பெருந்தோட்டக் கம்பனிகளின் அடாவடிக்கு விரைவில் முடிவு - ராமேஷ்வரன் - News View

Breaking

Thursday, October 21, 2021

பெருந்தோட்டக் கம்பனிகளின் அடாவடிக்கு விரைவில் முடிவு - ராமேஷ்வரன்

கூட்டு ஒப்பந்தம் இன்மையாலேயே சில பெருந்தோட்டக் கம்பனிகள் அடாவடி செய்கின்றன. இப்பிரச்சினைக்கும் விரைவில் முடிவு காணப்படும். அதற்கான பேச்சுவார்த்தை இடம்பெறுகின்றது என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நிதிச் செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்தார்.


கொட்டகலையில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

உள்ளாட்சி மன்றத் தேர்தலின் போது சுழற்சிமுறையில் பதவி மாற்றம் இடம்பெறும் என எமது உறுப்பினர்களுக்கு மறைந்த தலைவர் அறிவித்திருந்தார். அந்த வகையில் கொட்டகலை பிரதேச சபையின் உப தலைவராக இருந்த சுரேசுக்கு பதிலாக பாலா நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்காலத்தில் மேலும் சில சபைகளிலும் மாற்றம் வரும்.

ஹட்டன் நகர சபை தலைவரை பதவி விலகுமாறு நாம் பணிக்கவில்லை. அதற்கான தேவையும் எழவில்லை. அவர் அப்பதவியில் நீடிப்பார்.

உரப் பிரச்சினை தொடர்பில் நாம் ஜனாதிபதி, பிரதமரிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். பெருந்தோட்டத்துறை தொடர்பான விடயங்களுக்கு உரம் கிடைக்கும்.

அதேவேளை, சில தோட்டங்கள் இன்று ஆயிரம் ரூபாவை வழங்குகின்றன. சில தோட்டங்கள் வழங்குவதில்லை. கூட்டு ஒப்பந்தம் இல்லாமை இதற்கு பிரதான காரணமாகும். இது மக்களுக்கும் தெரியும்.

கூட்டு ஒப்பந்தம் இருந்தபோது இ.தொ.காவின் கட்டுப்பாட்டின் கீழ் நடவடிக்கைகள் இடம்பெற்றன. இன்று அது இல்லாததால் சில கம்பனிகள் அடாவடியாக செயற்படுகின்றன. கூட்டு ஒப்பந்தத்தை அடிமை சாசனம் என விமர்சித்த தொழிற்சங்க பிரமுகர்களே, அதனை ஏற்றுக் கொண்டுள்ளனர் என்றார்.

No comments:

Post a Comment