உயிர்த்த ஞாயிறு தினப் பயங்கரவாதத் தாக்குதல்களின் சூத்திரதாரிகளை அம்பலப்படுத்தி மக்கள் மத்தியிலுள்ள சந்தேகத்தைக் களைவோம் : எனக்கும், கர்தினாளுக்கும் இடையில் காணப்பட்ட நல்லுறவில் பாதிப்பை ஏற்படுத்த பல்வேறு சூழ்ச்சிகள் அரங்கேறின - சஜித் பிரேமதாஸ - News View

About Us

About Us

Breaking

Friday, November 5, 2021

உயிர்த்த ஞாயிறு தினப் பயங்கரவாதத் தாக்குதல்களின் சூத்திரதாரிகளை அம்பலப்படுத்தி மக்கள் மத்தியிலுள்ள சந்தேகத்தைக் களைவோம் : எனக்கும், கர்தினாளுக்கும் இடையில் காணப்பட்ட நல்லுறவில் பாதிப்பை ஏற்படுத்த பல்வேறு சூழ்ச்சிகள் அரங்கேறின - சஜித் பிரேமதாஸ

(நா.தனுஜா)

உயிர்த்த ஞாயிறு தினப் பயங்கரவாதத் தாக்குதல்கள் இன்றளவிலே நாட்டில் வாழும் கத்தோலிக்கர்கள் உள்ளடங்கலாக அனைத்து மக்கள் மத்தியிலும் சந்தேகத்தையும் பெரும் அதிருப்தியையும் தோற்றுவித்திருக்கின்றது. இந்த நிலை நாட்டிற்கும் தேசிய பாதுகாப்பிற்கும் அரசாங்கத்திற்கும் முற்றிலும் உகந்ததல்ல. ஆகவே பயங்கரவாதத் தாக்குதல்களின் பின்னணியிலுள்ள பிரதான சூத்திரதாரிகளைக் கண்டறிந்து பகிரங்கப்படுத்துவதன் ஊடாக மக்கள் மத்தியிலுள்ள சந்தேகத்தையும் நம்பிக்கையீனத்தையும் களைவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தலைமையில் உருவாகும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையிடம் உறுதியளித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நேற்று வியாழக்கிழமை கொழும்பிலுள்ள பேராயர் இல்லத்தில் வைத்து பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இச்சந்திப்பின்போது பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது பற்றி அவர் மேலும் கூறுகையில், எனக்கும் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை மற்றும் ஏனைய கத்தோலிக்கப் பாதிரிமார்களுக்கும் இடையில் காணப்பட்ட நல்லுறவில் பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான பல்வேறு சூழ்ச்சிகள் கடந்த காலங்களில் அரங்கேறின. அத்தகைய சூழ்ச்சிகள் மற்றும் சதித்திட்டங்கள் தொடர்பில் இச்சந்திப்பின்போது கர்தினாலுக்குத் தெளிவுபடுத்தினேன்.

உயிர்த்த ஞாயிறு தினப்பயங்கரவாதத் தாக்குதல்களினால் சேதமடைந்த அனைத்துத் தேவாலயங்களையும் புனரமைக்கும் பணிகளைப் பொறுப்பேற்றுக் கொண்ட நாங்கள், அதனை உரியவாறு நிறைவேற்றியிருப்பது குறித்தும் அவரிடம் எடுத்துரைத்தேன்.

நான் கத்தோலிக்கர்களின் உரிமைகளை முன்னிறுத்திச் செயற்படுவதில்லை என்றும் அவற்றுக்காகக் குரல் கொடுப்பதில்லை என்றும் கூறி, கடந்த காலத்தில் எனக்கெதிரான மிகப்பாரிய பிரசாரம் முன்னெடுக்கப்பட்டது.

குறிப்பாக உயிர்த்த ஞாயிறு தினப் பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான தகவல்களை வெளியிடுவதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களான ஹரீன் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோருக்கு நான் இடமளிக்கவில்லை என்றும் என்மீது குற்றம் சுமத்தினார்கள். அக்குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையும் இல்லை.

பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் அவர்கள் கருத்துக்களை வெளியிடுவதற்கான முன்னுரிமையையும் வாய்ப்பையும் நான் வழங்கினேன். அதுமாத்திரமன்றி குறித்தவொரு சந்தர்ப்பத்தில் ஹரீன் பெர்னாண்டோவின் இல்லம் பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டபோது, அவருக்கான நான் குரல் கொடுக்கவில்லை என்றும் சிலர் கூறினார்கள். ஆனால் அப்போது ஹரீன் பெர்னாண்டோவின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் நான் முன்னின்று செயற்பட்டேன் என்பதை அவர் நன்கறிவார்.

மேலும் நான் குற்றப் புலனாய்வுப் பிரிவு பிரதானியின் ஆலோசனையின் பிரகாரம் செயற்படுகின்ற எதிர்க்கட்சித் தலைவர் என்றும் சிலர் வதந்திகளைப் பரப்புகின்றார்கள். குற்றப் புலனாய்வுப் பிரிவு பிரதானியுடன் எனக்கு எந்தவொரு தொடர்புகளும் இல்லை என்பதுடன் அவரது ஆலோசனையைப் பெற்று, அதன்படி செயற்பட வேண்டிய அவசியமும் இல்லை.

உயிர்த்த ஞாயிறுதினப் பயங்கரவாதத் தாக்குதல்கள் இன்றளவிலே நாட்டில் வாழும் கத்தோலிக்கர்கள் உள்ளடங்கலாக அனைத்து மக்கள் மத்தியிலும் சந்தேகத்தையும் நம்பிக்கையீனத்தையும் பெரும் அதிருப்தியையும் தோற்றுவித்திருக்கின்றது. இந்த நிலை நாட்டிற்கும் தேசிய பாதுகாப்பிற்கும் அரசாங்கத்திற்கும் முற்றிலும் உகந்ததல்ல.

ஆகவே பயங்கரவாதத் தாக்குதல்களின் பின்னணியிலுள்ள பிரதான சூத்திரதாரிகளைக் கண்டறிந்து பகிரங்கப்படுத்துவதன் ஊடாக மக்கள் மத்தியிலுள்ள சந்தேகத்தையும் நம்பிக்கையீனத்தையும் களைய வேண்டும். தற்போதுள்ள சந்தேகங்களுடன் எம்மால் ஒருபோதும் முன்நோக்கிப் பயணிக்க முடியாது.

ஆகவே உயிர்த்த ஞாயிறு தினப் பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் பக்கச்சார்பற்ற, சுயாதீன விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கம் அதற்கு நடவடிக்கை எடுப்பதுடன் தாக்குதல்களின் பின்னணியிலுள்ள சூத்திரதாரிகளை சட்டத்தின் முன்நிறுத்தி, நீதியை நிலைநாட்டும் என்று நாட்டு மக்களுக்கு உறுதியளிக்கின்றேன் என்று குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment