அரசி, சீனி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கான நிர்ணய விலை அறிவிக்கப்படும் : அரசியல் இலாபத்தை தேட எதிர்க்கட்சியினர் முயற்சிப்பதால் உண்மைக் காரணிகள் மறைப்பு - அமைச்சர் பந்துல - News View

Breaking

Friday, November 5, 2021

அரசி, சீனி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கான நிர்ணய விலை அறிவிக்கப்படும் : அரசியல் இலாபத்தை தேட எதிர்க்கட்சியினர் முயற்சிப்பதால் உண்மைக் காரணிகள் மறைப்பு - அமைச்சர் பந்துல

(இராஜதுரரை ஹஷான்)

அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுப்படுத்துவதற்கு அரச மற்றும் தனியார் துறையினரை ஒன்றிணைத்து பொது கொள்கைத் திட்டத்தை வகுக்க திட்டமிடப்பட்டுள்ளது. அரசி, சீனி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கான நிர்ணய விலை இன்னும் இரண்டு வார காலத்திற்குள் அறிவிக்கப்படும் என வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்திற்கு பின்னரான பொருளாதார பாதிப்பை 2029 ஆம் ஆண்டு வரையில் எதிர்கொள்ள நேரிடும். அரசியல் நோக்கத்திற்காக மக்களிடம் பொய்யுரைக்க முடியாது எனவும் குறிப்பிட்டார்.

அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், அரசாங்கத்தின் தவறான பொருளாதார முகாமைத்துவத்தினால் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.

அனைத்து விடயங்களிலும் அரசியல் இலாபத்தை தேட எதிர்க்கட்சியினர் முயற்சிப்பதால் உண்மை காரணிகள் மக்கள் மத்தியில் மறைக்கப்படுகின்றன.

தேசிய மட்டத்தில் உற்பத்தி செய்யப்படாத இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய பொருட்களுக்கான கேள்வி தொடர்ச்சியாக அதிகரித்துள்ளன.

இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் உற்பத்தி குறைவடைந்துள்ளதால் அதற்கான தேவை அதிகரிக்கப்பட்டுள்ளது.

மறுபுறம் போக்கு வரத்து சேவை கட்டணம் கொவிட் தாக்கத்தின் பின்னரான காலப்பகுதியில் பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளன.

இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய பொருட்களின் விலையை தேசிய மட்டத்தில் தீர்மானிக்க முடியாது என்பதை தெளிவாக குறிப்பிட்டுள்ளோம்.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்திற்கு பின்னரான காலப்பகுதியில் பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை 2029ஆம் ஆண்டு வரையில் எதிர்கொள்ள நேரிடும், எவர் ஆட்சியில் இருந்தாலும் அதனை வெற்றி கொள்ள முடியாது.

அரசியல் நோக்கத்திற்காக மக்களிடம் பொய்யுரைக்க முடியாது. அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுப்படுத்துவதற்கு அரச மற்றும் தனியார் துறையினரை ஒன்றிணைத்து பொது கொள்கைத் திட்டத்தை வகுக்க திட்டமிட்டுள்ளோம்.

அரிசி, சீனி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கான நிர்ணய விலை இன்னும் இரண்டு வாரகாலத்திற்குள் அறிவிக்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment