நீதிபதி கிஹான் பிலபிட்டியவுக்கு எதிரான விசாரணையை தொடர்ந்தும் முன்னெடுத்து செல்வதா இல்லையா : நிலைப்பாட்டை அறிவிக்குமாறு மேன் முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 12, 2021

நீதிபதி கிஹான் பிலபிட்டியவுக்கு எதிரான விசாரணையை தொடர்ந்தும் முன்னெடுத்து செல்வதா இல்லையா : நிலைப்பாட்டை அறிவிக்குமாறு மேன் முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு

(எம்.எப்.எம்.பஸீர்)

முன்னாள் அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவின் சர்ச்சைக்குரிய தொலைபேசி குரல் பதிவு விவகாரத்தில், மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலபிட்டியவுக்கு எதிராக நுகேகொடை நீதிமன்றில் ஆரம்பிக்கப்பட்ட விசாரணை நடவடிக்கையை தொடர்ந்தும் முன்னெடுத்து செல்வதா இல்லையா என்பதை நாளை (13) மன்றுக்கு அறிவிக்குமாறு, மேன் முறையீட்டு நீதிமன்றம் சட்டமா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் சேர்ந்து பொய் சாட்சிகளை உருவாக்க சதித்திட்டம் தீட்டியதாக கூறப்படும் விடயம் தொடர்பில் இரண்டாவது சந்தேகநபராக தன்னை பெயரிட்டு இடம்பெறும் வழக்கு விசாரணைகளுக்கு தடை விதிக்குமாறு கோரி பணி இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ள, எம்பிலிபிட்டிய மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலபிட்டிய மேன் முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்த ரீட் மனுவை இன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டே நீதிமன்றம் இந்த உத்தர்வை பிறப்பித்தது.

சோபித்த ராஜகருனா மற்றும் தம்மிக கனேபொல ஆகிய நீதிபதிகளைக் கொண்ட மேன் முறையீட்டு நீதிமன்றமே இந்த உத்தரவை பிறப்பித்தது.

இந்த மனுவானது இன்று பரிசீலனைக்கு வந்தபோது மன்றில் ஆஜரான சிரேஹ்ட அரச சட்டவாதியை நோக்கி, ' மேல் நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக முன்னெடுக்கும் விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்து செல்வதா இல்லையா என்பதை பொலிஸ்மா அதிபர், சட்டமா அதிபரிடம் கேட்டு நாளை (13) மன்றுக்கு அறிவியுங்கள் என மேன் முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சோபித்த ராஜகருண அறிவித்தார்.

அதன்படி குறித்த மனு மீதான பரிசீலனைகள் நாளை வரை ஒத்தி வைக்கப்பட்டது.

No comments:

Post a Comment