதி செயலணிக்கு இல்லை. அதற்கான சட்ட திட்டங்களை அமைக்கும் பொறுப்பு பாராளுமன்றத்துக்கே இருக்கின்றது என ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்த்தன தெரிவித்தார்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கலைஞர்களை கெளரவிக்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (2) மாலை ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெற்றது. இதில் அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், அரசாங்கம் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியும் சமூகங்களுக்கிடையில் பிளவு மற்றும் இன முரண்பாடுகளை ஏற்படுத்தியே ஆட்சிக்கு வந்தது. தற்போதும் அதனையே மேற்கொள்கின்றது. ஒரு நாடு ஒரு சட்டம் தொடர்பாக ஜனாதிபதி செயலணியின் தலைவராக பொதுபலசேனாவின் செயலாளர் ஞானசார தேரர் நியமிக்கப்பட்டிருப்பது அதற்கு சிறந்த உதாரணமாகும்.

அத்துடன் இந்த செயலாணியின் தலைவரான ஞானசார தேரர் நீதிமன்றத்தினால் குற்றம் சுமத்தப்பட்டவர், அதேபோன்று முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக வெறுப்பூட்டு பிரசாரங்களை மேற்கொண்டு நாட்டில் இன முரண்பாடுகளை தூண்ட காரணமாக இருந்தவர்.

தற்போது முஸ்லிம் சமூகத்துக்கு மாத்திரமல்ல தமிழ் சமூகத்தையும் அவமதித்திருக்கின்றது. அதாவது ஒரு நாடு ஒரு சட்டம் தொடர்பாக ஜனாதிபதி செயலணியில் தமிழ் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்த எவரும் நியமிக்கப்படாமல் இருக்கின்றது. இதுதான் இந்த அரசாங்கத்தின் கொள்கையாகும்.

ஜனாதிபதியின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கமையவே ஒரு நாடு ஒரு சட்டம் தொடர்பாக ஜனாதிபதி செயலணி அமைக்கப்பட்டு அதற்கு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். ஜனாதிபதியின் இந்த நடவடிக்கையால் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்துக்கு பதிலாக முரண்பாடுகளே அதிகரிக்கும்.

அத்துடன் ஒரு நாடு ஒரு சட்டம் தொடர்பாக சட்டம் அமைக்கும் அதிகாரம் இருப்பது ஜனாதிபதி செயலணிக்கு அல்ல. மாறாக பாராளுமன்றத்துக்காகும். நாட்டில் சட்டம் அமைக்கும் பாராளுமன்றத்துக்கு ஒரு நாடு ஒரு சட்டத்துக்கு தேவையான சட்டம் அமைப்பதும் பாராளுமன்றத்தின் கடமையாகும்.

எனவே ஜனாதிபதியின் அறியாமையாலே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. அதனால் ஜனாதிபதியின் அறியாமையை போக்க தீபாவளி நிகழ்வின் வெளிச்சம் உதவ வேண்டும் என பிராத்திப்போம் என்றார்.

No comments:

Post a Comment