இலங்கைக்கு தங்கப் பதக்கங்களை வென்று கொடுப்போம் - தினேஷ் பிரியன்த்த ஹேரத் - News View

Breaking

Wednesday, November 24, 2021

இலங்கைக்கு தங்கப் பதக்கங்களை வென்று கொடுப்போம் - தினேஷ் பிரியன்த்த ஹேரத்

(எம்.எம்.சில்வெஸ்டர்)

ஆசிய பரா போட்டி மற்றும் உலக பரா சம்பியன்ஷிப் ஆகிய போட்டிகளில் இலங்கைக்கு தங்கப் பதக்கங்களை வென்று கொடுப்பதற்கு தாம் உள்ளிட்ட பரா குழுவினர் எதிர்பார்த்துள்ளதாக டோக்கியோ பரா ஒலிம்பிக்கில் உலக சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்ற தினேஷ் பிரியன்த்த ஹேரத் தெரிவித்தார்.

4 ஆவது ஆசிய பரா போட்டி சீனாவின் ஹாங்ஸூ நகரில் அடுத்தாண்டு ஒக்டோபர் மாதத்தில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டிக்கான பயிற்சிகளை தற்போதிருந்தே இலங்கை பரா மெய்வல்லுநர் வீர, வீராங்கனைகள் ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில், பரா வீர, வீராங்கனைகளுக்கான அனுசரணையை வழங்குவதற்கு மாஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனம் முன்வந்துள்ளது. இதனை முன்னிட்டு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்றையதினம் (23) கைச்சாத்திடப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "இந்த போட்டிகளுக்கான இலங்கை மெய்வல்லுநர் குழாத்தில் இடம்பெற்றுள்ள சகலரும் பலதரப்பட்ட தியாகங்களைச் செய்தும் விடா முயற்சியுடன் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கான முடிவுகளை நீங்கள் எமது போட்டிகளின்போது கண்டுணர்வீர்கள்.

இதற்காக இலங்கை பரா குழுவில் திறமைமிக்க பல வீர, வீராங்கனைகள் காணப்படுவதாகவும், இந்த போட்டித் தொடர்களின்போது இலங்கை நாமத்தை உலகத் தரத்தில் கொண்டு செல்வதற்கு எமது வீரர்களுக்கு முடியும்" என்றார்.

No comments:

Post a Comment