விசாரணைகள் ஆரம்பம் : நீதிமன்றத்தில் ஒளிபரப்பாகிய அசாத் சாலியின் ஊடக சந்திப்பு : இரு குற்றச்சாட்டுக்கள் : 56 சாட்சியாளர்கள் - News View

Breaking

Wednesday, November 3, 2021

விசாரணைகள் ஆரம்பம் : நீதிமன்றத்தில் ஒளிபரப்பாகிய அசாத் சாலியின் ஊடக சந்திப்பு : இரு குற்றச்சாட்டுக்கள் : 56 சாட்சியாளர்கள்

(எம்.எப்.எம்.பஸீர்)

மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலிக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் சாட்சி விசாரணைகள் நேற்று ஆரம்பமானது. இதன்போது வழக்குடன் தொடர்புபட்ட, அசாத் சாலி கடந்த 2021 மார்ச் 10 ஆம் திகதி நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பு முழுமையாக நீதிமன்றில் ஒளிபரப்பு செய்யப்பட்டமை விஷேட அம்சமாகும்.

நேற்று சாட்சி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், விளக்கமறியல் உத்தரவின் கீழ் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் கட்டணம் செலுத்தும் சிகிச்சைப் பிரிவில், சிறைக் காவலர்களின் பாதுகாப்பின் கீழ் சிகிச்சைப் பெற்று வரும் அசாத் சாலி நேற்று 2 ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றுக்கு, சக்கர நாட்காலியில் ஆயுதம் தரித்த சிறைக் காவலர்களின் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டார்.

இந்நிலையிலேயே கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா முன்னிலையில், அசாத் சாலிக்கு எதிரான சாட்சி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

வழக்குத் தொடுநர் சட்டமா அதிபர் சார்பில் மன்றில் ஆஜராகிய சிரேஷ்ட அரச சட்டவாதி வசந்த பெரேராவின் நெறிப்படுத்தலில் சாட்சியம் பதிவு செய்யப்பட்டதுடன், அசாத் சாலிக்காக மன்றில் அசான் நாணயக்கார, சரித்த குணரத்ன ஆகிய சட்டத்தரணிகளுடன் ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்னவால் சாட்சிகள் குறுக்கு விசாரணை செய்யப்பட்டன.

வழக்கு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட போது, முதல் சாட்சியாளராக பாராளுமன்ற உறுப்பினர் மொஹம்மட் புவாத் மொஹம்மட் முசம்மிலிடம் சாட்சியம் பெறப்பட்டது.

சிரேஷ்ட அரச சட்டவாதி வசந்த பெரேராவின் கேள்விகளுக்கு பதிலளித்தவாறு முசம்மில் சாட்சியமளித்ததுடன், 2 தொலைக்காட்சிகளின் பெயர்களைக்கூறி, குறித்த தொலைக்காட்சி அலைவரிசைகளின் செய்திகளில் கடந்த 2021 மார்ச் 10 ஆம் திகதி செய்தி அறிக்கைகளை பார்த்த பின்னரேயே அசாத் சாலிக்கு எதிராக முறைப்பாடு செய்ய தீர்மானித்ததாக குறிப்பிட்டார்.

ஊடக சந்திப்பு முழுமையாக ஒளிபரப்பு

அசாத் சாலிக்கு எதிரான இந்த விவகாரத்தில் முதல் முறைப்பாட்டை முன் வைத்திருந்த பாராளுமன்ற உறுப்பினர் முசம்மில், முறைப்பாட்டுடன் அசாத் சாலியின் குறித்த 2021.03.10 ஆம் திகதி ஊடக சந்திப்பின் 47 நிமிடங்களுக்கும் அதிகமான நீண்ட ஊடக சந்திப்பின் இறுவெட்டொன்றினையும் இணைத்திருந்தார்.

சாட்சி விசாரணைகளிடையே அந்த முழுமையான ஊடக சந்திப்பும் நீதிமன்றில் ஒளிபரப்பப்பட்டது.

அந்த ஊடக சந்திப்பில் நாட்டில் தற்போதுள்ள பொருளாதார நிலைமையுடன் தொடர்புபட்ட பிரச்சினைகள், காடழிப்பு, வெளிநாடுகளுக்கு காணி விற்பனை, இனவாத நடவடிக்கைகள், ஜனாசா எரிப்பு நிறுத்தப்பட்டதன் பின்னணி, முஸ்லிம் தனியார் சட்ட திருத்தம் உள்ளிட்ட பல விடயங்கள் தெளிவுபடுத்தப்ப்ட்டு தேசிய ஒற்றுமைக்கான அழைப்பு விடுக்கப்படுவது பதிவாகியிருந்தது. இதனைத் தொடர்ந்து சாட்சியாளர்களிடம் அதனை மையப்படுத்தி கேள்விகளும் தொடுக்கப்பட்டிருந்தன.

குர்ஆன், ஹதீஸே முஸ்லிம்களின் வாழ்க்கை வழிமுறை : முசம்மில் சாட்சியம்

'எங்கள் சட்டம் எங்களுக்கு உங்களது சட்டம் உங்களுக்கு குர்ஆன், ஹதீஸ், ஷரீஆ எங்கள் சட்டம் எனில் நாம் அதனை மதிக்கின்றோம். மாற்றமாக அரசின் சட்டத்தை பார்க்க வேண்டியதில்லை. குர்ஆனையும் நபிகளாரின் ஹதீசையும் தவிர வேறு சட்டங்கள் எங்களுக்கு இல்லை' என குறித்த ஊடக சந்திப்பின் போது அசாத் சாலி கூறியதாக குற்றப்பத்திரிகையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்த நிலையில், அதனை மையப்படுத்தி சிரேஷ்ட அரச சட்டவாதியினால் பாராளுமன்ற உறுப்பினர் மொஹம்மட் முசம்மிலிடம் கேள்விகள் எழுப்பப்பட்டன.

அவற்றுக்கு பதிலளிக்கும் போது, மொஹம்மட் முசம்மில் தான் ஒரு முஸ்லிம் மற்றும் இஸ்லாத்தை பின்பற்றும் நபர் என்பதை சாட்சியமாக அளித்த நிலையில், முஸ்லிம்களின் வாழ்க்கை வழிமுறை அல்குர்ஆன், ஹதீஸ் மற்றும் ஷரீஆவின் அடிப்படையிலானது என தெரிவித்தார். முஸ்லிம்கள் சிறு வயது முதல் அதன் பிரகாரமே வளர்க்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனினும் பிரதிவாதியான அசாத் சாலி, குறிப்பிட்ட கருத்துக்கள் நாட்டின் சட்டத்தை நிராகரிப்பதாகவும், முஸ்லிம்களுக்கும் ஏனைய சமூகத்தினருக்கும் இடையே மோதலை தூண்டும் வண்ணமும் இருந்தமையால் முறைப்பாடு செய்ததகவும் அவர் குறிப்பிட்டார்.

முசம்மிலையும் விமலையும் விமர்சித்ததால் முறைப்பாடா?

இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் மொஹம்மட் முசம்மில், அசாத் சாலியின் முழுமையான ஊடக சந்திப்பை பார்வையிட்ட பின்னர் ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்னவால் குறுக்கு விசாரணை செய்யப்பட்டார்.

ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்னவின் குறுக்குக் கேள்விகளின் போது, ஊடக சந்திப்பில் முசம்மிலையும் அவர் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சியின் தலைவர் விமல் வீரவன்சவையும் பிரதிவாதி அசாத் சாலி கடுமையாக விமர்சனம் செய்வது உள்ளடக்கப்பட்டிருந்த நிலையில், அதன் காரணமாக சந்தர்ப்பம் பார்த்து முறையிடப்பட்டுள்ளதாக பிரேரிக்கப்பட்டது. அதனை சாட்சியாளர் முசம்மில் மறுத்தார்.

தேசிய ஒற்றுமை குறித்து தெரிவித்துள்ளார் : ஒப்புக் கொண்ட முசம்மில்

அத்துடன் அசாத் சாலியின் பூரண ஊடக சந்திப்பில் தேசிய ஒற்றுமை தொடர்பில் பல இடங்களில் வலியுறுத்தப்பட்டுள்ளதாக ஒப்புக் கொண்ட அவர், குறிப்பிட்ட சட்டம் தொடர்பில் கூறும் விடயம் தனது மனதில் ஏற்படுத்திய உணர்வுகளால் முறைப்பாடு செய்ய சென்றதாக குறிப்பிட்டார். இதற்காக சட்டத்தரணி ஒருவரின் உதவியுடன் தானே முறைப்பாட்டுக் கடிதத்தை தயார் செய்ததாகவும் அவர் கூறினார்.

தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செய்தியினாலேயே முறையிடச் சென்றேன்

இதனையடுத்து 2 ஆவது சாட்சியாளராக பாராளுமன்ற உறுப்பினர் நிமல் பியதிஸ்ஸ சாட்சியமளித்தார்.

தான் அசாத் சாலியின் பூரண ஊடக சந்திப்பை பார்வையிடவில்லை எனவும், 3 தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான செய்திகள், யூ ரியூப்பில் இருந்த சிறு பகுதிகளை பார்வை இட்ட பின்னர், அவர் நாட்டின் சட்டத்துக்கு சவால் விடுப்பதாக தோன்றியதால் முறையிட்டதாக சாட்சியமளித்தார்.

எனினும் குறுக்கு விசாரணைகளின் போது, அசாத் சாலி 'எங்கள் சட்டம் எங்களுக்கு உங்கள் சட்டம் உங்களுக்கு' எனும் கூறும் பகுதியானது, நாட்டில் உள்ள தேசவழமை சட்டம், கண்டியச் சட்டம், முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டம் போன்ற தனியார் சட்டங்களை மையப்படுத்தி முன் வைக்கப்பட்டது அல்லவா என வினவப்பட்டது.

அதற்கு பதிலளித்த சாட்சியாளரான பாராளுமன்ற உறுப்பினர் நிமல் பியதிஸ்ஸ தொலைக்காட்சி செய்திகளில் தான் பார்த்தவை ஊடாக தனக்கு அவ்வாறான எண்ணப்பாடு தோன்றவில்லை என தெரிவித்தர்.

அத்துடன் அசாத் சாலியின் ஊடக சந்திப்பில் கூறப்பட்ட, தேசிய ஒற்றுமை, உயிர்த்த ஞாயிறு தக்குதல்களுக்கு எதிராக அசாத் சாலியும், உலமா சபையும் செய்த முறைப்பாடுகள் உள்ளிட்ட எந்த விடயங்கள் தொடர்பிலும் தான் அறிந்திருக்கவில்லை எனவும் அவை தான் பார்த்த செய்திகளில் ஒளிபரப்பட்டிருக்கவில்லை எனவும் சாட்சியாளர் மன்றில் குறிப்பிட்டார்.

இந்நிலையிலேயே இரு சாட்சியாளர்களின் சாட்சி விசாரணைகள் நிறைவடைந்த நிலையில், மேலதிக சாட்சி விசாரணைகள் 9 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. 9 ஆம் திகதி 3,5,6,7 ஆம் சாட்சியாளர்களுக்கு மன்றில் ஆஜராக நீதிமன்றம் அறிவித்தது. அதுவரை அசாத் சாலியின் விளக்கமறியலும் நீடிக்கப்பட்டுள்ளது.

மேல் நீதிமன்ற வழக்கு

முன்னதாக அசாத் சாலிக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் சட்டமா அதிபர் எச்.சி./2778/2021 எனும் இலக்கத்தில் கீழ் வழக்குத் தொடுத்துள்ளார். அதில் அசாத் சாலிக்கு எதிராக இரு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. அந்த வழக்கே நேற்று விசாரணைக்கு வந்தது.

குற்றச்சாட்டுக்கள்

கடந்த 2021 ஆம் ஆண்டு மார்ச் 9 ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த நாளொன்றில், கொழும்பு மேல் நீதிமன்ற அதிகார எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஊடக சந்திப்பொன்றினை நடாத்தி மத, இன பேதங்களை தோற்றுவிக்கும், வன்மத்தை தூண்டும் வகையில் கருத்து வெளியிட்டதாக கூறி 1988 ஆம் ஆண்டின் 22 ஆம் இலக்க சட்டம் மற்றும் 1982 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க சட்டங்களால் திருத்தப்பட்ட 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாத தடை சட்டத்தின் 2 (1) ஏ பிரிவுடன் இணைத்து பர்க்க வேண்டிய 2 (2) ( ஈ ) அத்தியாயத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றம் ஒன்றினை அசாத் சாலி புரிந்துள்ளதாக முதல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

ஐ.சி.சி.பி.ஆர். இன் கீழும் குற்றச்சாட்டு

அத்துடன் இதே சம்பவம் காரணமாக 2007 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க சிவில், அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச இணக்கப்பாட்டு சட்டத்தின் (ஐ.சி.சி.பி.ஆர்.) 3 (1) ஆம் உறுப்புரையுடன் இணைத்து பர்க்க வேண்டிய 3 (3) ஆம் உறுப்புரையின் கீழ் தண்டனைக்குரிய குற்றம் ஒன்றினை அசாத் சாலி புரிந்துள்ளதாக அவர் மீது முன் வைக்கப்பட்டுள்ள இரண்டாவது குற்றச்சாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

56 சாட்சியாளர்கள்

இக்குற்றச்சாட்டுக்களை நிரூபிப்பதற்காக சட்டமா அதிபரால் 56 சாட்சியாளர்களின் பெயர் பட்டியல் மேல் நீதிமன்றுக்கு பட்டியலிட்டு கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் சான்றுப் பொருட்களாக இறுவெட்டுக்கள், மெமரி சிப், ஊடக சந்திப்பு பிரதி, கடிதம் ஒன்று ஆகியனவும் சட்டமா அதிபரால் பட்டியலிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment