பெயர் வெளிவந்திருக்கும் அரசியல்வாதியின் கணக்கு சம்பந்தமாக அரசாங்கத்தின் நிலைப்பாட்டை நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும் - விஜித்த ஹேரத் - News View

Breaking

Tuesday, October 5, 2021

பெயர் வெளிவந்திருக்கும் அரசியல்வாதியின் கணக்கு சம்பந்தமாக அரசாங்கத்தின் நிலைப்பாட்டை நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும் - விஜித்த ஹேரத்

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

பண்டோரா ஆவணத்தில் பெயர் வெளிவந்திருக்கும் அரசியல்வாதியின் பெயரில் இருக்கும் கணக்கு சம்பந்தமாக அரசாங்கத்தின் நிலைப்பாட்டை நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும். அத்துடன் பிழையான பொருளாதார கொள்கையே நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைவதற்கு காரணமாகும் என தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற இறைவரி, நிதி கட்டளைகள் கீழ் (திருத்த) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், மத்திய வங்கியின் அறிக்கையின் பிரகாரம் நாட்டின் பெரும்பாலான மக்கள் நாளொன்றுக்கு 2 டொலர்களுக்கும் குறைவாகவே சம்பாதிக்கின்றனர். பெரும்பாளான மக்கள் அன்றாட செலவை ஈட்டிக்கொள்ள முடியாமல் இருக்கின்றனர்.

ஆனால் இவ்வாறான நிலையில் நாட்டில் தனவந்தர்கள் சிலர் கோடிக்கணக்கான கறுப்பு பணத்தில் பல்வேறு வியாபாரங்களில் ஈடுபட்டு வருகின்றார்கள். பென்டோரா ஆவணம் இதனை உறுதிப்படுத்தி இருக்கின்றது.

மேலும் பென்டோரா ஆவணத்தில் இதற்கு முன்னர் பல்வேறு தரப்பினரின் பெயர்கள் வெளிவந்திருக்கின்றன. ஆனால் இந்த முறைதான் முதல் தடவையாக அரசியல்வாதி ஒருவரின் பெயர் வெளிவந்திருக்கின்றது.

நிருபமா ராஜபக்ஷ் மற்றும் திருகுமார் நாடேசன் ஆகியோரின் பெயரில் இருக்கும் நிறுவனம் தொடர்பில் அரசாங்கம் நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும். இவர்களின் வங்கி கணக்குக்கு எந்த காலப்பகுதியில் இருந்து பணம் அனுப்பப்பட்டது? இந்த கணக்கு தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன?

அத்துடன் பணம் பரிமாற்று சட்ட மூலம் அனுமதிக்கப்பட்ட பின்னர் எந்தளவு பணம் அந்த கணக்குக்கு அனுப்பப்பட்டது என்பது தொடர்பான விடயங்களை அரசாங்கம் நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment