இரு தமிழர்கள், ஒரு முஸ்லிம் என அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருந்தாலும் இனத்துக்கு எதிரான அநீதிகளை அவர்களால் தடுக்க முடியாது - சார்ள்ஸ் நிர்மலநாதன் - News View

About Us

About Us

Breaking

Friday, November 26, 2021

இரு தமிழர்கள், ஒரு முஸ்லிம் என அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருந்தாலும் இனத்துக்கு எதிரான அநீதிகளை அவர்களால் தடுக்க முடியாது - சார்ள்ஸ் நிர்மலநாதன்

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

இந்த அரசாங்கத்தில் அமைச்சர்களாக இரு தமிழர்களும், ஒரு முஸ்லிம் உறுப்பினரும் இருந்தாலும் அவர்களின் இனத்துக்கு எதிரான அநீதிகளை தடுக்க முடியாது. இதுதான் இந்த நாட்டின் நிலைமையும் கூட என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி.யான சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (26) இடம்பெற்ற கமத்தொழில் அமைச்சு மற்றும் நீர்ப்பாசன அமைச்சு உள்ளிட்ட மூன்று இராஜாங்க அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், அரிசி இறக்குமதி செய்யப்பட மாட்டாது. இரசாயன உரம் இறக்குமதி செய்யப்பட மாட்டாது என அரசாங்கம் ஏற்கனவே வாக்குறுதிகளை வழங்கி இருந்தாலும் அந்த நிலைப்பாட்டில் அரசாங்கம் தோல்வி கண்டுள்ளது.

விவசாயிகளுக்கு உரம் இலவசமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்ட போதும் தற்போது அது நிறுத்தப்பட்டுள்ளது. அதேவேளை விவசாயிகளுக்கு இலவசமாக உரம் வழங்கிய காலங்களில் விலைக்கு கொள்வனவு செய்வதற்கும் போதிய அளவில் உரம் காணப்பட்டது.

தற்போது இலவச உரமும் இல்லாமலும் நியாயமான விலைக்கு கொள்வனவு செய்வதற்கு சந்தைகளில் உரம் இல்லாமலும் விவசாயிகள் பெரும் இக்கட்டான நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

இரசாயன உரத்தை இறக்குமதி செய்வதில்லை என அரசாங்கம் தெரிவித்திருந்தபோதும் அரிசி இறக்குமதியை மேற்கொண்டு வருகிறது. அதற்கிணங்க வெளிநாடுகளில் இரசாயன உரம் பாவிக்கப்பட்டு நெற்பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்பட்ட அரிசியே நாட்டுக்கு கொண்டு வரப்படுகின்றது என்பதை அரசு ஏன் கவனத்தில் கொள்ளவில்லை.

இரசாயன உரப் பாவனையை நிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானம் எடுத்திருந்தால் அதனை கட்டம் கட்டமாக நடைமுறைப்படுத்தி இருக்கலாம். ஆனால் அரசாங்கம் மேற்கொண்ட திடீர் முடிவு காரணமாக விவசாய சமூகம் பெரும் பாதிப்புகளையும் இழப்புகளையும் எதிர்நோக்கி உள்ளது என்பதை அரசாங்கம் உணர வேண்டும். அது தொடர்பில் அரசாங்கம் தமது கூடுதல் கவனத்தை செலுத்த வேண்டும். விவசாயிகள் பாதிப்படையாத வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

இரு தமிழர்களும், ஒரு முஸ்லிமும் இந்த அரசில் அமைச்சர்களாக இருந்தாலும் அவர்களின் இனத்துக்கு எதிரான அநீதிகளை தடுக்க முடியாது. இதுதான் இந்த நாட்டின் நிலை. அதேபோன்று இலங்கையில் தமிழர் ஒருவர் சட்டமா அதிபராக இருந்தாலும் பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைது செய்யப்படுகின்றவர்கள் அதிகரித்துதான் செல்கின்றார்களே தவிர அது குறைந்த பாடில்லை. அவரால் கூட அதனை தடுக்க முடியவில்லை.

பிரித்தானியாவில் உள்ள ஸ்கொட்லாந்து அரசு இலங்கை பொலிஸுக்கு 2022 மார்ச் மாதம் வரை மட்டும்தான் பயிற்சி வழங்குவதாகவும் அதற்கு பின்னர் இலங்கை பொலிஸு க்கு பயிற்சி வழங்க முடியாது என்று கூறியுள்ளார்கள். இலங்கையில் மனித உரிமைகளை பொலிஸ் திணைக்களம் கடைப்பிடிப்பதில்லை என்பதனாலேயே அவர்கள் இவ்வாறு கூறியுள்ளனர்.

அமைச்சர்கள் தமது வாக்குகள் சார்ந்து செயற்படும் போது அது இலங்கையில் பிரிவினைகளை மேலும் அதிகரிக்கும். பிரிவினைகளை ஏற்படுத்தும் பிரச்சினைகளை நீங்கள் தீர்த்தால் மட்டுமே இணக்கப்பாடு வரும். நாம் சிங்கள மக்களுக்கு எதிரானவர்கள் அல்ல. அந்த வகையில் இனங்களுக்கிடையிலான பிளவுகளை நிவர்த்தி செய்ய வேண்டுமே தவிர அதனை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது.

ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் செயற்பாடுகள் எதிர்காலத்தில் நாட்டில் பெரும் பிரச்சனைகள் ஏற்படவே வழிவகுக்கும் அது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்துவது அவசியம் என்றார்.

No comments:

Post a Comment