ஆப்கானிஸ்தான் தலைநகரை செவ்வாய்க்கிழமை உலுக்கிய இரண்டு குண்டு வெடிப்புகளில் 25 பேர் உயிரிழந்துள்ளதுடன், 50 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
பாதுகாப்பு அமைச்சகத்தால் நடத்தப்படும் காபூலில் அமைந்துள்ள இராணுவ வைத்தியசாலையான சர்தார் மொஹம்மட் தாவுத் கான் வைத்தியசாலையின் மீதே இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
செவ்வாயன்று பிற்பகல் 400 படுக்கைகள் கொண்ட சர்தார் மொஹம்மட் தாவுத் கான் இராணுவ வைத்தியசாலையின் நுழைவாயிலில் இரண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன, அதைத் தொடர்ந்து கடுமையான துப்பாக்கிச் சூடு நடந்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த தாக்குதலுக்கு உடனடியாக எவரும் பொறுப்பேற்கவில்லை, ஆனால் தலிபான் செய்தித் தொடர்பாளர் இஸ்லாமிய அரசின் ஒரு துணை அமைப்பைக் குற்றம் சாட்டியுள்ளார்.
ஒரு தற்கொலை குண்டுதாரி மற்றும் ஆயுததாரிகள் இந்த தாக்குதலுக்கு பின்னால் இருப்பதாகவும் தலிபான் அதிகாரி பின்னர் கூறினார்.
மோட்டார் சைக்கிளில் வந்த தற்கொலை குண்டுதாரி ஒருவரால் இந்த தாக்குதல் தொடங்கப்பட்டது, அவர் வைத்தியசாலையின் நுழைவாயிலில் தன்னைத்தானே வெடிக்கச் செய்தார்.
மேலும் தாக்குதல் நடத்தியவர்கள் அனைவரும் உயிரிழந்துள்ளனர் என்றும் பெயர் கூறப்படாத அந்த அதிகாரி கூறினார்.
இதேவேளை ஆப்கானிஸ்தானில் உள்ள ஐ.நா.வின் தூதரகம் இந்தத் தாக்குதலைக் கண்டித்ததுடன், அதற்குக் காரணமானவர்கள் பொறுப்பேற்கப்பட வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளது.
ஆகஸ்ட் மாதம் காபூலை தலிபான்கள் கைப்பற்றியதில் இருந்து மசூதிகள் மற்றும் பிற இலக்குகள் மீது தொடர்ச்சியான தாக்குதல்களை இஸ்லாமிய அரசு ஆயுததாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.
No comments:
Post a Comment