காலி முகத்திடலில் பகிரங்க விவாதத்திற்கு வருமாறு உதய கம்மன்பிலவுக்கு அழைப்பு விடுத்தார் கபீர் ஹாசீம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 5, 2021

காலி முகத்திடலில் பகிரங்க விவாதத்திற்கு வருமாறு உதய கம்மன்பிலவுக்கு அழைப்பு விடுத்தார் கபீர் ஹாசீம்

(நா.தனுஜா)

திருகோணமலை எண்ணெய் குதங்கள் கடந்த அரசாங்கத்தினால் இந்தியாவிற்கு நிரந்தரமாக வழங்கப்பட்டு விட்டதாக அமைச்சர் உதய கம்மன்பில வெளியிட்டுள்ள கருத்தில் எவ்வித உண்மையும் இல்லை. இது குறித்து என்னுடன் காலி முகத்திடலில் பகிரங்க விவாதத்திற்கு வருமாறு அவருக்கு அழைப்பு விடுக்கின்றேன். அவர் கூறுகின்ற இந்தக் கருத்தில் எவ்வித உண்மையும் இல்லை என்பதை அங்கு நிரூபிப்பதற்குத் தயாராக இருக்கின்றேன் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசீம் அழைப்பு விடுத்துள்ளார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக் காரியாலயத்தில் செவ்வாய்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது, அமைச்சர் உதய கம்மன்பில இரு வகையான முகங்களை கொண்டிருப்பதுடன், அதில் மிகவும் நல்லவரைப் போன்ற சாந்தமான முகத்தை மாத்திரமே பொதுமக்களுக்கு காண்பிக்கின்றார்.

ஓமானிடம் இருந்து 3.5 பில்லியன் டொலர்கள் கடன் பெறுவதாகக் கூறிக்கொண்டு, மன்னாரின் எரிபொருள் தொகுதி இரண்டை ஓமானுக்கு வழங்குவதற்கு அரசாங்கம் திட்டமிடுகின்றதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது பற்றிய செய்தியொன்று அரசாங்கத்திற்குச் சொந்தமான பத்திரிகையில் வெளியாகியுள்ளது.

எமது நாட்டுக்கு உரித்துடைய வளத்தை பிறிதொரு நாட்டிற்கு வழங்குவதற்கான அதிகாரம் அவர்களுக்கு இருக்கின்றதா? இது குறித்து பாராளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டதா? இத்தகைய செயற்பாடுகளில் ஈடுபடுகின்ற உதய கம்மன்பில, கடந்த அரசாங்கம் திருகோணமலை எண்ணெய் குதங்களை நிரந்தமாகவே இந்தியாவிற்கு வழங்கி விட்டதாக முற்றிலும் பொய்யான கருத்தொன்றைக் கூறுகின்றார்.

இது குறித்து என்னுடன் காலி முகத்திடலில் பகிரங்க விவாதத்திற்கு வருமாறு அவருக்கு அழைப்பு விடுக்கின்றேன். அவர் கூறுகின்ற இந்தக் கருத்தில் எவ்வித உண்மையும் இல்லை என்பதை அங்கு நிரூபிப்பதற்குத் தயாராக இருக்கின்றேன்.

2003 பெப்ரவரி மாதம் 7 ஆம் திகதி திருகோணமலைத் துறைமுகத்தின் மேற்தளத்தில் 13 எண்ணெய் குதங்களும் கீழ்த்தளத்தில் 85 எண்ணெய் குதங்களும் 35 வருட கால புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ஊடாக எல்.ஐ.ஓ.சி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.

போர் இடம்பெற்று வந்த அக்காலப்பகுதியில், விடுதலைப் புலிகள் அடிக்கடி இந்த எண்ணெய் தாங்கிகளை இலக்கு வைத்துத் தாக்குதல் நடாத்துவதால் அதனைப் பாதுகாத்துக் கொள்வதற்கு இவ்வொப்பந்தத்தின் ஊடாக இந்தியாவின் ஒத்துழைப்பை நாடுவதாகக் கூறி நியாயப்படுத்தப்பட்டது. ஆனால் இது இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் மாத்திரமேயாகும்.

இருப்பினும் இது குறித்த பொய்யான தகவல்களைக் கூறி, நாட்டின் தேசிய வளங்களைப் பிறநாடுகளுக்கு வழங்குவதற்குத் தாம் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளை மறைப்பதற்கு அரசாங்கம் முற்படுகின்றது.

அதுமாத்திரமன்றி இந்தியாவின் வெளியுறவுச் செயலர் இலங்கைக்கு வருகை தந்திருக்கின்றார். அதனூடாக மிகவும் சூட்சுமமான முறையில் திரைமறைவில் நாட்டின் சொத்துக்களை விற்பனை செய்யும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment