அரசாங்கம் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க இயலாத சந்தர்ப்பங்களில் வேறு விடயத்தை பூதாகரமாக்கி மக்களை திசை திருப்ப முயற்சி : ஞானசார தேரரைப் போன்ற அடிப்படைவாதக் கொள்கையுடையவர்களுக்கு புனர்வாழ்வளிக்க வேண்டும் - இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் - News View

Breaking

Tuesday, October 5, 2021

அரசாங்கம் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க இயலாத சந்தர்ப்பங்களில் வேறு விடயத்தை பூதாகரமாக்கி மக்களை திசை திருப்ப முயற்சி : ஞானசார தேரரைப் போன்ற அடிப்படைவாதக் கொள்கையுடையவர்களுக்கு புனர்வாழ்வளிக்க வேண்டும் - இம்தியாஸ் பாக்கீர் மாக்கார்


(நா.தனுஜா)

நாட்டிலுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்க இயலாத சந்தர்ப்பங்களில், அரசாங்கம் வேறு ஏதேனுமொரு விடயத்தைப் பூதாகரமாக்கி மக்களைத் திசை திருப்புவதற்கு முயற்சிக்கின்றது. அதன் ஓரங்கமாக நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இருப்பதாகக்கூறி, குறித்தவொரு இன சமூகத்தை மாத்திரம் இலக்கு வைப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. பௌத்தர்களிலும் ஞானசார தேரரைப் போன்ற அடிப்படைவாதக் கொள்கையுடையவர்கள் இருக்கின்றார்கள். அவர்களுக்கு உரியவாறு புனர்வாழ்வளிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாறாக அதனூடாக இனங்களுக்கிடையில் பிரச்சினைகளைத் தோற்றுவிப்பதற்கு முற்படக்கூடாது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக் காரியாலயத்தில் நேற்று திங்கட்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது, அண்மைக் காலத்தில் அரசாங்கம் நாட்டிலுள்ள ஊடகவியலாளர்களை வேட்டையாட ஆரம்பித்திருக்கின்றது. தமக்கு எதிராக அல்லது தம்மை விமர்சிக்கும் வகையில் செயற்படுவோர் மீது அரசாங்கம் அடக்குமுறையைப் பிரயோகிக்கின்றது.

நாட்டு மக்களின் பணம் தவறான விதத்தில் கையாளப்படும்போது, அது குறித்து கேள்வி எழுப்பும் ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்படுகின்றார்கள். இறுதியில் ஊடகவியலாளர்களை விசாரணை செய்யுமாறு தாம் எந்தவொரு உத்தரவையும் வழங்கவில்லை என்றும் தமக்கு எதுவும் தெரியாது என்றும் கூறி, பொலிஸார் மீது பழிசுமத்தி விட்டு நழுவிக் கொள்கிறார்கள்.

தற்போதைய அரசாங்கம் தமது தனிப்பட்ட அரசியல் நலன்களை ஈடேற்றிக் கொள்வதற்காக பொலிஸாரையும் இராணுவத்தினரையும் பயன்படுத்திக் கொள்கின்றது. அந்த அரச சேவையின் கௌரவத்தைப் பாதிக்கும் வகையிலான செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு நாட்டு மக்கள் அரசாங்கத்திற்கு ஒருபோதும் இடமளிக்கக் கூடாது.

மறுபுறம் கொவிட்-19 வைரஸ் பரவல் நெருக்கடியினால் பெருமளவானோர் தமது வாழ்வாதாரத்தை இழந்திருக்கின்றார்கள். அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் பெருமளவால் அதிகரிக்கப்பட்டிருப்பதுடன் பால்மா, எரிவாயு போன்றவற்றைக் கொள்வனவு செய்வதற்கு நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலையேற்பட்டுள்ளது.

அதேபோன்று உரப் பற்றாக்குறையின் காரணமாக விவசாய உற்பத்திகள் வீழ்ச்சியடைந்திருப்பதுடன் அதனால் விவசாயிகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு நாட்டு மக்கள் எதிர்கொண்டிருக்கும் பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் உணர்வுபூர்வமாக சிந்திக்கின்றதா?

ஆட்சிபீடமேறியவுடன் பெருவணிகர்களும் செல்வந்தர்களும் இலாபம் பெறக் கூடியவாறான வரிச் சலுகைகளை அரசாங்கம் அறிவித்தது. ஆனால் சாதாரண மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்குவதற்கோ அல்லது அவர்களுக்கான நிவாரணங்களை வழங்குவதற்கோ அரசாங்கத்திடம் எந்தவொரு செயற்திட்டமும் இல்லை.

மாறாக நாளுக்குநாள் வர்த்தமானி அறிவித்தல்களை வெளியிடுவதில் மாத்திரமே கவனம் செலுத்தி வருகின்றது. அண்மையில் அரசாங்கம் அத்தியாவசியப் பொருட்கள் தொடர்பில் ஆணையாளர் நாயகமொருவரை நியமித்தது. இருப்பினும் அதனால் எந்தவொரு ஆக்கபூர்வமான விளைவுகளும் ஏற்படவில்லை.

அதேவேளை நாட்டிலுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்குவதற்கு அரசாங்கத்தினால் இயலாத சந்தர்ப்பங்களில், வேறு ஏதேனுமொரு விடயத்தைப் பூதாகரமாக்கி மக்களைத் திசை திருப்புவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

அதன்படி தற்போது கர்தினாலை இலக்கு வைத்து பிரச்சினையொன்றைத் தோற்றுவிப்பதற்கு முற்படுகின்றார்கள். கடந்த காலங்களில் இத்தகைய பிரச்சினைகளை ஏற்படுத்துவதற்குப் பயன்படுத்தியவர்களையே மீண்டும் களத்தில் இறக்கியிருக்கின்றார்கள். இருப்பினும் மக்களை இவ்வாறு தொடர்ந்து ஏமாற்ற முடியாது என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இருப்பதாகக்கூறி, குறித்தவொரு இன மக்களை மாத்திரம் இலக்குவைக்கக் கூடாது. அனைத்து இன சமூகங்களிலும் அடிப்படைவாதக் கொள்கைகளையுடையவர்கள் இருக்கின்றார்கள். பௌத்தர்களிலும் ஞானசார தேரரைப் போன்ற அடிப்படைவாதக் கொள்கை உடையவர்கள் இருக்கின்றார்கள்.

அவர்களுக்கு உரியவாறு புனர்வாழ்வளிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாறாக அதனைப் பயன்படுத்தி, சமூகங்களுக்கு மத்தியில் பிரச்சினைகளைத் தோற்றுவித்து மக்களை முட்டாளாக்குகின்ற செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம் என்று அரசாங்கத்தை வலியுறுத்துகின்றேன் என்று குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment