மட்டக்களப்பில் இரு இளைஞர்களை தாக்கிய பொலிஸ் அதிகாரி பணி இடைநிறுத்தம் : இனவாத ரீதியான கோணத்தில் அணுகுவதை நிறுத்திக் கொள்ளவும் - முழு விபரம் இதோ ! - News View

Breaking

Saturday, October 23, 2021

மட்டக்களப்பில் இரு இளைஞர்களை தாக்கிய பொலிஸ் அதிகாரி பணி இடைநிறுத்தம் : இனவாத ரீதியான கோணத்தில் அணுகுவதை நிறுத்திக் கொள்ளவும் - முழு விபரம் இதோ !

(நா.தனுஜா)

மட்டக்களப்பு, ஏறாவூர் பகுதியில் இரு இளைஞர்கள் மிக மோசமாகத் தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் கான்ஸ்டபிளை உடனடியாகப் பணியிலிருந்து இடைநிறுத்தியிருப்பதுடன் இது குறித்த மேலதிக விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் சில தரப்பினர் இச்சம்பவத்தை இனவாத அடிப்படையிலான கோணத்தில் அணுகி, சர்ச்சைகளைத் தோற்றுவிக்க முயல்வதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

மட்டக்களப்பு, ஏறாவூர் பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்கள் நேற்று வெள்ளிக்கிழமை இரவு ஏறாவூர் பொலிஸ் நிலைய வீதிப் போக்கு வரத்து பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரால் வீதியில் வைத்து மிக மோசமாகத் தாக்கப்படும் காணொளியொன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பல்வேறு சர்ச்சைகளைத் தோற்றுவித்துள்ளது.

மேற்படி காணொளி 'மட்டக்களப்பில் பொலிஸ் அராஜகம் தொடர்கின்றது. அமைச்சர் சரத் வீரசேகர அமைதிகாக்கிறார்' என்ற வசனங்களுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனால் அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் நேற்று இரவு 7.30 மணிக்குப் பதிவேற்றம் செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அந்தக் காணொளி சமூக வலைத்தளங்களில் மிக வேகமாகப் பரவிய நிலையில், அரசியல்வாதிகள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், சமூக வலைத்தளப் பயனர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் குறித்த பொலிஸ் கான்ஸ்டபிளின் நடத்தை குறித்துத் தமது கடும் கண்டனங்களை வெளிப்படுத்தினர்.

இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவிடம் தொடர்புகொண்டு கேட்டபோது அவர் பின்வருமாறு கூறினார்.

'மட்டக்களப்பு, ஏறாவூர் பகுதியில் இடம்பெற்ற குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் கான்ஸ்டபிள் இன்று காலை பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டிருப்பதுடன் இது பற்றிய மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அப்பகுதியில் நேற்று வீதி விபத்துச் சம்பவமொன்று இடம்பெற்றிருந்த நிலையில், குறித்த பொலிஸ் அதிகாரி அளவு நாடாவைப் பயன்படுத்தி சம்பவ இடத்தை அளவிட்டுக் கொண்டிருந்தபோது மேற்படி இரண்டு இளைஞர்களும் மோட்டார் சைக்கிளில் மிக வேகமாக வந்ததுடன், அளவு நாடாவையும் இழுத்தவாறு (மோட்டார் சைக்கிளில் சிக்குண்டு இழுத்தவாறு) அவ்விடத்தைக் கடந்து சென்றனர். பின்னர் அந்த பொலிஸ் கான்ஸ்டபிள் அவர்களைத் துரத்திச் சென்று நிறுத்தியிருக்கின்றார்.

இருப்பினும் காணொளியில் பதிவாகியிருப்பதைப் போன்று அந்த இளைஞர்களை அவ்வாறு தாக்குவதற்கான எவ்வித உரிமையும் அதிகாரமும் குறித்த பொலிஸ் அதிகாரிக்கு இல்லை என்பதுடன் அத்தகைய நடத்தையை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளவும் முடியாது. எனவேதான் அவர் உடனடியாகப் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கின்றார்.

அதுமாத்திரமன்றி தாக்குதலுக்குள்ளான இரு இளைஞர்களையும் நேரில் சென்று பார்வையிட்டு, சம்பவம் தொடர்பிலும் அவர்களது நிலைகுறித்தும் கேட்டறிவதற்கு அப்பிரதேசப் பொலிஸ் நிலையத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என்று தெரிவித்தார்.

அதேவேளை இச்சம்பவத்தை சில தரப்பினர் இனவாத ரீதியான கோணத்தில் அணுகுவதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திய அமைச்சர் சரத் வீரசேகர, 'தாக்கப்பட்டவர்கள் சிறுபான்மையினத்தைச் சேர்ந்தவர்கள் என்பதாலும் அவர்களைத் தாக்கிய பொலிஸ் கான்ஸ்டபிள் பெரும்பான்மையினத்தைச் சேர்ந்தவர் என்பதாலும் இச்சம்பவத்தை இனவாத அடிப்படையில் அணுகுவது தவறாகும்.

ஏனெனில் இத்தகைய சந்தர்ப்பமொன்றில் தெற்கிலும் அந்த பொலிஸ் கான்ஸ்டபிள் மேற்கண்டவாறான நடத்தையை வெளிப்படுத்தியிருக்கக் கூடிய வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.

ஆகவே நாட்டின் எந்தப் பகுதியிலானாலும் இவ்வாறான நடத்தையை ஏற்றுக் கொள்ள முடியாது எனினும் அதேவேளை, இதனை இனவாதமாகப் பார்ப்பதும் தவறாகும்' என்றும் சுட்டிக்காட்டினார்.

மேலும் இச்சம்பவம் தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், 'எந்தவொரு அராஜகச் சம்பவங்களும் ஏற்றுக் கொள்ளப்பட முடியாதவை என்பதுடன் அவை பெரிதும் விசனத்தைத் தோற்றுவிக்கின்றன. இது குறித்து பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்.

அதேவேளை இச்சம்பவத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்து ஓர் ஆரோக்கியமான எதிர்க்கட்சியின் பணியைச் செய்யும் சாணக்கியனுக்கும் நன்றி கூற விரும்புகின்றேன். நாமனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவதனூடாக இத்தகைய சம்பவங்கள் இடம்பெறுவதைத் தடுப்போம்' என்று குறிப்பிட்டுள்ளார்.

அதுமாத்திரமன்றி பொலிஸ் காவலின் கீழ் இடம்பெறும் சித்திரவதைகள் மற்றும் பொலிஸ் அராஜக சம்பவங்கள் குறித்துத் தொடர்ச்சியாகக் குரலெழுப்பி வருகின்ற சட்டத்தரணியும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும் நீலன் திருச்செல்வம் அறக்கட்டளையின் தலைவருமான அம்பிகா சற்குணநாதன், இச்சம்பவம் தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தின் ஊடாகக் கடுமையான கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கேசரி

No comments:

Post a Comment