ஜனாதிபதி தோல்வியடைய முழுக்காரணம் அவரே : புதிய அரசியலமைப்பில் ஆணைக்குழுக்களின் சுயாதீனத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - லக்ஸ்மன் கிரியெல்ல - News View

Breaking

Thursday, October 21, 2021

ஜனாதிபதி தோல்வியடைய முழுக்காரணம் அவரே : புதிய அரசியலமைப்பில் ஆணைக்குழுக்களின் சுயாதீனத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - லக்ஸ்மன் கிரியெல்ல

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

ஜனாதிபதி தோல்வியடைய முழுக்காரணம் அவரேயாகும். அரசாங்கத்தின் ஒத்துழைப்பு அமைச்சர்களின் ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளாது செயற்படுவதே அவர் தோல்வியடைய காரணமாகும் என எதிர்க்கட்சி பிரதம கொறடாவான லக்ஸ்மன் கிரியெல்ல சபையில் தெரிவித்தார்.

அரசாங்கத்தில் என்ன நடக்கின்றது என்பது இன்று அமைச்சர்களுக்கே தெரியவில்லை எனவும் அவர் கூறினார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (21) இளந்தவறாளர்கள் (பயிற்சிப் பாடசாலைகள்) (திருத்தச்) சட்டமூலம் மற்றும் தண்டனைச் சட்டக் கோவை (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே எதிர்க்கட்சி பிரதம கொறடாவான லக்ஸ்மன் கிரியெல்ல இதனை கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், புதிய அரசியல் அமைப்பு உருவாக்கம் குறித்து நிறைவேற்று ஜனாதிபதி அரசாங்கத்தில் கூட கருத்து கேட்பதில்லை. 20 ஆம் திருத்தத்தின் கீழ் முழுமையான அதிகாரங்களை கைப்பற்றியமையே இதற்கான காரணமாகும். அரசாங்கத்தில் என்ன நடக்கின்றது என்பது அமைச்சர்களுக்கு தெரியவில்லை. ஆகவே இதன் விளைவுகளை அவரே முழுமையாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.

புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்படும் வேளையில் சுயாதீன ஆணைக்குழுக்களின் சுயாதீனத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சுயாதீன ஆணைக்குழுக்களின் உரிமைகள் பலப்படுத்தாது போனால் அரசாங்கம் சர்வதேசத்திடம் செல்ல முடியாது. ஆகவே இதனை கருத்தில் கொள்ள வேண்டும். நீதிமன்ற சுயாதீனம் மற்றும் உயரிய சபைகளின் சுயாதீனத்தை பலப்படுத்த நீதி அமைச்சர் கவனம் செலுத்த வேண்டும்.

ஜனாதிபதியின் அதிகாரங்களை நீக்கும் நடவடிக்கைகளை நாம் எமது ஆட்சியில் எடுத்தோம். மக்கள் கருத்துக்கும் சென்று பல அதிகாரங்களை நீக்க முயற்சித்தோம். ஆனால் உயர் நீதிமன்றம் சில விடயங்களில் அனுமதி வழங்கவில்லை. அதேபோல் 19ஆம் திருத்தம் கொண்டுவரப்பட்ட வேளையில் சகல எதிர்க்கட்சிகளிடமும் கலந்துரையாடினோம்.

அண்மையில் ஜனாதிபதி உரையாற்றும் வேளையில் தான் தோல்வியடைந்து விட்டதாக தெரிவித்தார். ஜனாதிபதி தோல்வியடைய முழுக்காரணம் அவரேயாகும். அரசாங்கத்தின் ஒத்துழைப்பு அமைச்சர்களின் ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளாது செயற்படுவதுவே அவர் தோல்வியடைய காரணமாகும் என்றார்.

No comments:

Post a Comment