தமிழ் மக்கள் நியாயமான அரசியல் தீர்வினைக்காண கூட்டு ஒத்துழைப்பு தொடர்ந்தும் வழங்கப்படும் : சுமந்திரனிடம் தெரிவித்தார் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் - News View

About Us

About Us

Breaking

Saturday, November 27, 2021

தமிழ் மக்கள் நியாயமான அரசியல் தீர்வினைக்காண கூட்டு ஒத்துழைப்பு தொடர்ந்தும் வழங்கப்படும் : சுமந்திரனிடம் தெரிவித்தார் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர்

(ஆர்.ராம்)

இலங்கை அரசாங்கம் பொறுப்புக்கூறலைச் செய்வதற்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இணை அனுசரணை நாடுகளின் தலைமையேற்று பிரித்தானியா செயற்பட்டதைப் போன்று தமிழ் மக்கள் நியாயமான அரசியல் தீர்வினைக் காண்பதற்காக கூட்டு ஒத்துழைப்புத் தொடர்ந்தும் வழங்கப்படும் என்று அந்நாட்டின் பொதுநலவாய வெளிவிவகாரங்கள் மற்றும் மனித உரிமைகள் அமைச்சரும் பாலியல் வன்முறைகளைத் தடுப்பதற்கான பிரதமர் பொரிஸ் ஜோன்சனின் விசேட பிரதிநிதியும், தெற்காசிய மற்றும் ஐ.நா விடயங்களை கையாள்பவருமான தாரிக் அஹமட் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க, கனடிய பயணங்களை நிறைவு செய்துகொண்டு பிரித்தானியாவுக்குச் சென்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும், யாழ். பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரனுக்கும் பிரித்தானிய அமைச்சர் தாரிக் அஹமட்டுக்கும் இடையிலான சந்திப்பு நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை நடைபெற்றிருந்தது. இச்சந்திப்பின்போதே மேற்கண்டவாறு அமைச்சர் தாரிக் அஹமட் தெரிவித்துள்ளார்.

அச்சந்திப்பு தொடர்பில், சுமந்திரன் எம்.பி. பிரித்தனியாவில் இருந்தாவறே தெரிவிக்கையில், பிரித்தானிய வெளிவிவகார அமைச்சருடனான சந்திப்பானது மிகவும் ஆக்கபூர்வமாக அமைந்திருந்தது. அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளில் இடம்பெற்ற முக்கிய சந்திப்புக்களின் தொடர்ச்சியாகவே இந்தச் சந்திப்பும் நடைபெற்றிருந்தது.

குறித்த சந்திப்பின்போது, இலங்கை அரசாங்கத்தினை பொறுப்புக்கூறலை செய்ய வைப்பதற்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் பிரித்தானியா இணை அனுசரணை நாடுகளின் தலைமையில் 46.1 பிரேரணையை முன்னகர்த்தி நிறைவேற்றியமைக்காக தமிழினத்தின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்திருந்தேன்.

அத்துடன் பொறுப்புக்கூறல் வியடத்தில் நீதி நிலைநாட்டப்படும் வரையில் பிரித்தானியாவின் தொடர்ச்சியான வகிபாகம் நீடிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தேன்.

அதேநேரம், அமெரிக்கா மற்றும் கனடாவில் நடைபெற்ற பேச்சுக்களின் அடிப்படையில் தமிழ் மக்களுக்கான ஒரு நியாயமான அரசியல் தீர்வினை பெற்றுக் கொள்வதற்காக முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் எம்மால் எடுத்துரைக்கப்பட்ட விடயங்களை அவருடன் (அமைச்சர் தாரிக் அஹமட்) பகிர்ந்து கொண்டேன்.

இந்த விடயத்தில் அடுத்து வரும் காலத்தில் அமெரிக்கா, இந்திய கூட்டில் புதியதொரு கொள்வை வகுப்பதற்கான ஏதுநிலைகள் இருப்பதை குறிப்பிட்டுக்கூறியதோடு கனடா பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் அவ்விடயத்தில் பூரணமான பங்களிப்பினை வழங்க வேண்டும் என்பது எமது எதிர்பார்ப்பு என்பதையும் கூறினேன்.

அதன்போது இலங்கை அரசாங்கம் பொறுப்புக்கூறலைச் செய்வதற்காக பிரித்தானியா எவ்வாறு ஐக்கிய நாடுகள் சபையில் செயற்பட்டதோ அதேபோன்று அரசியல் தீர்வு விடயத்திலும் அவ்விடயத்தில் கரிசனை கொண்டு நடவடிக்கைளை முன்னெடுக்கும் ஏனைய நாடுகளுடனும் கூட்டிணைந்து செயற்படுவதற்கான ஒத்துழைப்புக்களை பிரித்தானியா வழங்கும் என்று அவர் (அமைச்சர் தாரிக் அஹமட்) தெரிவித்தார்.

அத்துடன், இச்சந்திப்பில் அண்மைக்காலத்தில் வடக்கு, கிழக்கு மற்றும் இலங்கையின் அரசியல் நிலைமைகள் உட்பட தமிழ் மக்கள் முகங்கொடுத்துவரும் பிரச்சினைகள் பற்றியும் கவனத்திற் கொள்ளப்பட்டது என்றார்.

No comments:

Post a Comment