இலங்கையின் தேயிலை உற்பத்தியை சீர்குலைக்கும் நடவடிக்கைகளை தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்துள்ளது : அமைச்சரும், அதிகாரிகளும் விமான நிலைய நிர்வாகத்தை சீர்குலைத்துள்ளனர் - சுஜித் சஞ்சய பெரேரா - News View

Breaking

Tuesday, October 12, 2021

இலங்கையின் தேயிலை உற்பத்தியை சீர்குலைக்கும் நடவடிக்கைகளை தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்துள்ளது : அமைச்சரும், அதிகாரிகளும் விமான நிலைய நிர்வாகத்தை சீர்குலைத்துள்ளனர் - சுஜித் சஞ்சய பெரேரா

(நா.தனுஜா)

நாட்டில் நூற்றுக்கு 25 - 30 சதவீதமானோர் தேயிலைப் பயிர்ச் செய்கையில் ஈடுபட்டு வருகின்றார்கள். இருப்பினும் இரசாயன உர இறக்குமதியை தடை செய்யும் அரசாங்கத்தின் தீர்மானத்தினால் தேயிலை சிறு தோட்ட உரிமையாளர்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். இந்தத் தீர்மானத்தினால் தேயிலை ஏற்றுமதி வீழ்ச்சியடைவில்லை என்று அரசாங்கம் கூறினாலும், உண்மையில் இதன் விளைவை எதிர்வரும் 4 - 6 மாதங்களிலேயே புரிந்துகொள்ள முடியும். சர்வதேச ரீதியில் பிரசித்தி பெற்ற இலங்கையின் தேயிலை உற்பத்தியை சீர்குலைக்கும் நடவடிக்கைகளே தற்போதைய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்றன என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா சுட்டிக்காட்டினார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக் காரியாலயத்தில் இன்று செவ்வாய்க்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறியதாவது, இரசாயன உரத்தின் இறக்குமதியை இடைநிறுத்துவதற்கு அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் சிறு தோட்ட உரிமையாளர்கள் அண்மைக் காலங்களில் வீதிகளில் இறங்கிப் போராடினார்கள்.

விவசாயம் மற்றும் பயிர்ச் செய்கையைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்கு உரத்தைப் பெற்றுத்தருமாறு அவர்கள் தொடர்ச்சியாக கோரிக்கையை முன்வைத்து வருகின்ற போதிலும், அரசாங்கம் இன்னமும் அவர்களுக்குரிய தீர்வை வழங்கவில்லை.

இந்நிலையில் விவசாயத்துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகேவின் உருவப் பொம்மையை எரித்து, போராட்டத்தில் ஈடுபடும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டிருக்கின்றார்கள்.

அதேபோன்று எமது நாட்டில் நூற்றுக்கு 25 சதவீதமானோர் தேயிலைப் பயிர்ச் செய்கையில் ஈடுபட்டு வருகின்றார்கள். எனினும் இன்றளவில் சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள்.

தேயிலை ஏற்றுமதி வீழ்ச்சியடையவில்லை என்று அரசாங்கம் கூறுகின்றது. ஆனால் அண்மைக் காலத்தில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களின் மோசமான விளைவுகள் எதிர்வரும் 5 - 6 மாதங்களிலேயே நன்கு வெளிப்பட ஆரம்பிக்கும்.

எனவே சர்வதேச ரீதியில் பிரபலமான இலங்கையின் தேயிலை உற்பத்தியை சீர்குலைக்கும் நடவடிக்கைகளே தற்போதைய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்றன. அரசாங்கம் கூறுவதுபோன்று அந்நியச் செலாவணி வருமானம் வேண்டுமானால், தேயிலை உற்பத்தியை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

எனவே இந்த நெருக்கடிக்குத் தீர்வை வழங்குவதற்கு அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கின்றோம்.

மறுபுறம் நாட்டின் தேசிய சொத்துக்களை வெளிநாடுகளுக்கு வழங்கமாட்டோம் என்று வாக்குறுதியளித்து ஆட்சிபீடமேறிய தற்போதைய அரசாங்கம், மின்னுற்பத்தி நிலையங்கள், துறைமுகங்கள் உள்ளடங்கலாக தேசிய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த வளங்களை அமெரிக்கா, சீனா, இந்தியா ஆகிய நாடுகளுக்கு வழங்கி வருகின்றது.

எனவே தற்போதைய ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சரவையினால் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து நாட்டை சீராக நிர்வகிக்க முடியாது என்பது நிரூபணமாகியிருக்கின்றது.

அடுத்ததாக நாட்டின் விமான நிலையத்தை சுற்றுலாத்துறையின் பிரதான மையமாகக் குறிப்பிட முடியும். இருப்பினும் தற்போது சுற்றுலாத்துறை அமைச்சரும் ஏனைய அதிகாரிகளும் இணைந்து விமான நிலைய நிர்வாகத்தை சீர்குலைத்திருக்கின்றார்கள்.

அங்கு முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளில் உரியவாறான கொள்கைகளோ அல்லது ஒழுங்குகளோ கடைப்பிடிக்கப்படுவதில்லை. வெளிநாடுகளிலிருந்து வருகை தரும் பயணிகளை அசௌகரியத்திற்கு உட்படுத்தாமல் அவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான வசதிகள் விமான நிலையத்திலேயே ஏற்படுத்தப்பட்ட போதிலும், அவை உரியவாறு இயங்கவில்லை.

அதுமாத்திரமன்றி விமான நிலையத்தில் அப்பயணிகளிடம் குறித்தளவு தொகை பணம் அறவிடப்படுகின்ற போதிலும், அதற்குப் பதிலாக பி.சி.ஆர் பரிசோதனை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. இத்தகைய செயற்பாடுகள் சர்வதேசத்திற்கு எமது நாட்டைப் பற்றிய தவறான தோற்றப்பாட்டையே வழங்கப் போகின்றது என்று குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment