புதிய உத்வேகத்துடன் பணியாற்ற தயாராகுமாறு ஜனாதிபதி அழைப்பு : மாவட்டச் செயலாளர்களுடன் zoom வழியில் கலந்துரையாடல் - News View

About Us

About Us

Breaking

Thursday, October 7, 2021

புதிய உத்வேகத்துடன் பணியாற்ற தயாராகுமாறு ஜனாதிபதி அழைப்பு : மாவட்டச் செயலாளர்களுடன் zoom வழியில் கலந்துரையாடல்

கொவிட்19 தொற்றுப் பரவல் காரணமாகக் கடந்த இரண்டு ஆண்டுகளில் அனைத்துத் துறைகளிலும் ஏற்பட்ட பின்னடைவுகளைச் சமாளிக்க, புதிய பொதுமைப்படுத்தலின் கீழ், புது உத்வேகத்துடன் பணியாற்றத் தயாராகுமாறு, மாவட்டச் செயலாளர்களிடம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

அரசாங்கத்தின் திட்டமிடல்கள் பிரகாரம் எதிர்பார்த்த இலக்கை அடைய முடியாவிட்டாலும், அனைத்துத் தப்பினரதும் அர்ப்பணிப்பினூடாக, கொவிட்19 தொற்றொழிப்புக்கு வெற்றிகரமாக முகம்கொடுக்க முடியும். தடுப்பூசி ஏற்றலுடன், புதிய பொதுமைப்படுத்தலை நோக்கி நகரக் கிடைத்த வாய்ப்பைப் புறக்கணிக்காது இலக்குகளை வெற்றிகொள்வது அனைவரதும் பொறுப்பென்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

மாவட்டச் செயலாளர்களுடன் நேற்று (07) நடைபெற்ற வீடியோ தொழில்நுட்பத்துடனான கலந்துரையாடலின் போதே, ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

புதிய பொதுமைப்படுத்தலின் கீழ் பொருளாதாரத்தை வழிநடத்துவதற்கு, அரச சேவையின் செயற்திறன் மிக முக்கிய காரணியாகிறது. அதனால், எதிர்வரும் காலங்களில் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய, முழு அரச இயந்திரமும் அர்ப்பணிப்புடனும் ஆர்வத்துடனும் செயற்பட வேண்டும். இதில், மாவட்டச் செயலாளர்களுக்கு மிகப் பெரிய பங்கு காணப்படுவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இதன்போது கருத்து தெரிவித்த மாவட்டத் செயலாளர்கள், ஜனாதிபதி எடுத்துள்ள தீர்மானத்துக்குப் பக்க பலமாக இருந்து, இலக்குகளை வென்றெடுப்பதற்காக வேகமானதும் திறமையானதுமான பொதுச் சேவையை வழங்கத் தாயாராக இருப்பதாகத் தெரிவித்தனர்.

விவசாயத்தை முதன்மைப்படுத்தியுள்ள சுமார் 70 சதவீமான கிராமிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. சேதனப் பசளைக் கொள்கையுடனான பசுமைப் பொருளாதாரம், புதைபடிவ எரிபொருள்கள் மற்றும் நிலக்கரி போன்றவற்றுக்கு பதிலாக, மீள் புதுப்பிக்கத்தக்க சக்தி வலுக்களை நோக்கி நகர்தல், சுற்றுலாத்துறையை மீளக் கட்டியெழுப்புதல் மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை பலப்படுத்தவதற்கான பின்னணியை அமைத்தல் போன்ற சவால்களை வெற்றிகொள்ள வேண்டி இருக்கிறதென, ஜனாதிபதி எடுத்துரைத்தார்.

பொருத்தமற்ற சுற்றுநிரூபங்கள் மற்றும் கட்டளைகள் - சட்டங்கள் என்பன, இந்த இலக்குகளை அடைவதற்குள்ள தற்காலத் தடைகளாகக் காணப்படுவதாக, மாவட்டச் செயலாளர்கள் எடுத்துரைத்தனர்.

தற்போதைய நிலைமை தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கிய புதியதொரு தொடக்கத்துக்கு செல்வதற்குள்ள தடைகளைத் தகர்க்கத் தான் தயாரென்றும் கூறினார்.

ஜனாபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க ஆகியோரும், இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டிருந்தனர்.

No comments:

Post a Comment