நெருக்கடியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி : 2021 உலகக் கிண்ண தொடரில் இலங்கைக்கு இன்று இறுதிப் போட்டி - News View

About Us

About Us

Breaking

Thursday, November 4, 2021

நெருக்கடியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி : 2021 உலகக் கிண்ண தொடரில் இலங்கைக்கு இன்று இறுதிப் போட்டி

(துபாயிலிருந்து நெவில் அன்தனி)

இலங்கைக்கும் நடப்பு சம்பியன் மேற்கிந்தியத் தீவுகளுக்கும் இடையிலான குழு 1 இருபது 20 உலகக் கிண்ண சுப்பர் 12 சுற்று கிரிக்கெட் போட்டி அபுதாபியில் இன்று இரவு நடைபெறவுள்ளது.

அரை இறுதி வாய்ப்பை ஏற்கனவே இழந்துவிட்ட இலங்கை தனது கடைசி போட்டியில் ஆறுதல் வெற்றி ஒன்றை பெறுவதை குறியாகக் கொண்டு மேற்கிந்தியத் தீவுகளை இன்று எதிர்கொள்ளவுள்ளது.

இப்போட்டி இலங்கைக்கு எத்தகைய தாக்கத்தையும் ஏற்படுத்தாத போதிலும் மேற்கிந்தியத் தீவுகள் பலத்த நெருக்கடியை எதிர்கொள்ளவுள்ளது.

சுப்பர் 12 சுற்றில் பங்களாதேஷை மாத்திரம் வெற்றி கொண்ட இலங்கை அதனைத் தொடர்ந்து அவுஸ்திரேலியா, தென் ஆபிரிக்கா, இங்கிலாந்து ஆகிய அணிகளுடன் தோல்வியைத் தழுவியது.

தென் ஆபிரிக்காவுக்கும் இங்கிலாந்துக்கும் எதிரான போட்டிகளில் இலங்கை திறமையை வெளிப்படுத்திய போதிலும் வீரர்களிடம் போதிய அனுபவம் இன்மை, அணி முகாமைத்துவம் நுட்பரீதியில் வீரர்களை முறையாக வழிநடத்தாமை ஆகிய காரணங்களினால் தோல்விகளைத் தழுவியது. இந்த தோல்விகளுடன் சுப்பர் 12 சுற்றுக்கு அப்பால் செல்லும் வாய்ப்பை இலங்கை இழந்தது.

மேலும் வெகுவாக எதிர்பார்க்கப்பட்ட குசல் பெரேரா (94 ஓட்டங்கள்), அவிஷ்க பெர்னாண்டோ (52) ஆகிய இருவரும் தாங்கள் விளையாடிய 7 போட்டிகளிலும் பிரகாசிக்கத் தவறியமை இலங்கைக்கு பின்னடைவை ஏற்படுத்தியது எனலாம். எனினும் இவர்கள் இருவரையும் இன்றைய போட்டியில் விளையாட வைப்பதற்கு இலங்கை அணி முகாமைத்துவம் தீர்மானித்திருப்பது வியப்பை தருகின்றது.

துடுப்பாட்டத்தில் பெத்தம் நிஸ்ஸன்க, சரித் அசலன்க, பானுக்க ராஜபக்ஷ, வனிந்த ஹசரங்க ஆகியோர் பிரகாசித்திராவிட்டால் இலங்கையின் நிலை மேலும் மோசமடைந்திருக்கும். பந்து வீச்சிலும் வனிற்து ஹசரங்க 14 விக்கெட்களுடன் முன்னிலையில் இருப்பதுடன் தரவரிசையிலும் 776 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளமை பாராட்டுக்குரியதாகும்.

பந்து வீச்சில் லஹிரு குமாரவுக்குப் பதிலாக பினுர பெர்னாண்டோ அணியில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக தலைமை தெரிவாளார் ப்ரமோதய விக்ரமசிங்க தெரிவித்தார்.

இந்த சுற்றுப் போட்டியில் இனியும் இழப்பதற்கு எதுவும் இல்லை என்பதால் இலங்கை அணி எவ்வித அழுத்தங்களும் இல்லாமல் இன்றைய போட்டியை எதிர்கொள்ளவுள்ளது.

ஆனால், சுப்பர் 12 சுற்றில் தனது எஞ்சிய 2 போட்டிகளிலும் அதி சிறந்த நிகர ஓட்ட வேகத்துடன் வெற்றி பெற்றால் அரை இறுதிக்குள் நுழைய வாய்ப்பு இருக்கின்றது என்பதை அறிந்துள்ள மேற்கிந்தியத் தீவுகள் இன்றைய போட்டியில் பலத்த அழுத்தத்தை எதிர்கொள்ளும் என்பதால் சந்தேகம் இல்லை.

அதுமட்டுமல்லாமல் இலங்கையிடமிருந்து பலத்த சவாலையும் மேற்கிந்தியத் தீவுகள் சந்திக்க நேரிடும்.

இலங்கையும் மேற்கிந்தியத் தீவுகளும் 14 சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டிகளில் ஒன்றையொன்று எதிர்த்தாடியுள்ளதுடன் இரண்டு அணிகளும் தலா 7 வெற்றிகளை ஈட்டியுள்ளன.

எனவே இரண்டு அணிகளும் என்ன விலைகொடுத்தேனம் வெற்றி பெற வேண்டும் என்ற முயற்சியுடன் விளையாட முற்படும் என்பதால் இன்றைய போட்டி பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அணிகள்

இலங்கை
பெத்தும் நிஸ்ஸன்க, குசல் ஜனித் பெரேரா, சரித் அசலன்க, அவிஷ்க பெர்னாண்டோ, பானுக்க ராஜபக்ஷ, தசுன் ஷானக்க (தலைவர்) வனிந்து ஹசரங்க, சாமிக்க கருணாரட்ன, துஷ்மன்த சமீர, மஹேஷ் தீக்ஷன, பினுர பெர்னாண்டோ.

மேற்கிந்தியத் தீவுகள்
எவின் லூயிஸ், கிறிஸ் கேல், ரொஸ்டன் சேஸ், நிக்கலஸ் பூரண், ஷிம்ரன் ஹெட்மயர், ட்வேன் ப்ராவோ, ஜேசன் ஹோல்டர், கீரன் பொலார்ட் (தலைவர்), ரவி ராம்போல், அண்ட்ரே ரசல், அக்கீல் ஹொசெய்ன்.

No comments:

Post a Comment