டெல்டா போன்ற புதிய பிறழ்வுகள் இனங்காணப்பட்டால் அபாய நிலைமையை ஏற்படுத்தும் - வைத்திய அதிகாரி ருவன் விஜேமுனி - News View

About Us

About Us

Breaking

Monday, October 11, 2021

டெல்டா போன்ற புதிய பிறழ்வுகள் இனங்காணப்பட்டால் அபாய நிலைமையை ஏற்படுத்தும் - வைத்திய அதிகாரி ருவன் விஜேமுனி

(எம்.மனோசித்ரா)

டெல்டாவைப் போன்று புதிய பிறழ்வுகள் இனங்காணப்பட்டால் அது பரவும் வேகம் அதிகமாகக் காணப்படும். இது பாரதூரமான அபாய நிலைமையை ஏற்படுத்தும். எனவே அடுத்த இரு வருடங்களுக்காவது புதிய பொதுமைப்படுத்தலின் கீழ் அடிப்படை சுகாதார விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டியது அத்தியாவசியமானதாகும் என்று கொழும்பு மாநகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி ருவன் விஜேமுனி தெரிவித்தார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், நாட்டில் கொவிட் பரவல் ஆரம்பித்த நாள் முதல் அதாவது கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் இதுவரையில் கொழும்பில் மாத்திரம் 25,833 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதோடு, இவர்களில் 1,098 பேர் உயிரிழந்துள்ளனர். இது மொத்த எண்ணிக்கையின் அடிப்படையில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 7 சதவீதமும், மரணங்களின் எண்ணிக்கை 5 சதவீதமுமாகும்.

கொழும்பில் 30 வயதுக்கு மேற்பட்ட சனத் தொகையில் 92 சதவீதமானோருக்கு முதற்கட்ட தடுப்பூசியும், 65 சதவீதமானோருக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசியும் வழங்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி வழங்கல் மற்றும் போக்கு வரத்து கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த ஆகஸ்ட் மாதத்தில் காணப்பட்டதை விட தற்போது கொவிட் பரவல் நிலைமை குறைவடைந்துள்ளது.

ஆனால் கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட கண்காணிப்புக்களின் போது கோட்டை, புறக்கோட்டை, முதலாம் மற்றும் இரண்டாம் குறுக்குத் தெரு ஆகிய சில பகுதிகளில் அதிக மக்கள் கூட்டம் காணப்படுவதையும் , அவர்களின் பலர் முகக்கவசம் கூட அணியாமல் இருப்பதையும் அவதானிகக் கூடியதாகவுள்ளது. தடுப்பூசி பெற்றுக் கொண்டுள்ளதால் மாத்திரம் பாதுகாப்பு பெற முடியும் என்று எண்ணுவது தவறாகும்.

டெல்டாவைப் போன்று புதிய பிறழ்வுகள் இனங்காணப்பட்டால் அது பரவும் வேகம் அதிகமாகக் காணப்படும். இது பாரதூரமான அபாய நிலைமையை ஏற்படுத்தும்.

எனவே அடுத்த இரு வருடங்களுக்காவது புதிய பொதுமைப்படுத்தலின் கீழ் அடிப்படை சுகாதார விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டியது அத்தியாவசியமானதாகும் என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment