நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பற்றி இலங்கை எம்.பி. ஒருவர் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பேசிய பேச்சு தற்போது சமூக ஊடகங்களில் விவாதிக்கப்படுகிறது.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன், சீமானுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒப்பிட்டு நாடாளுமன்றத்தில் பேசியிருந்தார்.
இலங்கை நாடாளுமன்றத்தில் 2022ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மீதான விவாதம் இந்த காலப்பகுதியில் நடைபெற்று வருகிறது.
இந்த விவாதத்தில் கலந்துகொண்டு உரை நிகழ்த்திய குலசிங்கம் திலீபன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கடுமையாக விமர்சித்து பேசினார்.
சீமானுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரனையும் இணைத்து, திலீபன் இவ்வாறு விமர்சித்திருந்தார்.
ஆமைக்கறி, பூனைக்கறி
"தமிழ் நாட்டிலுள்ள சீமானை போல, தமிழினத்தை வைத்து, ஆமைக்கறி, பூனைக்கறி என்ற கதைகளை சொல்லி, தமிழ் மக்களையும், தமிழ் மக்களின் துன்பங்களையும் வைத்து பிழைப்பு நடத்துவது போல், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் உருவெடுத்துள்ளார்," என அவர் கூறினார்.
"இலங்கையின் சீமான், அதாவது தமிழர்களின் சீமான் என்றே அவரை சொல்ல வேண்டும்," என அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனை, குலசிங்கம் திலீபன், "மொஹமட் சாணக்கியன்" என அழைத்துள்ளார்.
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விமர்சித்து பேசிய குலசிங்கம் திலீபனின் கருத்துக்களை அடுத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பினார்.
சபையில் இல்லாத உறுப்பினர்களின் பெயரை எழுப்பி பேசுவது தவறானது எனவும், ஒருவருடைய பெயரை மாற்றி கூறுவது தவறானது எனவும் ஸ்ரீதரன், சபையின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.
குலசிங்கம் திலீபனின் கருத்துகளை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என ஸ்ரீதரன் விடுத்த கோரிக்கையை ஏற்ற, சபையை தலைமை தாங்கிய உறுப்பினர், குறித்த கருத்தை அவை குறிப்பில் இருந்து நீக்கினார்.
பிரபாகரனை எவ்வளவு நேரம் பார்த்தார் சீமான்?
இந்த நிலையில், சீமான் குறித்து ஏன் அவ்வாறு கருத்து வெளியீட்டீர்கள் என, நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபனிடம் வினவியபோது.
யுத்தம் நடந்த காலப்பகுதியில் தமிழர்களுக்கு உதவி செய்யும் நிறுவனம் எனக்கூறிக் கொள்ளும் நிறுவனமொன்றின் ஊடாக வவுனியாவிற்கு வருகை தந்த சீமான், இரவு முழுவதும் மதுபானம் அருந்தி விட்டு, விடுதலைப் புலி அமைப்பின் தலைவரை வெறும் 10 முதல் 15 நிமிடங்கள் மாத்திரமே சந்தித்ததாக அவர் குற்றம் சுமத்தினார்.
இந்த சந்தர்ப்பத்தில்தான் இதனை பார்த்திருந்ததாகவும் திலீபன் குறிப்பிட்டார்.
இந்த சந்திப்பின் போது திரைப்படம் குறித்தே பேசப்பட்டதாகவும், அரசியல் விவகாரங்களோ, போராட்டம் குறித்தோ பேசப்படவில்லை எனவும் அப்போது செய்திகள் வெளிவந்ததாக அவர் கூறுகிறார்.
எனினும், தான் பல மணித்தியாலங்கள் விடுதலைப் புலி அமைப்பின் தலைவரை சந்தித்ததாகவும், கொக்கு, ஆமை கறி வைத்து தந்தார் எனவும் சீமான் தற்போது கருத்துகளை வெளியிட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இலங்கை தமிழர்களையும், தமிழர்களின் வடுக்களையும் வைத்துக் கொண்டு, ஒரு வியாபாரத்தையே, சீமான் செய்துகொண்டுள்ளதாக திலீபன் கூறுகின்றார்.
அதேபோன்றே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் செயற்படுகின்றார் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதனாலேயே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும், தமிழகத்திலுள்ள சீமானை போன்றவர் என தான் ஒப்பிட்டு சொன்னதாக திலீபன் கூறுகின்றார்.
நாடாளுமன்ற விதிகள் சொல்வது என்ன?
இலங்கை நாடாளுமன்றத்தின் நிலையியற் கட்டளைப்படி, சபையில் இல்லாத ஒருவரின் பெயரை விளிப்பது தவறானது.
இந்நிலையில், அன்றையதினம் சபையில் இல்லாதவர்கள் மீது இவ்வாறான குற்றச்சாட்டுககளை முன்வைப்பது தவறானது இல்லையா என திலீபனிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கும், அவர் பதிலளித்தார்.
நாடாளுமன்றத்தில் உரிய தரப்புக்களை நோக்கி கேள்வி எழுப்பும் சந்தர்ப்பங்களில், பெரும்பாலும் சபையில் குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருப்பது கிடையாது என அவர் பதிலளித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மீதான குற்றச்சாட்டு குறித்து, அவரை தொடர்புகொள்ள முயற்சித்தும், சுமந்திரன் அமெரிக்கப் பயணத்தில் இருப்பதால் அவரது தொலைபேசியை அடைய முடியவில்லை.
இதையடுத்து, திலீபன் நாடாளுமன்றத்தில் அன்றையதினம் உரை நிகழ்த்திய சந்தர்ப்பத்தில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்து வெளியிட்ட கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரனை தொடர்புகொண்டு வினவியபோது.
நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்த வேண்டிய பல்வேறு விடயங்கள் காணப்பட்ட போதிலும், அவற்றை தவிர்த்து, கல்வி அறிவில்லாத ஒருவரை போன்று திலீபன் அன்றையதினம் செயற்பட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் தெரிவிக்கிறார்.
இவ்வாறானவர்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்பியமை குறித்து, மக்களே வெட்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிடுகிறார்.
கல்வி அறிவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் முன்வைத்த விமர்சனத்தை நிராகரித்த குலசிங்கம் திலீபன், யுத்தம் காரணமாக இலங்கையில் தான் 6 ஆம் தரம் வரை கல்வி பயின்றதாகவும் குறிப்பிட்டார்.
அதன் பின்னர், தனது உயர் கல்வியை இந்தியாவில் தொடர்ந்து, கணினி வடிவமைப்பு துறையில் 20 வருடங்களுக்கு மேல் அனுபவம் பெற்றுள்ளதாகவும் குலசிங்கம் திலீபன் தெரிவித்தார்.
தனக்கு கல்வி அறிவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் நாடாளுமன்றத்திலும் பேசியுள்ளதால், இது குறித்து தான் நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்த உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நாம் தமிழர் கட்சி என்ன சொல்கிறது?
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரின் இந்தப் பேச்சு குறித்து நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறையின் பொறுப்பாளர் இடும்பாவனம் கார்த்தியிடம் கேட்டார் பிபிசி தமிழ் செய்தியாளர் முரளிதரன் காசிவிஸ்வநாதன்.
அதற்கு பதில் அளித்த அவர், "ஆமைக்கறி சாப்பிட்டேன் என்பதை தமிழ் நாட்டில் வேண்டுமானால் பெரிய விஷயமாகப் பார்க்கலாம். ஏனென்றால் தமிழ் நாட்டில் அது அரிய வகை உணவாக இருக்கிறது. ஆனால், ஈழத்தில் எப்படி அரிய வகை உணவானது எனத் தெரியவில்லை. இது முழுக்க முழுக்க காழ்ப்புணர்ச்சி. வன்மம்.
2009 இல் ஈழப் படுகொலை நடந்து முடிந்து பத்தாண்டுகளுக்கு மேலாகிவிட்டது. தமிழக அரசியல் கட்சிகள் அதனைக் கடந்துவந்து விட்டார்கள். இன்னும் எத்தனை காலத்திற்கு அதைப் பேசுவீர்கள் என்று கேட்கிறார்கள்.
ஆனால் நாம் தமிழர் கட்சிதான் இப்போதும் ஈழப் படுகொலைக்கு விசாரணை நடத்தப்பட வேண்டும். பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். புலம் பெயர் தமிழர்களிடமும் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென கூறிவருகிறது.
கிழக்கு பாகிஸ்தான் வங்கதேசமாக மாறுவதற்கு மேற்கு வங்கம் எப்படி இந்திரா காந்திக்கு அழுத்தம் கொடுத்ததோ அதுபோலத்தான்.
முதலில் தந்தை செல்வா, பிறகு பிரபாகரன் தலைமையில் நடந்த போராட்டம் மௌனிக்கப்பட்ட பிறகு, மறுபடியும் ஓர் அறப்போராட்டம் இந்த முறை ஈழத்தில் இல்லாமல் தமிழ் நாட்டிலிருந்து தொடங்கியிருக்கிறது. ஓர் இனப் படுகொலைக்குப் பிறகு நாங்கள் நாம் தமிழர் என்று பிறந்தோம்.
எந்த சமரசத்திற்கும் உட்படாமல், இனத்திற்கான அரசியல் செய்ய வேண்டுமென முடிவெடுத்தோம். அரசியல் தீர்வை கொண்டுவரும் முயற்சியில் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறோம். இதில் எங்கள் மீது வன்மமும் காழ்ப்புணர்ச்சியும் கொண்டவர்கள் எதாவது பேசலாம்.
அமைக்கறியெல்லாம் பேசக்கூடிய பொருளா? மனிதக் கறியை உண்டிருக்கிறார்கள். பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொன்று குவித்திருக்கிறார்கள். அதைத்தான் பேச வேண்டும்.
எங்கோ ஒரு பேட்டியில், ஏதோ ஒரு தருணத்தில் ஈழப் பயணம் தொடர்பாக பேசும்போது அங்கே எப்படி கவனித்தார்கள், விருந்தோம்பல் செய்தார்கள் என்று பேசும்போது இதைச் சொல்கிறார். அதைத் தாண்டி எல்லா இடங்களிலும் பெருமிதமாகவெல்லாம் பேசிக் கொண்டிருக்கவில்லை.
சீமான் பிரபாகரனை எவ்வளவு நேரம் சந்தித்தார் என்பதைப் பற்றி இவர்களுக்கு நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை. தாயக விடுதலையை லட்சியமாகக் கொண்ட ஈழ விடுதலைப் போராட்டத்தைத் தடம் புரண்டுவிடாமல் தொடர்கிறோமா இல்லையா? இதுதான் பேசு பொருளாக இருக்க வேண்டும். நாங்கள் தடம் புரண்டிருந்தால் அதைப் பேசலாம். எங்கேயோ ஒரு பேட்டியில் சொன்னதை எதற்கு பிடித்துக் கொண்டிருக்க வேண்டும்?" என்று கேள்வி எழுப்புகிறார்.
சுமந்திரனோடு சீமானை ஒப்பிட்டிருக்கிறார்களே என்று கேட்டபோது, "எங்கள் அண்ணனை யாரோடும் ஒப்பிட வேண்டிய தேவையில்லை. இதைத் தமிழ் நாட்டில் தி.மு.க. ஆதரவாளர்கள் எடுத்து பரப்பலாம். இதுபோல ஆயிரம் அவதூறுகளைப் பார்த்து விட்டோம். இதையெல்லாம் கடந்துபோவோம்.
இலங்கையாக இருந்தாலும் தமிழ் நாடாக இருந்தாலும் நாம் தமிழர் கட்சியை தவிர்த்துவிட்டு அரசியல் செய்ய முடியாது என்ற நிலை உருவாகி விட்டது. அதற்கான எதிர்மறையான அங்கீகாரமாகத்தான் இதைப் பார்க்கிறேன்" என்றும் அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment