50 இலட்சம் பஞ்சாங்கங்களை அச்சிட்டு வெளியிட்ட விவகாரம் : பசிலுக்கு எதிரான வழக்கை தொடர்ந்து விசாரணை செய்ய நீதிமன்றம் தீர்மானம் - News View

Breaking

Friday, November 12, 2021

50 இலட்சம் பஞ்சாங்கங்களை அச்சிட்டு வெளியிட்ட விவகாரம் : பசிலுக்கு எதிரான வழக்கை தொடர்ந்து விசாரணை செய்ய நீதிமன்றம் தீர்மானம்

(எம்.எப்.எம்.பஸீர்)

அரசாங்கத்துக்கு சொந்தமான பணத்தில் கடந்த 2015 ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில் 50 இலட்சம் பஞ்சாங்கங்களை அச்சிட்டு வெளியிட்டதன் ஊடாக அரசாங்கத்துக்கு இரண்டு கோடி ரூபாவுக்கும் அதிக நட்டம் ஏற்படுத்தியமை தொடர்பில் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் தற்போதைய நிதி அமைச்சருமான பசில் ராஜபக்ஷ, முன்னாள் திவினெகும பணிப்பாளர் தமித் கித்சிறி ரணவக்க ஆகியோருக்கு எதிராக சட்ட மா அதிபர் தாக்கல் செய்துள்ள வழக்கை தொடர்ந்து விசாரணை செய்ய நீதிமன்றம் நேற்று தீர்மானித்தது.

அதன்படி எதிர்வரும் டிசம்பர் முதலாம், 2 ஆம் திகதிகளில் இந்த வழக்கின் சாட்சி விசாரணைகளை முன்னெடுக்க நீதிமன்றம் தீர்மானித்தது.

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக இந்த வழக்கை முன்னெடுத்து செல்வதா இல்லையா என்பது குறித்து நேற்று 11 ஆம் திகதி அறிவிப்பதாக கடந்த 5 ஆம் திகதி சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்ருக்கு அறிவித்திருந்தார்.

அது குறித்த நடவடிக்கைகளுக்காகவே நேற்று இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தொட்டவத்த முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

நேற்று சட்டமா அதிபர் சார்பில் மன்றில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரால் சுதர்ஷன டி சில்வா, தான் இந்த வழக்கில் மேலும் சில சாட்சியாளர்களின் சாட்சியங்களை நெறிப்படுத்த எதிர்ப்பார்ப்பதாக தெரிவித்தார்.

இதன்போது மன்றில் விடயங்களை சுட்டிக்காட்டிய நீதிபதி தமித் தொட்டவத்த, நினைத்த நேரத்தில் அவ்வப்போது சாட்சியாளர்களை அழைத்து சாட்சியம் பெற சட்டத்தில் ஏற்பாடுகள் இல்லை என தெரிவித்ததுடன், இந்த வழக்கானது கடந்த 2015 இல் தாக்கல் செய்யப்பட்ட பழைய வழக்கு என்பதையும் நினைவுபடுத்தினார்.

இந்நிலையில், இவ்வழக்கின் விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுக்க தாம் தீர்மானிப்பதாகவும், சட்டமா அதிபருக்கு வழக்கின் சாட்சி விசாரணைகளை முன்னெடுத்து செல்லாதிருப்பது தொடர்பில் எந்த சந்தர்ப்பத்திலேனும் தீர்மானம் எடுத்து நீதிமன்றுக்கு அறிவிக்க முடியும் எனவும் நீதிபதி சுட்டிக்காட்டினார்.

அதன்படியே வழக்கின் சாட்சி விசாரணைகள் எதிர்வரும் டிசம்பர் 1, 2 ஆம் திகதிகளுக்கு ஒத்தி வைக்கப்பட்டன.

திவி நெகும் திணைக்களத்துக்கு சொந்தமான 29,400,000.00 ரூபாவை, தேர்தல்கள் ஆணையாளரின் சுற்று நிருபத்தையும் மீறும் வகையில் கடந்த 2015 ஆம் ஆண்டுக்கான பஞ்சாங்கங்கள் அச்சிடப்பட்டுள்ளதாகவும் இதனூடாக அரசாங்க பணம் விரயம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறி 5 குற்றச்சாட்டுக்களின் கீழ் அந்த குற்றப் பத்திரிகை பசில் ராஜபக்ஹ, கித் சிறி ஜயலத் அகையோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தண்டனை சட்டக் கோவையின் 386 ஆவது அத்தியாயத்தின் கீழும் தண்டனை சட்டக் கோவையின் 32 ஆவது அத்தியாயத்துடன் இனைத்து கூறப்படும் 1982 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க பொது சொத்து துஷ்பிரயோக சட்டத்தின் கீழும் இந்த குற்றச்சடடுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

எனினும் அந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தாம் சுற்றவாளிகள் என பசில் ராஜபக்ஷவும் முன்னாள் திவினெகும பணிப்பாளர் தமித் கித்சிறி ரணவக்கவும் கடந்த தவணையில் அறிவித்தனர்.

இதனையடுத்து வழக்கின் 6 ஆவது சாட்சியாளராக பெயரிடப்பட்டிருந்த , சமுர்த்தி இராஜாங்க அமைச்சின் மேலதிக செயலர் சம்பிக்க டிலான் களு ஆராச்சியின் சாட்சியம் நெறிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment