ஜனாதிபதி கோட்டாபய, பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான்கானை போன்று செயற்படுவாரா? : ஒரு சில பௌத்த மதகுருமார்கள் இனங்களுக்கிடையில் பிரச்சினைகளை ஏற்படுத்த முயற்சி - காவிந்த ஜயவர்தன - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 5, 2021

ஜனாதிபதி கோட்டாபய, பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான்கானை போன்று செயற்படுவாரா? : ஒரு சில பௌத்த மதகுருமார்கள் இனங்களுக்கிடையில் பிரச்சினைகளை ஏற்படுத்த முயற்சி - காவிந்த ஜயவர்தன

(இராஜதுரை ஹஷான்)

பொன்டோரா பேப்பர்ஸ் ஆவணத்தில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள முன்னாள் பிரதியமைச்சர் நிருபமா ராஜபக்ஷ தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள தேசிய இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ய தீர்மானித்துள்ளோம். ஒரு நாடு - ஒரு சட்டம் என்று குறிப்பிட்டுக் கொண்டு ஆட்சிக்கு வந்த ராஜபக்ஷர்கள் இவ்விடயத்தை எவ்வாறு கையாள்வார்கள் என்பதை நாட்டு மக்கள் அறிந்துகொள்ள வேண்டும். முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான்கானை போன்று செயற்படுவாரா? என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், உலக நாடுகளின் அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் முறைகேடான வகையில் கோடிக்கணக்கான சொத்துக்களை பிற நாடுகளில் முதலீடு செய்துள்ள ஆவணங்களை பன்டோரா பேப்பர்ஸ் வெளிப்படுத்தியுள்ளது. இது உலகம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பன்டோரா பேப்பர்ஸ் ஆவணத்தில் முன்னாள் பிரதியமைச்சர் நிருபமா ராஜபக்ஷ முறையற்ற வகையில் வெளிநாடுகளில் கோடிக்கணக்கான சொத்துக்களை முதலீடு செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பில் முறையான விசாரணைகளை தேசிய இலஞ்ச ஊழல் ஆணைக்குழு முன்னெடுக்க வேண்டும் என்பதற்காக முறைப்பாடு செய்ய தீர்மானித்துள்ளோம்.

பாக்கிஸ்தான் நாட்டு பிரதமர் இம்ரான்கானின் அமைச்சரவையில் உள்ளவர்களின் பெயரும் பன்டோரா பேப்பர்ஸ் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இவ்விடயம் குறித்து முறையான துரிதகர விசாரணைகளை முன்னெடுக்குமாறு பிரதமர் இம்ரான்கான் உரிய தரப்பினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளதை அறிய முடிகிறது.

பன்டோரா பேப்பர்ஸ் அறிக்கையில் முன்னாள் பிரதியமைச்சர் நிருபமா ராஜபக்ஷவின் பெயர் குறிப்பிட்டுள்ளதை ஆட்சிக்கு வந்த ராஜபக்ஷர்கள் எவ்வாறு கையாள்வார்கள் என்பதை நாட்டு மக்கள் உன்னிப்பாக அவதானித்துக் கொள்ள வேண்டும்.

ராஜபக்ஷர்களின் ஆட்சி நிர்வாகத்தை மக்கள் வெறுக்க ஆரம்பிக்கும்போது நாட்டில் இனவாத முரண்பாடுகளும், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்ற நிலைப்பாடும் திட்டமிட்ட வகையில் தோற்றுவிக்கப்படும். தற்போதும் அவ்வாறான தன்மையே காணப்படுகிறது.

ஒரு சில பௌத்த மதகுருமார்கள் இனங்களுக்கிடையில் தேவையில்லாத பிரச்சினைகளை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். வெறுக்கத்தக்க கருத்துக்கள் ஏதாவதொரு வழியில் இன நல்லிணக்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். ஆகவே நாட்டு மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment