விஷ உர இறக்குமதியின் பின்னணியில் ஜனாதிபதியும், அரசாங்கமும் - அநுரகுமார திசாநாயக்க - News View

About Us

About Us

Breaking

Friday, November 26, 2021

விஷ உர இறக்குமதியின் பின்னணியில் ஜனாதிபதியும், அரசாங்கமும் - அநுரகுமார திசாநாயக்க

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

விஷ உர இறக்குமதியின் பின்னணியில் அரசாங்கமே உள்ளது. ஜனாதிபதி, ஜனாதிபதி செயலாளர், விவசாயத்துறை அமைச்சர், உரிய அதிகாரிகள் பங்குபற்றிய கூட்டங்களிலேயே விஷ உரம் இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் (ஜே.வி.பி) அநுரகுமார திசாநாயக்க சபையில் குற்றம் சுமத்தினார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (26), கமத்தொழில் அமைச்சு மற்றும் நீர்ப்பாசன அமைச்சு மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், விவசாயத்திற்கான சகல இறக்குமதியையும் நிறுத்துமாறு முதலில் தீர்மானிக்கப்பட்டது, பின்னர் படிப்படியாக வர்த்தமானி அறிவித்தல்கள் விடுக்கப்பட்டு அவை மீளவும் பெற்றுக் கொள்ளப்பட்டு இறுதியாக இன்று தனியார் துறைக்காக யூரியா இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் கொடுத்த இலவச உர வேலைத்திட்டத்தை சமாளிக்க, அதில் இருந்து விடுபட நடத்திய நாடகமே இவை அனைத்தும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

விவசாயிகள் தமது நிலத்தை தனியார் நிறுவனங்களுக்கு கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பாரிய தனியார் நிறுவனங்கள் முன்னெடுக்கும் மாபியாவை நடத்தும் தரகர்களாக அரசாங்கம் மாறியுள்ளது. இதில் அரசாங்கத்திற்கு வெற்றி கிடைத்துள்ளது.

சீன நிறுவனம் ஒன்றில் இலங்கைக்கு தேவையான 96 ஆயிரம் மெற்றிக் தொன் உரத்தை இறக்குமதி செய்ய அமைச்சரவை தீர்மானித்துள்ளது. அதற்கமையவே அண்மையில் 20 ஆயிரம் மெற்றிக் தொன் உரம் இலங்கைக்கு கொண்டவரப்பட்டது.

அந்த உரத்தின் தரம் மோசமானது என தெரிந்தும் அரசாங்கம் ஆரம்பத்தில் இருந்தே உர நிறுவத்தின் பக்கமே பிரதிநிதித்துவப்படுத்தியது. இறுதியாக உரத்தை இறக்குமதி செய்ய முடியாது குறித்த நிறுவனத்திற்கு 9 பில்லியம் அமெரிக்க டொலர்களை நட்டஈடாக வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

பேச்சுவார்த்தைகளுக்கு சென்றால் மேலும் அதிகமாக நட்டஈடு வழங்க வேண்டிவரும். இந்த நெருக்கடியை திசை திருப்ப நனோ நைட்ரஜன் என்ற கதையை உருவாக்கினீர்கள். உண்மையில் இது நனோ யூரியா. இதனை நீங்கள் மறைக்க முடியாது. இந்த கணக்கு வழக்குகளை கையாள எந்த அனுமதியும் இல்லாது திறைசேரி நிதியை கையாள பி.பி ஜெயசுந்தரவிற்கு இருக்கும் அதிகாரம் என்ன. அதையும் தாண்டி உடன்படிக்கை செய்ய முன்னர் நாணயக் கடிதத்தை திறந்தது யார்? பணம் அனுப்பப்பட்டது எவ்வாறு? இதற்கு அரசாங்கம் பதில் கூற வேண்டும். ஒரு குடும்பத்திற்கு பணம் தேடிக்கொடுக்கும் செயற்பாடுகளுக்கு மக்களின் பணத்தை எடுக்கும் உரிமை இல்லை. ஆனால் அதனையே பி.பி ஜெயசுந்தர முன்னெடுத்து வருகின்றார்.

நாட்டிற்கு இறக்குமதி செய்யும் விஷ உர இறக்குமதியின் பின்னணியில் அரசாங்கமே உள்ளது. ஜனாதிபதி, ஜனாதிபதி செயலாளர், விவசாயத்துறை அமைச்சர், உரிய அதிகாரிகள் பங்குபற்றிய கூட்டங்களில்தான் விஷ உரம் இறக்குமதிக்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ஒருபுறம் மக்களுக்கு விஷ உரம் இறக்குமதி செய்ய அனுமதித்துவிட்டு மறுபுறம் இவர்கள் பைகளை நிரப்பிக் கொண்டுள்ளனர். இதற்கு இவர்கள் அனைவருமே பொறுப்புக்கூறியாக வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment