சமையல் எரிவாயு சிலிண்டர்களின் உள்ளடக்க அளவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றமே வெடிக்க காரணம் : மக்களின் உயிரை அச்சுறுத்தலுக்குள்ளாக்கும் நிறுவனங்களுக்கெதிராக நடவடிக்கை எடுங்கள் - ஐ.தே.க - News View

Breaking

Thursday, November 25, 2021

சமையல் எரிவாயு சிலிண்டர்களின் உள்ளடக்க அளவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றமே வெடிக்க காரணம் : மக்களின் உயிரை அச்சுறுத்தலுக்குள்ளாக்கும் நிறுவனங்களுக்கெதிராக நடவடிக்கை எடுங்கள் - ஐ.தே.க

(எம்.மனோசித்ரா)

சமையல் எரிவாயு சிலிண்டர்களின் உள்ளடக்கங்களின் அளவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றமே அவை வெடிப்பதற்கான பிரதான காரணமாகும். எனவே இது தொடர்பில் துறைசார் நிபுணர்களைக் கொண்டு விசேட பரிசோதனைகளை முன்னெடுத்து, அதன் அறிக்கையை நாட்டுக்கு வெளிப்படுத்துமாறு ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

அத்தோடு மக்களின் உயிரை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கும் சமையல் எரிவாயு நிறுவனங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்திடம் கோரியுள்ளது.

இது தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார வெளியிட்டுள்ள விசேட அறிப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, நாட்டு மக்களுக்கு தேவையான சமையல் எரிவாயுவினை வழங்குவதில் அரசாங்கம் ஆரம்பத்திலேயே தோல்வியடைந்தது. எனினும் தற்போது அரசாங்கமானது வெடிக்கக்கூடிய சமையல் எரிவாயு சிலிண்டர்களை அல்லது எரிவாயு வெடி குண்டுகளை மக்களுக்கு விநியோகித்துக் கொண்டிருக்கிறது.

இதுவரையில் கொழும்பு, கண்டி, வெலிகம, கொட்டாவ மற்றும் ஹோகந்த என பல்வேறு பகுதிகளிலும் சமையல் எரிவாயு கசிவினால் வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

தற்போது சமையல் எரிவாயு நுகர்வோரின் உயிர் மிகுந்த அபாயத்தில் உள்ளது. இதற்கான காரணம், சமையல் எரிவாயுவின் உள்ளடக்கங்களின் அளவுகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றம் ஆகும்.

நுகர்வோரான பொதுமக்களின் உயிர் இவ்வாறான வெடிப்பு சம்பவங்களால் அச்சுறுத்தலுக்கு உள்ளாவதற்கு இடமளிக்காமல், இது தொடர்பில் துறைசார் நிபுணர்களைக் கொண்டு விசேட பரிசோதனைகளை முன்னெடுக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

அது மாத்திரமின்றி குறித்த பரிசோதனை அறிக்கைகளை எவ்வித ஒழிவு மறைவும் இன்றி நாட்டுக்கு வெளிப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்.

மேலும் சமையல் எரிவாயு விடயத்தில் மக்களின் உயிரை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கும் நிறுவனங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.

No comments:

Post a Comment