போராட்டங்கள் தீவிரமடைந்தால் நாட்டை மீண்டும் முடக்க நேரிடும் - வசந்த யாப்பா பண்டார - News View

About Us

About Us

Breaking

Friday, November 5, 2021

போராட்டங்கள் தீவிரமடைந்தால் நாட்டை மீண்டும் முடக்க நேரிடும் - வசந்த யாப்பா பண்டார

(இராஜதுரை ஹஷான்)

அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்ட போராட்டங்கள் தீவிரமடைந்தால் இன்னும் இரண்டு மாத காலத்திற்குள் நாட்டை மீண்டும் முடக்க நேரிடும். மீண்டுமொரு நாடு தழுவிய முடக்கம் பொருளாதாரத்திற்கும் மாத்திரமல்ல நாட்டு மக்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டார தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (5) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், பொருளாதாரத்தில் முன்னேற்றமடைந்த நாட்டை 2019ஆம் ஆண்டு ஒப்படைத்ததை போன்று எதிர்த்தரப்பினர் தற்போது அரசாங்கத்திற்கு எதிராக கருத்துரைக்கிறார்கள்.

துரதிஷ்டவசமான கொவிட்-19 வைரஸ் தாக்கம் கடந்த 2 வருட காலமாக தாக்கம் செலுத்துகிறது. அதன் காரணமாக ஏற்றுமதி பொருளாதாரமும், சுற்றுலாத்துறை சேவை கைத்தொழிலும் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

பொருளாதாரம் மற்றும் சமூக கட்டமைப்பில் முன்னேற்றமடைந்த நாடுகள் கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இன்று வரை அதன் தாக்கத்தை எதிர்கொள்கின்றன. இருப்பினும் இலங்கை கொவிட்-19 வைரஸ் பரவலை வெற்றிகரமாக கட்டுப்படுத்தியுள்ளது.

கொவிட்-19 தடுப்பூசி செலுத்தவில் செல்வந்த நாடுகளை காட்டிலும் இலங்கை முன்னிலை வகிக்கிறது. நாட்டின் மொத்த சனத் தொகையில் 80 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் கொவிட் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றுக் கொண்டுள்ளனர். தற்போது முன்னிலை சேவை தரப்பினருக்கு மூன்றாம் கட்டமாக செயலூட்டி (பூஸ்டர்) தடுப்பூசிகளை வழங்குவதற்கான முதற்கட்ட நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.

புது வருட கொவிட் கொத்தணி தீவிரமடைவதற்கு தொழிற்சங்கத்தினரது போராட்டம் காரணமாக காணப்பட்டது. புது வருட கொவிட் கொத்தணியில்தான் அதிக மரணங்கள் பதிவாகின. அதன் தாக்கம் இன்றும் தொடர்கிறது. கொவிட் தாக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மக்கள் தற்போது அன்றாட நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுள்ளார்கள்.

தற்போது அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்ட போராட்டங்கள் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. போராட்டங்களினால் கொவிட் தொற்று தீவிரமடைந்தால் இன்னும் இரண்டு மாத காலத்திற்குள் நாட்டை மீண்டும் முடக்க நேரிடும். அவ்வாறு இடம்பெற்றால் நாடு மாத்திமல்ல பொதுமக்களும் பெரும் பாதிப்புக்களை எதிர்கொள்ள நேரிடும். ஆகவே தொழிற்சங்கத்தினர் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment