கேஸ் விநியோக உரிமையை அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்குவதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு : தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் எனவும் சுட்டிக்காட்டு - News View

About Us

About Us

Breaking

Wednesday, October 6, 2021

கேஸ் விநியோக உரிமையை அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்குவதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு : தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் எனவும் சுட்டிக்காட்டு

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

கெரவலப்பிட்டிய கேஸ் உற்பத்தி நிலையத்தின் கேஸ் விநியோக உரிமையை அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்குவதற்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பை சபையில் வெளியிட்டனர். இவ்வாறு வெளிநாட்டு கம்பனிக்கு விநியோகிக்கும் அதிகாரத்தை வழங்குவது தேசிய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக அமையும் எனவும் சுட்டிக்காட்டினர்.

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற பெற்றோலிய வளங்கள் சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டனர்.

எதிர்க்கட்சி உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவிக்கையில், கெரவலப்பிடிய கேஸ் உற்பத்தி நிலையத்தின் 40 வீத பங்கை அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்கியதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்டிருக்கும் ஒப்பந்தத்தில் நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய பல விடயங்கள் மறைக்கப்பட்டிருக்கின்றன.

குறிப்பாக கேஸ் விநியோகிக்கும் அதிகாரத்தை பூரணமாக அந்த நிறுவனத்துக்கு வழங்கி இருப்பது பயங்கரமான விடயமாகும். எந்தவோரு நாடும் தனது எரிபொருள், காஸ் விநியோக அதிகாரத்தை வெளிநாடுகளுக்கு வழங்குவதில்லை.

நேபாள நாட்டில் இடம்பெற்ற சம்பவம் எமக்கு சிறந்த உதாரணமாகும். நேபாளில் எரிபொருள் விநியோகிப்பது இந்தியா. அண்மையில் இந்தியா எரிபொருள் விநியோகத்தை மட்டுப்படுத்தி இருந்தது அதனால் நேபாளில் வாகனம் ஓட முடியாத நிலைமை ஏற்பட்டது. அந்த நிலைமை எமது நாட்டிலும் இடம்பெற விரும்புகின்றதா?

மேலும் அமெரிக்க நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்டிருக்கும் ஒப்பந்தம் 5 வருடங்களுக்கு என தெரிவித்தாலும் 5 வருடத்தில் முடிவடைவதில்லை. அது தொடந்து நீடிக்கப்பட்டுக் கொண்டிருக்கும். அத்துடன் இந்த ஒப்பந்தம் காரணமாக மாத்திரம் ஆயிரம் டொலர் மில்லியனுக்கும் அதிகம் எமக்கு நட்டம் ஏற்பட்டிருக்கின்றது.

அதேபோன்று அந்த நிறுவனத்தின் காஸ் கொள்ளளவை பாதுகாத்து வைத்துக் கொள்ள அந்த நிறுவனத்துக்கு 5 வருடத்துக்கு 253 டொலர் மில்லியன் இணங்கி இருக்கின்றது.

எனவே நாட்டில் டொலருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் இந்தளவு டொலர்களை வெளிநாடுகளுக்கு வழங்குவதன் மூலம் மேலும் பொருளாதார நெருக்கடி ஏற்படும் நிலை ஏற்படுகின்றது.

அத்துடன் இந்த ஒப்பந்தத்தில் இன்னும் பல விடயங்கள் மறைக்கப்பட்டிருக்கின்றன. அந்த விடயங்கள் அனைத்தும் நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாகும் என்றார்.

மனுஷ நாணயக்கார குறிப்பிடுகையில், முதலீடுகளுக்கு நாங்கள் எதிர்ப்பு இல்லை. நாட்டுக்கு நன்மை கிடைக்கக் கூடிய எந்த முதலீட்டுக்கும் நாங்கள் ஆதரவளிப்போம். ஆனால் தற்போது கெரவலப்பிட்டி காஸ் விநியோக அதிகாரத்தை அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்கியிருப்பதால் நாட்டுக்கு பாதிப்பு மாத்திரமல்ல தேசிய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாகும்.

அத்துடன் இந்த ஒப்பந்தம் அமைச்சரவைக்கும் தெரியாமலே மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. அதனால்தான் நாங்கள் இந்த ஒப்பந்தத்தை எதிர்க்கின்றோம் என்றார்.

கபீர் ஹாசிம் தெரிவிக்கையில், அமெரிக்க நிறுவனத்துடன் மேற்கொண்டிருக்கும் ஒப்பந்தத்தின் பிரகாரம், எமக்கு தேவைக்கு அப்பாலும் காஸை அந்த நிறுவனத்திடம் பெற்றுக் கொள்ள வேண்டும். அதன் காரணமாக எமது கோடிக்கணக்கான நிதி வீணாக விரயமாகும் அபாயம் இருக்கின்றது.

அரசாங்கம் இவ்வாறு இந்த நிறுவனத்துக்கு காஸ் விநியோகிக்கும் அதிகாரத்தை வழங்குவதன் மூலம் பாரிய மோசடியை அரசாங்கம் செய்திருக்கின்றது. இந்த மோசடி நாட்டில் இடம்பெற்ற பிணைமுறி, சீனி மோசடிகளை விட பாரிய மோசடியாகும் என்றார்.

No comments:

Post a Comment