ஒற்றையாட்சிக் கட்டமைப்பை வலுவாகக் கொண்ட சிங்கள, பௌத்த அரசியலமைப்பொன்றே உருவாகும் : அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரிடம் தெரிவித்தார் சித்தார்த்தன் எம்.பி - News View

About Us

About Us

Breaking

Saturday, November 27, 2021

ஒற்றையாட்சிக் கட்டமைப்பை வலுவாகக் கொண்ட சிங்கள, பௌத்த அரசியலமைப்பொன்றே உருவாகும் : அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரிடம் தெரிவித்தார் சித்தார்த்தன் எம்.பி

(ஆர்.ராம்)

தற்போதைய ஆட்சியாளர்களால் உருவாக்கப்பட்டு வரும் புதிய அரசியலமைப்பு ஒற்றையாட்சிக் கட்டமைப்பை வலுவாகக் கொண்ட சிங்கள, பௌத்தத்தினை முன்னிலைப்படுத்திய அரசியலமைப்பொன்றே உருவாகும் சாத்தியம் அதிகமுள்ளதாக புளொட் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

இலங்கை மற்றும் மாலைதீவுக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் டேவிட் ஹோலிக்கும் தர்மலிங்கம் சித்தார்த்தனுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று வெள்ளிக்கிழமை உயர்ஸ்தானிகரின் உத்தியோக பூர்வ இல்லத்தில் நடைபெற்றிருந்தது. இதன்போது, புதிய அரசியலமைப்பு சம்பந்தமான விடயங்கள் பற்றிய கவனம் செலுத்தப்பட்டபோதே சித்தார்த்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இச்சந்திப்பின்போது, வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்பட வேண்டிய உட்கட்டமைப்பு விடங்கள் பற்றி சித்தார்த்தன் எம்.பி. அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.

அத்துடன், வடக்கு, கிழக்கு பகுதிகளில் கல்வித்துறை மேம்பாட்டிற்கான ஒத்துழைப்புக்களை அவுஸ்திரேலிய மேம்பட்ட ரீதியில் தொடர்ந்தும் வழங்க வேண்டும் என்று கோரியுள்ளார்.

அதனையடுத்து சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பில் உயர்ஸ்தானிகருக்கும், சித்தார்த்தனுக்கும் இடையில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.

இச்சமயத்தில் தமிழ் மக்களின் பொறுப்புக்கூறல் விடயத்தில் சர்வதேசத்தின் அழுத்தங்கள் மேலும் வலுவாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்று சித்தார்த்தன் உயர்ஸ்தானிகரிடத்தில் கோரியுள்ளார்.

தற்போதைய அரசாங்கம் பொறுப்புக்கூறல் விடயத்தில் சிரத்தையின்றி இருப்பதை சுட்டிக்காட்டியதோடு, தமிழ் மக்கள் நீண்டகாலமாக நீதிக்காக போராடிக் கொண்டிருக்கின்றார்கள் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து புதிய அரசியலமைப்பு விடயம் சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டுள்ளது. அச்சயத்தில், தற்போதைய அரசாங்கம் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை பூர்த்தி செய்யக்கூடிய வகையிலான ஒரு அரசியலமைப்பினை உருவாக்கும் என்றும் நம்பிக்கை கொள்ளவில்லை.

மேலும் சமகால நிலைமைகளின் பிரகாரம் உருவாக்கப்படுகின்ற புதிய அரசியலமைப்பானது நிச்சயமாக வலுவான ஒற்றையாட்சிக் கட்டமைப்பைக் கொண்டதாகவும், பௌத்த, சிங்களத்தை அடிப்படையாகவும், முன்னிலைப்படுத்தியதாகவும் தான் அமைவதற்கான சாத்தியப்பாடுகள் அதிகமாக உள்ளதாகவும் சித்தார்த்தன் எடுத்துரைத்துள்ளார்.

இந்த விடயத்தில், அவுஸ்திரேலியா உள்ளிட்ட ஏனைய அதன் நட்புநாடுகளும் விசேட கரிசனை கொள்ள வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியதோடு, தமிழர்களுக்கான அவுஸ்திரேலியா வழங்கிய இதுகாலவரையிலான ஒத்துழைப்புக்களுக்கும், ஆதரவுக்கும் நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment