நிருபமா ராஜபக்ஷ, தொழிலதிபர் நடேசன் தொடர்பில் பிரேமதாஸ மற்றும் சந்திரிக்காவிடமே கேட்க வேண்டும் - நாமல் ராஜபக்ஷ - News View

About Us

About Us

Breaking

Thursday, October 7, 2021

நிருபமா ராஜபக்ஷ, தொழிலதிபர் நடேசன் தொடர்பில் பிரேமதாஸ மற்றும் சந்திரிக்காவிடமே கேட்க வேண்டும் - நாமல் ராஜபக்ஷ

(இராஜதுரை ஹஷான்)

பண்டோரா பேப்பர்ஸ் ஆவணத்தில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள முன்னாள் பிரதியமைச்சர் நிருபமா ராஜபக்ஷ, தொழிலதிபர் திரு.நடேசன் ஆகியோர் முன்னெடுத்த வியாபாரங்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதிகளான ரணசிங்க பிரேமதாஸ, சந்திரிக்கா பண்டாரநாயக்க ஆகியோரிடம் வினவ வேண்டும். என விளையாட்டுத்துறை, இளைஞர் விவகாரம் மற்றும் அபிவிருத்தி மேற்பார்வை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், முன்னாள் பிரதியமைச்சர் நிருபமா ராஜபக்ஷ எனது உறவு சகோதரி, அதேபோல் அரசியல் ரீதியில் அவர் கடந்த காலங்களில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அணியினருடன் இருந்தார். 

உறவு முறை வேறு, அரசியல்வேறு, இவர் திரு.நடேசன் என்பவரை திருமணம் செய்துள்ளார். திருமணத்தின் ஊடாக கிடைக்கப் பெற்ற வளங்கள் தொடர்பில் நாம் என்ன செய்ய முடியும்.

உறவுமுறை காணப்பட்டாலும் இவர்கள் நிதி சேகரித்த வியாபாரங்களை 1990 மற்றும் 1998ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் முன்னெடுத்தார்கள் என குறிப்பிடப்படுகிறது. ஆதனால் அக்காலக்கட்டத்தில் ஆட்சியில் இருந்த முன்னாள் ஜனாதிபதிகளான ரணசிங்க பிரேமதாஸ, சந்திரிக்கா பண்டாரநாயக்க ஆகியோரிடமே வினவ வேண்டும்.

சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள பண்டோரா அறிக்கையில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள இவ்விருவர் தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொண்டு ஒரு மாத காலத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தேசிய இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு ஆலோசனை வழங்கியுள்ளார் என்றார்.

No comments:

Post a Comment