சதொச வெள்ளைப்பூடு மோசடி : கைதான அதன் ஊழியர்கள் நான்கு பேருக்கு விளக்கமறியல் - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 12, 2021

சதொச வெள்ளைப்பூடு மோசடி : கைதான அதன் ஊழியர்கள் நான்கு பேருக்கு விளக்கமறியல்

லங்கா சதொசாவில் இடம்பெற்ற வெள்ளைப்பூடு மோசடிக்கு உதவியதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட அதன் நான்கு ஊழியர்களுக்கு நாளை மறுதினம் (14) வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.

நேற்று (11) கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர்கள் நால்வரையும் இன்று (12) வத்தளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோதே நீதவான் குறித்த உத்தரவை வழங்கினார்.

லங்கா சதொச நிறுவனத்தின் உதவிப் பொது முகாமையளர், சிரேஷ் விநியோக முகாமையாளர், விநியோக முகாமையாளர், மொத்த விற்பனை முகாமையாளர் ஆகியோரே இவ்வாறு CID யினால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக லங்கா சதொச நிதி பிரிவின் பிரதிப் பொது முகாமையாளர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், குறித்த வெள்ளைப்பூட்டை கொள்வனவு செய்ததாக, குற்றம் சாட்டப்பட்ட 55 வயதான வர்த்தகர் ஒருவரும் CID யினால் கைது செய்யப்பட்டதோடு. அவருக்கும் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

லங்கா சதொச நிறுவனத்திற்கு சொந்தமான 54,000 கி.கி. வெள்ளைப்பூட்டை மூன்றாம் தரப்பிற்கு குறைந்த விலைக்கு விற்று, மீண்டும் அதனை கூடிய விலையில் கொள்வனவு செய்வதற்கு முயற்சி செய்ததாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை ஆரம்பத்தில் பேலியகொடை விசேட குற்ற விசாரணைப் பிரிவினர் மேற்கொண்டு வந்த நிலையில், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவின் உத்தரவுக்கமைய, அது CID யிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.

இது தொடர்பில் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கும் தொடர்பு இருப்பதாக எதிர்க்கட்சி குற்றம் சாட்டி வரும் நிலையில், அதனை நிரூபித்தால் தான் பதவி விலகுவதாக அமைச்சர் பந்துல குணவர்தனவும் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இவ்விடயம் தொடர்பில் அமைச்சரிடமும் CID யினர் வாக்குமூலம் பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment