சிங்கப்பூரை மீண்டும் பதறவைக்கும் கொரோனா : ஆண்டுக்கு 2000 பேர் பலியாகக் கூடும் எனக் கணிப்பு - News View

About Us

About Us

Breaking

Wednesday, November 3, 2021

சிங்கப்பூரை மீண்டும் பதறவைக்கும் கொரோனா : ஆண்டுக்கு 2000 பேர் பலியாகக் கூடும் எனக் கணிப்பு

சிங்கப்பூரில் இனிவரும் காலங்களில் ஆண்டு தோறும் சுமார் இரண்டாயிரம் பேர் கோவிட்-19 பாதிப்பால் உயிரிழக்கக் கூடும் என அந்நாட்டின் சுகாதார மூத்த அமைச்சர் ஜனில் புதுச்சேரி தெரிவித்துள்ளார்.

மிகச்சிறந்த மருத்துவப் பராமரிப்பு உள்ள நாடு என்ற போதிலும், இத்தகைய நிலை ஏற்படக் கூடும் என்றும், இதைத் தவிர்க்க அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை புதிதாக மேலும் 3,496 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது. பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 204,340 ஆக கூடியுள்ளது.

சில தினங்களுக்கு முன்னர் அன்றாட பாதிப்பு எண்ணிக்கை 5 ஆயிரத்தைக் கடந்தது. கொரோனா நெருக்கடி தொடங்கியது முதல் அங்கு பதிவான ஆக அதிகமான அன்றாட தொற்று எண்ணிக்கை இதுவாகும். இதையடுத்து, அங்கு கொரோனா கட்டுப்பாடுகள் மீண்டும் கடுமையாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் அதிக தடுப்பூசி விகிதம், பூஸ்டர் தடுப்பூசிகள் போடுவது ஆகியவற்றில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக துணையமைச்சர் ஜனில் புதுச்சேரி தெரிவித்துள்ளார்.

மேலும், மிதமான வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்குவது, வலுப்படுத்துவது ஆகிய உத்திகளையும் சிங்கப்பூர் சுகாதார அமைச்சு கையாண்டு வருகிறது என்றார் அவர்.

ஆண்டுக்கு இரண்டாயிரம் பேர் இறக்கும் பட்சத்தில் அவர்களில் முதியவர்களும் முன்பே நோய்வாய்ப்பட்டவர்களும்தான் அதிக எண்ணிக்கையில் இருப்பார்கள் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரைப் பொறுத்தவரை 'கோவிட்-19' மரண எண்ணிக்கை விகிதம் 0.2 விழுக்காடாக உள்ளது. மற்ற உலக நாடுகளில் மரண எண்ணிக்கை விகிதமானது தடுப்பூசி போடுவதற்கு முன்பு 3 விழுக்காடாக இருந்தது என்று சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் ஜனில் புதுச்சேரி, அவற்றுடன் ஒப்பிடும்போது சிங்கப்பூரில் மரண விகிதம் மிகக் குறைவானது என்று தெரிவித்துள்ளார்.

இன்றைய நிலவரப்படி, சிங்கப்பூரில் கொரோனா தொற்றுக்குப் பலியானோரின் மொத்த எண்ணிக்கை 407 ஆகும்.

கொரோனா பெருந்தொற்றுப் பரவல் ஏற்படுவதற்கு முன்னர் இந்தத் தீவு நாட்டில் ஆண்டு தோறும் சுமார் 4 ஆயிரம் பேர் சளிக் காய்ச்சல், நிமோனியா பாதிப்பு, மற்ற சுவாசம் தொடர்பான பாதிப்புகளால் உயிரிழந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அமைச்சர் ஜனில், உரிய மருத்துவம் இல்லாததால் உயிரிழப்போர் எண்ணிக்கையைக் குறைக்க அரசாங்கம் தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூர் அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளின் மூலம் தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை குறைவாக இருந்ததாகச் சுட்டிக்காட்டிய அமைச்சர், உரிய மருத்துவப் பராமரிப்பும் இருந்தபடியால் உயிரிழப்போர் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது என்றும் அரசாங்கம் இதை உறுதி செய்தது என்றும் கூறினார்.

கொரோனா தொற்று குறித்து சிங்கப்பூரர்கள் மத்தியில் அந்நாட்டு அரசு நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா வைரஸுடன்தான் வாழ்கிறோம் (living with Covid-19) என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர்.

நிலைமை இதுதான் என்றபோதிலும், நாட்டின் எல்லைகளை சர்வ சாதாரணமாக திறந்துவிட இயலாது என்று குறிப்பிட்டுள்ள துணையமைச்சர் ஜனில், அவ்வாறு செய்தால் தொற்றுப் பாதிப்பு அதிகரிக்கும் அபாயம் உள்ளதாகச் சுட்டிக்காட்டி உள்ளார்.

"தொற்று எண்ணிக்கை அதிகரிக்கிறது எனில், மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் பயன்படுத்தப்படும் படுக்கைகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது என்று அர்த்தம்.

அண்மைக்காலம் வரை குறைவான மக்களுக்கு மட்டுமே தொற்றுப் பாதிப்பு ஏற்படுகிறது என்பதை உறுதி செய்ததன் மூலம் அவர்களுக்கு மிகச் சிறந்த மருத்துவப் பராமரிப்பு வழங்கப்பட்டது. இதனால் மரணமடைவோர் எண்ணிக்கை மிகக்குறைவாக இருந்தது.

"தற்போது கொரோனாவுடன் வாழ்ந்து வந்தாலும், தடுப்பூசி செலுத்துதல் மற்றும் பாதுகாப்பு மேலாண்மை நடவடிக்கைகள் மூலம் மக்களைப் பாதுகாப்பது நீடிக்கும். எனினும் இது முழுமையான பாதுகாப்பு அல்ல. எனவேதான், இனிவரும் நாட்களில் அதிகமானோர் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

"அவ்வாறு தொற்று அதிகரிக்கும்போது கொரோனா இறப்புகளும் அதிகரிக்கும். இதனால் சிறந்த மருத்துவ பராமரிப்பு இருப்பினும்கூட, ஆண்டுக்கு இரண்டாயிரம் பேர் கொரோனா தொற்றுக்குப் பலியாகக் கூடும்," என்று சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் பேசும்போது சுகாதார மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி தெரிவித்துள்ளார்.

நிலைமை இறுதிவரை இப்படியே நீடித்து விடாது என்றும், இதிலிருந்து விடுபடும் காலம் வரும் என்றும் குறிப்பிட்ட அவர், நிலைமை ஸ்திரமடையும் வரை மரண எண்ணிக்கையை முடிந்தவரை ஆகக்குறைவாக வைத்துக் கொள்வது அவசியம் என்று சுட்டிக்காட்டி உள்ளார்.

No comments:

Post a Comment