துறைமுகத்தில் அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய ஆயிரம் கொள்கலன்கள், டொலர் நெருக்கடியால் விடுவிக்க முடியாத சிக்கல் நிலை என்கிறார் அமைச்சர் பந்துல - News View

Breaking

Thursday, November 25, 2021

துறைமுகத்தில் அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய ஆயிரம் கொள்கலன்கள், டொலர் நெருக்கடியால் விடுவிக்க முடியாத சிக்கல் நிலை என்கிறார் அமைச்சர் பந்துல

(இராஜதுரை ஹஷான்)

டொலர் நெருக்கடி காரணமாக உருளைக்கிழங்கு, பருப்பு, வெங்காயம், சீனி, நெத்தலி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய ஆயிரம் கொள்கலன்களை துறைமுகத்தில் இருந்து விடுவிக்க முடியாத சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாகவே சந்தையில் அத்தியாவசியப் பொருட்களின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எடுத்துரைத்துள்ளார்.

துறைமுகத்தில் சிக்கியுள்ள அத்தியாசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை விரைவாக விடுவிப்பதற்கு நிதியமைச்சு உரிய நடவடிக்கைகளை துரிதமாக முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் டொலர் பிரச்சினை மற்றும் அதற்கான தீர்வு குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டதுடன் பல்வேறு தரப்பினரது ஆலோசனைகளும் பெற்றுக் கொள்ளப்பட்டன.

டொலர் நெருக்கடி காரணமாக பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பில் வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெளிவுபடுத்தினார்.

அத்துடன் அமைச்சர்களான நிமல் சிறிபாலடி சில்வா, பஷில் ராஜபக்ஷ, வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில ஆகியோர் டொலர் பிரச்சினை தொடர்பில் தமது யோசனைகளை முன்வைத்துள்ளனர்.

டொலர் பிரச்சினைக்கு தீர்வு காணும் நடவடிக்கைகள் மத்திய வங்கியின் ஆலோசனைக்கு அமைய முன்னெடுக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் மாதம் முதல் மாற்றுத்திட்டங்களை செயற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

டொலர் பிரச்சினை காரணமாக அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய 1000 ஆயிரம் கொள்கலன்களை துறைமுகத்தில் இருந்து விடுவிப்பதில் பெரும் சிக்கல் நிலை காணப்படுகிறது. அதன் காரணமாக சந்தையில் அத்தியாவசியப் பொருட்களுக்கான கேள்வி அதிகரிக்கப்பட்டுள்ளன.

ஆகவே அக் கொள்கலன்களை விரைவாக விடுவிக்க உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன நிதிமைச்சரிடம் யோசனை முன்வைத்துள்ளார். உரிய தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து எதிர்வரும் நாட்களில் அப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக நிதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment