69 இலட்சம் மக்களின் நம்பிக்கையை பெற்ற ஜனாதிபதியை பைத்தியக்காரன், சேர் பெயில் என கூறுவது நியாயமா? - அமைச்சர் பிரசன்ன - News View

About Us

About Us

Breaking

Tuesday, November 23, 2021

69 இலட்சம் மக்களின் நம்பிக்கையை பெற்ற ஜனாதிபதியை பைத்தியக்காரன், சேர் பெயில் என கூறுவது நியாயமா? - அமைச்சர் பிரசன்ன

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

69 இலட்சம் மக்களின் நம்பிக்கையை பெற்ற ஜனாதிபதியை பைத்தியக்காரன் எனவும், சேர் பெயில் எனவும் கூறுவது நியாயமா? இது ஜனாதிபதியை அவமதிக்கும் செயற்பாடு மட்டுமல்ல அவரது பிம்பத்தை சிதைக்க எடுக்கும் சதி, இதனை செய்ய வேண்டாம் என்கிறார் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க.

பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை, வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான இறுதிநாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டுள்ளது. நாட்டின் விலை வாசி அதிகரித்துள்ளது. மக்களுக்கு விசேட சலுகைகளை எம்மால் வழங்க முடியாது. மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகளை கூட நிறுத்திவிட்டு நெருக்கடிகளுக்கு மத்தியில் பயணிக்க வேண்டியுள்ளது. உலக நாடுகளில் இவ்வாறான தீர்மானங்களை முன்னெடுக்கின்றனர்.

விலையேற்றத்தை குறைக்க வேண்டும் என்றால் சர்வதேச சந்தையில் பொருட்களின் விலை குறைவடைய வேண்டும். அதேபோல் ஏனைய துறைகள் வழமைக்கு திரும்ப வேண்டும். குறிப்பாக சுற்றுலாத்துறை மீண்டும் வழமைக்கு திரும்ப வேண்டும்.

சுற்றுலாத் துறையுடன் தொடர்புபட்ட மூன்று மில்லியன் மக்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். பயங்கரவாத காலத்தில் கூட நாட்டில் சுற்றுலாத்துறை தடைப்படவில்லை. ஆனால் கொவிட் காலத்தில் முற்றுமுழுதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

எனினும் அதில் இருந்து மீண்டு வருகின்றோம். நாட்டுக்கான சுற்றுலாத் துறையில் கட்டுப்பாடுகளை விதித்து நிலைமைகளை மீட்டெடுக்க முடியாது. எனவேதான் தடுப்பூசிகளை முழுமையாக வழங்கி நாட்டினை வழமைக்கு கொண்டுவர அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.

கடந்த இரண்டு மாதங்களில் சுற்றுலாத் துறையினர் மீண்டும் நாட்டுக்கு வருகை தர ஆரம்பித்துள்ளனர். இலங்கை மீதான நம்பிக்கையில், கொவிட் அச்சுறுத்தல் நிலைமைகள் குறைவாக காணப்படும் நாடாக எம்மால் இதனை முன்னெடுக்க முடிந்துள்ளது.

69 இலட்சம் மக்களின் நம்பிக்கையை பெற்ற ஜனாதிபதியை பைத்தியக்காரன் என கூறுகின்றனர். சேர் பெயில் என்கின்றனர். இது ஜனாதிபதியை அவமதிக்கும் செயற்பாடாகும். இது நியாயமானதா என எதிர்க்கட்சியிடம் கேட்கின்றோம்.

நாட்டின் கொவிட் வைரஸ் பரவலை நாம் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கும் வேளையில் இவர்கள் கூட்டம் நடத்தி கொவிட் வைரஸை பரப்ப நினைகின்றனர்.

இன்று மனோ கணேசனுக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளது. அவருடன் தொடர்புபட்ட பலருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. அவரிடம் இருந்து கொத்தணி உருவாகியுள்ளது. இவ்வாறான நிலையில் ஜனாதிபதியை அவமதித்து அவரது பிம்பத்தை சிதைக்கவே முயற்சிக்கின்றனர் என்றார்.

No comments:

Post a Comment