சீனாவிலிருந்து நாட்டிற்கு வரும் கப்பலில் தீங்கு ஏற்படுத்தக்கூடிய சேதனப் பசளை உரம் உள்ளடங்கப்பட்டுள்ளது. ஆகவே அக்கப்பலை கொழும்பு துறைமுகத்திற்குள் உட்பிரவேசிப்பதை தடுக்க துறைமுக சேவையாளர்களுக்கும், உரிய தரப்பினருக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக துறைமுக அதிகார சபை தெரிவித்துள்ளது.
20ஆயிரம் மெற்றிக் தொன் சேதனப் பசளையுடன் குறித்த கப்பல் நேற்று மாலை நாட்டை வந்தடையும் என தேசிய தாவரங்கள், தொற்று நீக்கி மற்றும் தனிமைப்படுத்தல் சேவை நிலையம் கொழும்பு துறைமுகத்திற்கு அறிவுறுத்தியுள்ளது.
கப்பலில் உள்ளடங்கியுள்ள சேதனப் பசளையில் தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிர்கள் இருப்பதாக தேசிய தாவரங்கள் தொற்று நீக்கி,தனிமைப்படுத்தல்சேவை நிலையம் அறிவுறுத்தியுள்ளது.
சீனாவிலிருந்து வருகை தரும் கப்பல் கொழும்பு துறைமுகத்தில் தரிப்பதற்கு இதுவரையில் அனுமதி கோரப்படவில்லை, அத்துடன் வருகை தருவதாகவும் குறித்த நிறுவனம் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கவுமில்லை.
இந்த கப்பலை துறைமுகத்திற்குள் பிரவேசிப்பதை தடுக்குமாறு துறைமுக சேவையாளர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் முன்னெடுக்கப்பட வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராயப்படவுள்ளது.
பெரும்போகத்திற்கு தேவையான சேதனப் பசளையை சீன நாட்டின் நிறுவனத்திடமிருந்து இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்தது. அதற்கமைய சேதனப் பசளையை இறக்குமதி செய்வதற்கு முன்னர் அந்த உரங்களின் மாதிரிகள் பெற்றுக் கொள்ளப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
சீன நிறுவனத்திடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட சேதனப் பசளை மாதிரி உரத்தில் இலங்கையின் மண் வளத்திற்கும், காலநிலைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் நுண்ணுயிர்கள் அடங்கியிருப்பது இரண்டு முறை முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகளின் போது உறுதிப்படுத்தப்பட்டது.
ஆகையால்பெற்றுக் கொள்ளப்பட்ட உர மாதிரிகளை சீன நிறுவனத்திற்கு திருப்பி அனுப்பவும், குறித்த நிறுவனத்திடமிருந்து உரம் இறக்குமதி செய்வதை தடை செய்யவும் விவசாயத்துறை அமைச்சு தீர்மானித்தது.
No comments:
Post a Comment