அரசாங்கத்தின் செயற்பாடுகளால் பலம் வாய்ந்த சர்வதேச வல்லரசுகளின் 'ஏல விற்பனை நிலையமாக' எமது நாடு மாற்றப்பட்டிருக்கின்றது - எதிர்க்கட்சித் தலைவர் சஜித் - News View

About Us

About Us

Breaking

Thursday, October 7, 2021

அரசாங்கத்தின் செயற்பாடுகளால் பலம் வாய்ந்த சர்வதேச வல்லரசுகளின் 'ஏல விற்பனை நிலையமாக' எமது நாடு மாற்றப்பட்டிருக்கின்றது - எதிர்க்கட்சித் தலைவர் சஜித்

(நா.தனுஜா)

அரசாங்கத்தின் செயற்பாடுகளால் பலம் வாய்ந்த சர்வதேச வல்லரசுகளின் 'ஏல விற்பனை நிலையமாக' எமது நாடு மாற்றப்பட்டிருக்கின்றது. இத்தகைய ஆபத்தான சூழ்நிலையில் இலங்கை மின்சார சபை, துறைமுக அதிகார சபை மற்றும் இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் உள்ளிட்ட அனைத்துக் கட்டமைப்புக்கள் சார்ந்த தொழிற்சங்கங்களும் வாராந்தம் ஒன்றுகூடி பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கான மத்திய நிலையமாக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தை மாற்றியமைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

நாட்டின் பலதரப்பட்ட துறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவிற்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று புதன்கிழமை கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் இலங்கை மின்சார சபை, துறைமுக அதிகார சபை மற்றும் இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஐக்கிய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு, ஐக்கிய தொழிற்சங்கம், இலங்கை சுதந்திர தொழிற்சங்கக் கூட்டமைப்பு மற்றும் சுயேட்சையான தொழிற்சங்க கூட்டமைப்பு ஆகியவற்றின் பிரதிநிதிகளும் ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தி ரஞ்சித் மத்தும பண்டார, அசோக அபேசிங்க, முஜிபுர் ரகுமான், துஷார இந்துனில், வடிவேல் சுரேஷ் மற்றும் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான மனோ கணேசன், பழனி திகாம்பரம், ரவூப் ஹக்கீம் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

அங்கு கருத்து வெளியிட்ட சஜித் பிரேமதாஸ மேலும் கூறியதாவது, இன்றளவில் மிகப்பலம் வாய்ந்த சர்வதேச நாடுகளின் 'ஏல விற்பனை நிலையமாக' எமது நாடு மாறியிருக்கின்றது. நாட்டின் தேசிய மற்றும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த சொத்துக்கள் அனைத்தையும் அரசாங்கம் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்து வருகின்றது.

சர்வதேச நாடுகளுடனான அரசாங்கத்தின் இரகசிய ஒப்பந்தங்களால், தற்போது இலங்கை பாரிய அச்சுறுத்தலுக்கு முகங்கொடுத்திருக்கின்றது.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் வாராந்தம் அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து தொழிற்சங்கப் பிரச்சினைகள் குறித்த கலந்துரையாடல்களை முன்னெடுப்பதற்கான மத்திய நிலையமாக இந்த அலுவலகம் (எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம்) திகழ வேண்டும்.

அதுமாத்திரமன்றி எதிர்வரும் காலத்தில் ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கம் அமைத்ததன் பின்னர் நாட்டின் தேசிய மற்றும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த சொத்துக்கள் தொடர்பில் தீர்மானங்களை மேற்கொள்ளும்போது அதனுடன் சம்பந்தப்பட்ட அனைத்துத் தொழிற்சங்கங்களுடனும் கலந்துரையாடியதன் பின்னரே இறுதித்தீர்மானம் எடுக்கப்படும் என்று எழுத்து மூலம் உறுதியளிக்கின்றேன் என்று குறிப்பிட்டார்.

மேலும் இதன்போது தொழிற்சங்கங்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் தொடர்பிலும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment