மக்களின் துன்பத்தாலும், பசியாலும், வெறுப்பாலும் அரசாங்கத்திற்கு எதிரான சிறைச்சாலை தயாராகிறது : எமக்கெதிரான வழக்கு விசாரணைகளால் எம்மை ஒருபோதும் அச்சம் கொள்ளச் செய்ய முடியாது - சம்பிக்க ரணவக - News View

About Us

About Us

Breaking

Wednesday, November 3, 2021

மக்களின் துன்பத்தாலும், பசியாலும், வெறுப்பாலும் அரசாங்கத்திற்கு எதிரான சிறைச்சாலை தயாராகிறது : எமக்கெதிரான வழக்கு விசாரணைகளால் எம்மை ஒருபோதும் அச்சம் கொள்ளச் செய்ய முடியாது - சம்பிக்க ரணவக

(நா.தனுஜா)

அரசாங்கத்திற்குள் இருந்துகொண்டு ஒருபோதும் எதிர்க்கட்சியின் பணியைச் செய்ய முடியாது. அதற்கு அரசாங்கத்தை விட்டு வெளியேறி, ராஜபக்ஷக்களின் செயற்பாடுகளை விமர்சிக்கின்ற தைரியத்தைக் கொண்டிருக்க வேண்டும். அதனையே நாம் கடந்த 2014 ஆம் ஆண்டில் செய்தோம். அப்போது எம்மை 'துரோகி' என்று விமர்சித்தார்கள். ஆனால் நாம் அப்போது எத்தகைய சூழ்நிலைக்கு முகங்கொடுத்திருந்தோம் என்பதை இப்போது உதய கம்மன்பில போன்றவர்கள் நன்கு புரிந்துகொண்டிருப்பார்கள். அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற ராஜபக்ஷ குடும்பத்தைச் சாராத எந்தவொரு நபருக்கும் எதிர்காலத்தில் இந்த நிலையே ஏற்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக் காரியாலயத்தில் புதன்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது, இரசாயன உர இறக்குமதித் தடையை அடுத்து ஏற்பட்டுள்ள உரப் பற்றாக்குறை காரணமாக விவசாயிகள் பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளனர். அதுமாத்திரமன்றி அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் பெருமளவால் அதிகரித்துள்ளன. இவ்வாறானதொரு சூழ்நிலையில் தற்போது உர இறக்குமதியின் மூலம் அரசாங்கம் பாரிய நிதி மோசடியில் ஈடுபட்டு வருகின்றது.

குறிப்பாக விவசாயத்துறை அமைச்சரால் இந்தியாவிலிருந்து நனோ நைட்ரஜன் திரவ உரத்தை இறக்குமதி செய்வதற்கான யோசனை அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டது. ஆனால் அதற்கு உரியவாறு அனுமதி பெறப்படுவதற்கு முன்னதாகவே ஒரு தொகுதி உரம் முதற்கட்டமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்டிருப்பதுடன் அதற்குரிய கொடுப்பனவும் செலுத்தப்பட்டிருக்கின்றது.

இது உரிய சட்டதிட்டங்களுக்கு முற்றிலும் புறம்பான நடவடிக்கையாகும். அதன் தொடர்ச்சியாக அடுத்த தொகுதி உரத்தையும் நாட்டிற்குள் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறிய முடிகின்றது.

அதுமாத்திரமன்றி ஏற்கனவே கொண்டுவரப்பட்ட நனோ நைட்ரஜன் திரவ உரத்தின் ஒரு லீற்றருக்கான விலையை அடிப்படையாகக் கொண்டு நோக்குகையில், அக்கொடுக்கல் வாங்கல் ஊடாக சுமார் 8 இலட்சம் டொலர் மோசடி இடம்பெற்றிருக்கின்றது.

அடுத்ததாக விவசாயிகளின் பிரச்சினைக்கு இந்த நனோ நைட்ரஜன் உரம் தீர்வாக அமையுமா? விவசாயத்துறை சார் நிபுணர்களால் வெளியிடப்பட்டுள்ள கருத்துக்களின் பிரகாரம் நாடளாவிய ரீதியிலுள்ள விவசாய நிலங்களுக்குப் பயன்படுத்துவதற்கு இந்த உரம் போதுமானதல்ல.

அதுமாத்திரமன்றி விவசாய அமைச்சினால் ஒரு ஹெக்டேயர் நிலப் பரப்பிற்குப் பயன்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள அளவிலான திரவ நனோ நைட்ரஜன் உரத்தின் மூலம் எதிர்பார்க்கப்படும் விளைச்சலைப் பெற்றுக் கொள்ள முடியாது.

மறுபுறம் சீனாவிலிருந்து தீங்கேற்படுத்தும் நுண்ணுயிரிகள் அடங்கிய உரத்தை நாட்டிற்குள் கொண்டுவருவதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன. அதற்குரிய கடன் தவணைப் பத்திரத்திற்கான கொடுப்பனவை செலுத்தாமையினால் மக்கள் வங்கியை சீனத் தூதரகம் கறுப்புப் பட்டியலில் சேர்த்திருக்கின்றது.

பத்திரத்தைக் காண்பித்தவுடன் கொடுப்பனவைச் செலுத்து வேண்டும் என்ற அடிப்படையிலேயே சீன உரத்திற்கான கடன் தவணைப் பத்திரம் விநியோகிக்கப்பட்டிருக்கின்றது. இது பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று காமினி செனரத் கூறினாலும், அவரது உறவினர்களே இதன் பின்னால் இருக்கின்றார்கள்.

அதேவேளை இவ்விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நிதியமைச்சர் ஆகியோரே முக்கியமாகப் பொறுப்புக்கூற வேண்டியவர்களாவர். மக்கள் வங்கியின் ஊடாகவே இந்த மோசடி கொடுக்கல், வாங்கல்கள் இடம்பெற்றிருக்கின்றன. எனவே இது குறித்து மக்கள் வங்கியின் தலைவரும் பொறுப்புக்கூற வேண்டும்.

அடுத்ததாக கடந்த காலத்தில் கோட்டாபய ராஜபக்ஷவைப் புகழ்ந்து பேசிய உதய கம்மன்பில போன்றவர்கள், தற்போதுதான் உண்மையைப் பேச ஆரம்பித்திருக்கின்றார்கள். ஆனால் அரசாங்கத்திற்குள் இருந்து கொண்டு ஒருபோதும் எதிர்க்கட்சியின் பணியைச் செய்ய முடியாது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அதற்கு அரசாங்கத்தை விட்டு வெளியேறி, ராஜபக்ஷக்களின் செயற்பாடுகளை விமர்சிக்கின்ற தைரியத்தைக் கொண்டிருக்க வேண்டும்.

அதனையே நாம் கடந்த 2014 ஆம் ஆண்டில் செய்தோம். அப்போது எம்மை 'துரோகி' என்று விமர்சித்தார்கள். ஆனால் நாம் அப்போது எத்தகைய சூழ்நிலைக்கு முகங்கொடுத்திருந்தோம் என்பதை இப்போது உதய கம்மன்பில போன்றவர்கள் நன்கு புரிந்துகொண்டிருப்பார்கள்.

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற ராஜபக்ஷ குடும்பத்தைச் சாராத எந்தவொரு நபருக்கும் எதிர்காலத்தில் இந்த நிலையே ஏற்படும். எமக்கெதிரான வழக்கு விசாரணைகளால் எம்மை ஒருபோதும் அச்சம் கொள்ளச் செய்ய முடியாது.

இந்நாட்டு மக்களின் துன்பத்தாலும், பசியாலும், வெறுப்பாலும் தற்போதைய அரசாங்கத்திற்கு எதிரான சிறைச்சாலை தயாராகிக் கொண்டிருக்கின்றது. எனவே அதனை எதிர்கொள்வதற்கு ஆயத்தமாகுமாறு அரசாங்கத்திற்கு அறைகூவல் விடுக்கின்றோம் என்று குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment