'ஒரே நாடு, ஒரே சட்டம்' செயலணியின் நியமனமானது முறையற்றது என்பதுடன் சட்டமியற்றுதல் தொடர்பில் ஏற்றுக் கொள்ளப்பட்ட பொறிமுறைக்குப் புறம்பானதுமாகும் : இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதிக்கு கடிதம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, November 3, 2021

'ஒரே நாடு, ஒரே சட்டம்' செயலணியின் நியமனமானது முறையற்றது என்பதுடன் சட்டமியற்றுதல் தொடர்பில் ஏற்றுக் கொள்ளப்பட்ட பொறிமுறைக்குப் புறம்பானதுமாகும் : இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதிக்கு கடிதம்

(நா.தனுஜா)

நீதியமைச்சின் செயற்பாடுகளை மேற்பார்வை செய்யும் வகையிலான 'ஒரே நாடு, ஒரே சட்டம்' தொடர்பான ஜனாதிபதி செயலணியின் நியமனமானது முறையற்றது என்பதுடன் சட்டமியற்றுதல் தொடர்பில் ஏற்றுக் கொள்ளப்பட்ட பொறிமுறைக்குப் புறம்பானதுமாகும்.

சட்டரீதியாகத் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளினதும் மக்கள் ஆணையைக் கொண்டிருக்கும் ஜனாதிபதியினதும் அதிகாரங்களை பிறிதொரு கட்டமைப்பிற்கு வழங்குவதன் விளைவாக மக்களின் இறையாண்மை மிக மோசமாகப் பாதிக்கப்படும் என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

அதுமாத்திரமன்றி வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளவாறான பணிகளை முன்னெடுப்பதற்கு செயலணியின் தலைவர் உள்ளடங்கலாக உறுப்பினர்கள் கொண்டிருக்கக் கூடிய தகைமை, நிபுணத்துவம் மற்றும் பொருத்தப்பாடு தொடர்பில் வலுவான சந்தேகங்கள் காணப்படுவதாகவும் சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கலகொட அத்தே ஞானசார தேரரின் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள 'ஒரே நாடு, ஒரே சட்டம்' என்ற கொள்கையை ஆராய்ந்து, அது குறித்த சட்டவரைபைத் தயாரிப்பதற்கான ஜனாதிபதி செயலணி பல்வேறு தரப்பினரதும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ள சூழ்நிலையில், இது குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அக்கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது, அரசியலமைப்பின் 33 ஆவது சரத்தின் ஊடாக வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம் நீங்கள் 'ஒரே நாடு, நாடு சட்டம்' தொடர்பான ஜனாதிபதி செயலணியை நியமித்திருக்கின்றீர்கள்.

அரசியலமைப்பின்படி நீதி நிர்வாகமும் அதன் அமுலாக்கமும் சட்டத்தின் கீழான பாதுகாப்பும் அனைவருக்கும் நியாயமானதாக அமைவதை இலக்காகக் கொண்டு இந்தச் செயலணி நியமிக்கப்பட்டதாக ஜனாதிபதியின் செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதுமாத்திரமன்றி அடிப்படை உரிமைகளின் பிரகாரம் இனம், மதம், சாதி அல்லது வேறு காரணிகளை அடிப்படையாகக் கொண்டு சட்டத்தின் கீழ் எந்தவொரு பிரஜையும் அடக்குமுறைக்கு உட்படுத்தப்படவோ அல்லது மாறுபாடாக நடத்தப்படவோ கூடாது என்றும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்தோடு 'ஒரே நாடு, ஒரே சட்டம்' என்ற கொள்கையை நடைமுறைப்படுத்துவதன் ஊடாக நாட்டில் உள்ளக மற்றும் சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட மனிதாபிமானக் கோட்பாடுகளை வலுப்படுத்துவதற்கும் சட்டத்தின் கண்ணோட்டத்தில் அனைத்துப் பிரஜைகளும் ஒரே விதமாக நடாத்தப்படுவதை உறுதிப்படுத்துவதற்கும் எதிர்பார்க்கப்படுவதாக அவ்வர்த்தமானியில் கூறப்பட்டுள்ளது.

அவ்வெதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கு ஏற்ற வகையில் இலங்கைக்குள் 'ஒரே நாடு, ஒரே சட்டம்' என்ற கொள்கையை நடைமுறைப்படுத்துவது குறித்து ஆராய்வதும் அதற்குரிய சட்டவரைபைத் தயாரிப்பதும் இதனுடன் தொடர்புடைய வகையில் நீதியமைச்சினால் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட சட்டவரைபை ஆராய்வதும் அதில் செய்யப்பட வேண்டிய திருத்தங்கள் குறித்த பரிந்துரைகளை முன்வைப்பதும் இந்தச் செயலணியின் பணிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

புதிய சட்டவரைபொன்றை உருவாக்குதல் மற்றும் ஏற்கனவே உள்ள சட்டவரைபை ஆராய்தல் என்பன பல்வேறு அரச கட்டமைப்புக்களின் பங்களிப்புடன் முன்னெடுக்கப்பட வேண்டிய மிக முக்கிய பணி என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. சட்டம் இயற்றும் அதிகாரம் என்பது மக்கள் இறையாண்மையின் மிக முக்கிய அம்சமாகும்.

அதன்படி ஏனைய சட்டங்கள் மற்றும் பாராளுமன்ற நிலையியல் கட்டளைகளுக்கு அமைவாக சட்டம் இயற்றுவதற்கான நடைமுறையொன்று அரசியலமைப்பில் உள்வாங்கப்பட்டுள்ளது. எனவே மேற்கூறப்பட்டுள்ள நோக்கத்தை நிறைவேற்றுவதற்கான பொறிமுறை ஏற்கனவே அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக பாராளுமன்றத்தின் நிலையியல் கட்டளைகளுக்கு அமைவாக பாராளுமன்ற மேற்பார்வைக் குழுக்கள், நிலையியல் குழுக்கள் மற்றும் தெரிவுக் குழுக்களை ஸ்தாபிக்க முடியும். அத்தோடு தற்போது நடைமுறையிலுள்ள பல்வேறு சட்டங்களிலும் மறுசீரமைப்புக்களை மேற்கொள்வதற்கான திருத்தங்களை முன்வைப்பதற்கென நீதியமைச்சரால் கடந்த வருடம் சில குழுக்கள் நியமிக்கப்பட்டன.

அக்குழுக்களில் பெரும்பாலானவை சட்டத்துறையின் சிரேஷ்ட வல்லுனர்களையும் விசேட துறைசார் நிபுணர்களையும் உறுப்பினர்களாகக் கொண்டு அமைந்திருக்கின்றது. அதுமாத்திரமன்றி இவற்றில் சில குழுக்களுக்கு நீதிமன்றங்களின் நீதிபதிகள் தலைமை தாங்குகின்றனர்.

இப்பொறிமுறைக்கு அப்பால், சட்டம் இயற்றுவதில் சட்டமா அதிபரும் சட்டமா அதிபர் திணைக்களமும் முக்கிய வகிபாகத்தைக் கொண்டிருப்பதுடன் அது அரசியலமைப்பின் ஊடாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறானதொரு சூழ்நிலையில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணியானது சட்டமா அதிபர் மற்றும் சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகளுக்கு நிகரான வகிபாகத்தைக் கொண்டிருக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியில் நீதியமைச்சின் செயற்பாடுகளை மேற்பார்வை செய்வதற்கான புதிய ஜனாதிபதி செயலணியின் நியமனமானது முறையற்றது என்பதுடன் சட்டமியற்றுதல் தொடர்பில் ஏற்றுக் கொள்ளப்பட்ட பொறிமுறைக்குப் புறம்பானதுமாகும்.

சட்ட ரீதியாகத் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் அதிகாரங்கள் மற்றும் மக்கள் ஆணையைக் கொண்டிருக்கும் ஜனாதிபதியின் அதிகாரங்களை பிறிதொரு கட்டமைப்பிற்கு வழங்குவதன் விளைவாக மக்களின இறையாண்மை பாதிப்பிற்குள்ளாகும்.

அதேவேளை குறித்த ஜனாதிபதி செயலணியின் உறுப்பினர்கள் நியமனத்தில் பெண் பிரதிநிதிகள் எவரும் உள்வாங்கப்படவில்லை என்பதுடன் நாட்டிலுள்ள சில இன மற்றும் மதக் குழுக்களின் பிரதிநிதிகளும் இடம்பெறவில்லை.

அதுமாத்திரமன்றி வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளவாறான பணிகளை முன்னெடுப்பதற்கு செயலணியின் தலைவர் உள்ளடங்கலாக உறுப்பினர்கள் கொண்டிருக்கக் கூடிய தகைமை, நிபுணத்துவம் மற்றும் பொருத்தப்பாடு தொடர்பிலும் வலுவான சந்தேகங்கள் காணப்படுகின்றன.

சமத்துவம், நியாயத்துவம், ஒதுக்கப்படாமை, சட்டத்தின் மூலம் பாதுகாப்புப் பெறல், தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட மனிதாபிமானக் கோட்பாடுகள் என்பன மிகவும் முக்கியமானவை என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

ஆனால் இவற்றை நிலைநிறுத்துவதற்கு வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறையும் புதிய ஜனாதிபதி செயலணியின் உருவாக்கமும் அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்குமா? என்பது சந்தேகத்திற்குரிய விடயமாகும்.

அரசும் நீங்கள் (ஜனாதிபதி) வகிக்கின்ற நிறைவேற்றதிகாரம் உள்ளடங்கலாக அரசாங்கத்தின் ஏனைய கூறுகளும் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதுடன் அரசியலமைப்பின் 4 ஆவது சரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் செயற்படுவதுமே தற்போது உயர் முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டிய விடயங்களாகும்.

சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்தல் மற்றும் மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு மதிப்பளித்தல் ஆகியவையே வர்த்தமானி அறிவித்தலில் கூறப்பட்டுள்ள நோக்கங்களை அடைந்து கொள்வதற்கான மிகச் சிறந்த வழிமுறையாகும்.

சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்யும் கடப்பாட்டைக் கொண்டியங்கும் சட்டத்தரணிகள் சங்கமானது, கடந்த சில மாதங்களில் சட்டத்தின் ஆட்சியும் மக்களின் அடிப்படை உரிமைகளும் மீறப்பட்ட சம்பவங்களையும் உங்களதும் (ஜனாதிபதி) அரசாங்கத்தினதும் கவனத்திற்குக்கொண்டு வந்திருந்தது.

இருப்பினும் அவை தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எவையும் முன்னெடுக்கப்படவில்லை என்பதையும் கவலையுடன் பதிவு செய்கின்றோம் என்று அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment