இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்டிருப்பது 'இரசாயன உரம்' என்று கூற முடியாத நிலையில் அமைச்சின் அதிகாரிகள் - சமன் ரத்னப்பிரிய - News View

Breaking

Thursday, October 21, 2021

இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்டிருப்பது 'இரசாயன உரம்' என்று கூற முடியாத நிலையில் அமைச்சின் அதிகாரிகள் - சமன் ரத்னப்பிரிய

(நா.தனுஜா)

இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்டிருக்கும் 'நனோ நைட்ரஜன்' திரவ உரம் எந்த வகையைச் சார்ந்தது என்ற கேள்விக்கு அது இரசாயன உரமோ, சேதன உரமும் அல்ல. மாறாக அது 'விசேட உரம்' என்று விவசாய அமைச்சின் செயலாளர் பதிலளித்திருக்கின்றார். 'விசேட உரம்' என்ற வகை உலகின் வேறெந்த நாடுகளிலும் இல்லை. இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்டிருப்பது 'இரசாயன உரம்' என்று கூற முடியாத நிலையில் அமைச்சின் அதிகாரிகள் இருக்கின்றனர். அரசாங்கம் அவர்களது வாய்களை அடைத்திருக்கின்றது என்று தேசிய தொழிற்சங்க ஒன்றியத்தின் தலைவரும் அரச தாதியர் சங்கத்தின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.

கொழும்பில் வியாழக்கிழமை (21) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது, இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்டிருக்கும் திரவ உரம் எந்த வகையைச் சார்ந்தது என்று எழுப்பப்பட்டுள்ள கேள்விக்கு, விவசாய அமைச்சின் செயலாளர் உரியவாறான பதிலை வழங்கவில்லை. இது இரசாயன உரமும் அல்ல, சேதன உரமும் அல்ல. மாறாக இது விசேட உரம் என்று அவர் கூறியிருக்கின்றார்.

'விசேட உரம்' என்ற வகை உலகின் வேறெந்த நாடுகளிலும் இல்லை. இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்டிருப்பது 'இரசாயன உரம்' என்று கூறமுடியாத நிலையில் அமைச்சின் அதிகாரிகள் இருக்கின்றனர்.

அரசாங்கம் அவர்களது வாய்களை அடைத்திருக்கின்றது. உரம் மற்றும் கிருமிநாசினிகள் தொடர்பில் விவசாயிகளுக்கு எதுவும் தெரியாது என்று நினைத்துக் கொண்டு அரசாங்கம் பல்வேறு கருத்துக்களை வெளியிடுகின்றது.

மறுபுறம் அரசாங்கத்தின் பங்காளிகளான உதய கம்மன்பில, விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார ஆகியோரின் தற்போதைய நிலை கவலைக்கிடமானதாக மாறியிருக்கின்றது.

ஜனாதிபதித் தேர்தலில் 69 இலட்சம் மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக இன, மத வாதத்தைத்தூண்டி பொய்யான பிரசாரங்களில் ஈடுபட்ட அவர்கள் இப்போது குறைந்தபட்சம் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தையை நடத்துவதற்குக்கூட இயலாத நிலையிலிருக்கின்றார்கள் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment