நான் சமர்ப்பித்த சட்டமூலத்தை உபயோகித்து தேர்தலை நடத்தலாம் - சுமந்திரன் - News View

About Us

About Us

Breaking

Sunday, October 10, 2021

நான் சமர்ப்பித்த சட்டமூலத்தை உபயோகித்து தேர்தலை நடத்தலாம் - சுமந்திரன்

நான் சமர்ப்பித்த சட்டமூலத்தை உபயோகித்து, சட்ட திருத்தத்தினூடாக மாகாண சபை தேர்தலை நடத்த முடியுமென யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் எம்.ஏ. சுமந்திரன் மேலும் கூறியுள்ளதாவது, “நாடாளுமன்ற தெரிவுக்குழு தேர்தல் முறை மறுசீரமைப்பு பற்றிய கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது.

குறித்த தெரிவுக்குழுவிற்கு நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவும் நியமிக்கப்பட்டுள்ளார். அவரும் கூட்டத்தில் பங்கேற்றிருந்தார்.

இவ்வாறு இந்த குழு சந்திக்க ஆரம்பித்ததிலிருந்து மாகாண சபை தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்பதனையே நாங்கள் வலியுறுத்தி வந்திருக்கின்றோம்.

அதனை நகர்த்துவதில் உள்ள சட்ட சிக்கல்கள் சம்பந்தமாக ஒவ்வொரு தடவையும் பிரஸ்தாபிக்கப்படும்.

ஆனாலும், ஒரு சிறிய சட்ட திருத்தத்தின் ஊடாக முன்னர் இருந்த தேர்தல் முறைமையை பின்பற்றி, தேர்தல் நடத்த முடியும் என்ற கருத்தை நான் வெளிப்படுத்தியிருந்தேன்.

அதற்கான ஒரு சட்ட மூலமும் 2019 ஆம் ஆண்டு, நான் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தேன்.

இந்நிலையிலேயே, கூட்டத்திற்கு வருகை தந்திருந்த பசில் ராஜபக்ஷ வெகு விரைவாக மாகாண சபை தேர்தலை நடத்துவதென்று அரசாங்கம் முடிவெடுத்திருப்பதாக அறிவித்தார்.

தங்களுக்கும் மாகாண சபை தேர்தல் நடத்த வேண்டும் என்ற தேவையும் அழுத்தங்களும் இருப்பதாக கூறினார்.

அதாவது, இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் வந்து சென்றதன் பின்னர் இதை கூறியுள்ளார்.

இது எப்படியாக இருந்தாலும் மாகாண சபை தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும் என்பது எங்களுடைய நிலைப்பாடாக தொடர்ச்சியாக இருந்து வந்து கொண்டிருக்கின்றது.

ஆகையினாலே என்னுடைய சட்டமூலத்தை உபயோகித்து ஒரு சட்ட திருத்தத்தை உடனடியாக செய்து, மாகாண சபை தேர்தலை நடத்தலாம் என்ற கருத்தை பல உறுப்பினர்கள் வெளிப்படுத்தியிருந்தார்கள்.

நான் தயாரித்திருந்த சட்ட மூலத்தை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன செயலாளரிடம் நான் கொடுத்திருக்கின்றேன்.

இந்நிலையில் அமைச்சரவை இது குறித்து ஆலோசித்து ஒரு முடிவெடுத்து, அப்படி செய்வதாக இருந்தால் எதிர்வருகின்ற நாட்களில் அதனை வர்த்தமானியில் பிரசுரித்து, ஒரு அரசாங்க வரைபாக சட்டமூலமாக அதனை கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment