87 வயதில் முதுகலைப் பட்டம் : கனடாவில் சாதித்த இலங்கை தமிழ் பெண் - News View

Breaking

Wednesday, November 3, 2021

87 வயதில் முதுகலைப் பட்டம் : கனடாவில் சாதித்த இலங்கை தமிழ் பெண்

தமது 87ஆம் வயதில், கனடாவில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் முதுகலைப் பட்டப் படிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார் இலங்கையைச் சேர்ந்த வரதலெட்சுமி ஷண்முகநாதன்.

ஒவ்வொரு சொற்களுக்கும் இடையில் நல்ல இடைவெளி விட்டு, நிதானமாக தன் எண்ணங்களை ஒருங்கிணைத்துப் பேசும் இவர்தான், கனடாவின் யார்க் பல்கலைக்கழகத்திலேயே அதிக வயதில் பட்டம் பெறுபவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரராக உள்ளார்.

இலங்கையின் வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள வேலனை (Velanai) கிராமத்தில் பிறந்த வரதலெட்சுமி, உலகிலுள்ள நான்கு கண்டங்களில் மாணவர்களுக்கு பாடம் நடத்தியுள்ளார்.

கல்வி மீதான தீரா காதலோடிருக்கும் வரதலெட்சுமியின் கற்றல் வாழ்கை அத்தனை சீராக இல்லை. இன்டர்மீடியட் தேர்வில் நல்ல மதிப்பெண்களோடு தேர்ச்சி பெற்ற போதிலும், இன, பாலின - சிறுபான்மை மாணவர்களுக்கு அளவான இடங்களே இருந்ததால் அவரால் இலங்கையில் தன் கல்வியைத் தொடர முடியவில்லை. தன் கல்வியைத் தொடர அவர் கடல் தாண்டி தமிழ் நாட்டுக்கு வந்தார்.

"கல்லூரி படிப்புக்கு என்னை வெளிநாட்டுக்கு அனுப்புமாறு என் ஆசிரியர்களில் ஒருவர் என் பெற்றோர்களுக்கு அறிவுரை வழங்கினார். எனவே அவர்கள் என்னை இந்தியாவுக்கு அனுப்பினர்" என்கிறார் வரதலெட்சுமி.

தமிழ் நாட்டிலுள்ள சென்னை பல்கலைக்கழகத்தில்தான் அவர் தன் இளங்கலை பட்டப் படிப்பை நிறைவு செய்தார். இலங்கைக்குத் திரும்பியவர் உள்ளூர் பள்ளியில் குழந்தைகளுக்கு இந்திய வரலாறு மற்றும் ஆங்கிலம் கற்றுக் கொடுத்தார். அப்படியே சிலோன் பல்கலைக்கழகத்தில் டிப்ளமோ இன் எஜுகேஷன் (கல்வியில் பட்டயச் சான்றிதழ்) பெற்றார் என்கிறது யார்க் பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு.

அடுத்து என்ன படிப்பது, என பயில்வதில் பெரும் ஆர்வத்தோடு இருந்தவரின் கல்வி, அவரது தந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட போது தடைப்பட்டது. அவர் தன் குடும்ப விவகாரங்களை கவனிக்க வேண்டி இருந்தது. பிறகு ஓர் ஆசிரியரை திருமணம் செய்து கொண்டு இலங்கையை விட்டு வெளியேறினார்.

அப்படியே எத்தியோபியா, சியாரா லியோன், நைஜீரியா, பிரிட்டன் என பல நாடுகளில் வாழ்ந்த பின் 2004ம் ஆண்டு கனடா வந்தடைந்தார்.

முதுமை மேகம் சூழத் தொடங்கி விட்டது, ஆனாலும் வரதலெட்சுமியின் கற்றல் ஆர்வம் குறையவில்லை. யார்க் பல்கலைக்கழகத்தில் மூத்த குடிமக்களுக்கு பயிற்சிக் கட்டணச் சலுகை இருப்பதை அறிந்து கொண்டார்.

"நான் அரசியல் ஆர்வத்தோடுதான் வளர்ந்தேன், எனக்கு ஐந்து வயதிருக்கும் போது சிலோனில் (பிற்காலத்தில் இலங்கை என பெயர் மாற்றப்பட்டது) இரண்டாம் உலகப் போர் தொடங்கியது. பல நாடுகள் போர் மற்றும் வன்முறையில் ஈடுபடும் போது அதன் தாக்கம் கடல் கடந்து எதிரொலிக்கும் என்பதை புரிந்து கொண்டேன்" என தன் 85ஆவது வயதில், யார்க் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப் படிப்புக்கு விண்ணப்பம் சமர்பிக்கும் போது எழுதியுள்ளார் வரதலெட்சுமி.

அவரை யார்க் பல்கலைக்கழக நிர்வாகம், 2019ஆம் ஆண்டு அவரை மாணவராக சேர்த்துக் கொண்டது. ஆசிரியையாக வகுப்பறையில் நின்றவர், தன் பேரன் பேத்தி வயதுடைய மாணவர்களோடு 30 ஆண்டுகளுக்குப் பிறகு சரிசமமாக அமர்ந்து பாடம் படித்தார்.

"பல்கலைக்கழக வளாகத்துக்குள் செல்வது எனக்கு பெரிய மாற்றமாக இருந்தது, ஹால்வேயில் நடப்பது, நூலகத்தில் படிப்பது, இளைஞர்களைப் போல வேலை செய்வது. எல்லாம் எனக்கு பிடித்திருந்தது" என்கிறார் வரதலெட்சுமி.

கார் ஓட்டுநர்கள் அவரை பேராசிரியர் என கருதியுள்ளனர், அவர் மாணவர் என அறிந்ததும் அவர்கள் ஆச்சர்யப்பட்டுள்ளனர். "நான் ஒரு மாணவர் என்பதில் மிகவும் பெருமைப்படுகிறேன். வாழ்நாள் முழுவதும் கற்க வேண்டும் என்பதை நான் நம்புகிறேன், மூத்த குடிமக்கள் தங்கள் மீது சமூகம் விதித்துள்ள வரம்புகளைக் கடந்து கற்க வேண்டும்" என்கிறார்.

வரதலெட்சுமி தமது 50ஆவது வயதில் லண்டனின் பிர்க்பெக் கல்லூரியில், 'இங்கிலாந்திலுள்ள இலங்கைத் தமிழர்களின் மொழி சார் அணுகுமுறை (The attitudes of Sri Lankan Tamils in England towards language)' என்கிற தலைப்பில் தமது முதல் முதுகலை பட்டப் படிப்பை நிறைவு செய்தார்.

இலங்கையில் தேச அமைதியைக் கட்டமைப்புக்கும் நல்லிணக்க மீட்டுருவாக்கத்திற்குமான அமைதி (non-violence for national peace building and reconciliation in Sri Lanka) குறித்து யார்க் பல்கலைக்கழகத்தில் படிக்க முடிவு செய்தார்.

வரதலெட்சுமி தன் முக்கிய ஆய்வை (சிவில் போருக்கான காரணங்கள், அமைதிக்கான செயல்பாடுகள், இலங்கையில் அமைதிக்கான வாய்ப்பு) ஸூம் காணொளி மூலம் சமர்பித்து கேள்விகளுக்கு விடையளித்தார்.

"போர் முடிவுக்கு வந்திருக்கலாம், ஆனால் இலங்கை தமிழர்களின் பிரச்சினைகள் முறையாக தீர்க்கப்படாத வரை அமைதி திரும்பாது, அதிகாரப் பகிர்வு மற்றும் அரசியலமைப்பைப் பகிர்ந்து கொள்வது அமைதியக் கொண்டு வரும்" என தன் ஆய்வை நிறைவு செய்துள்ளார்.

உள்நாட்டுப் போருக்கு பிந்தைய இலங்கை மற்றும் அமைதிக்கான வாய்ப்புகள் ஆகியவை குறித்து தமது ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் நூல் ஒன்றை எழுதவும் இவர் முடிவு செய்துள்ளார்.

No comments:

Post a Comment