மட்டக்களப்பு மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதனால் தொற்றாளர்கள், இறப்பு வீதம் குறைவு - டாக்டர் நா.மயூரன் - News View

Breaking

Tuesday, October 5, 2021

மட்டக்களப்பு மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதனால் தொற்றாளர்கள், இறப்பு வீதம் குறைவு - டாக்டர் நா.மயூரன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுவதாகவும் 92 வீதமானவர்கள் முதலாவது தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டுள்ளதுடன் 85 வீதமானவர்கள் இரண்டாவது தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் நா.மயூரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 29 கொரனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதுடன் எந்தவித மரணங்களும் இடம்பெறவில்லையெனவும் இதுவரையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 336 மரணங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் முடக்கத்திற்கு பின்னர் புதிய தொற்றாளர்கள் வெகுவாக குறைந்து வருவதாகவும் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

பொதுமக்கள் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி செயற்படுவதன் மூலமே மீண்டும் ஒரு கொத்தனி உருவாவதை தடுக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

தடுப்பூசி செலுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதனால் புதிய தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதுடன் இறப்பு வீதமும் குறைந்துள்ளதாகவும் அனைவரையும் தடுப்பூசி பெற்றுக் கொள்வது அவசியம் எனவும் தெரிவித்தார்.

20 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்குமாறு தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் அருகில் உள்ள வைத்தியசாலைகளிலோ, சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திலோ தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ளுமாறும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு பைசர் தடுப்பூசிகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் இவை 12 தொடக்கம் 19 வயதுக்குட்பட்ட விசேட தேவையுடைய பிள்ளைகளுக்கும் கிளினிக் சென்று வரும் சிறுவர்களுக்கும் செலுத்தப்பட்டு வருவதாகவும் அவ்வாறானவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை மற்றும் ஆதார வைத்தியசாலைகளில் இந்த தடுப்பூசிகளை உரியவர்கள் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment